குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 1 July 2018 6:10 AM GMT (Updated: 1 July 2018 6:10 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, கவுண்டமணியும், செந்திலும் சேர்ந்து ஒரு கட்சி தொடங்கினால் எப்படியிருக்கும்? (பாரதி சுந்தர், குறண்டி)

‘கரகாட்டக்காரன்’ படத்தில் வரும் வாழைப்பழ காமெடி போல் தமாசாக இருக்கும். ‘‘அதுதான் இது’’ என்ற வார்த்தைகள் பிரபலமாகும்!

***

ரஜினிகாந்த் ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்த ஸ்ரேயா என்ன ஆனார்? (ஜி.அறிவழகன், கன்னியாகுமரி)

கணவருடன் குடும்பம் நடத்தி வருவதாக ஸ்ரேயா சொல்கிறார். விரைவில் அவர் வெள்ளித்திரையில் மறுபிரவேசம் செய்வார் என்று சக நடிகைகள் சொல்கிறார்கள்!

***

குருவியாரே, அனுஷ்கா, திரிஷா ஆகிய இருவரில் யாருக்கு விரைவில் திருமணம் நடக்கும்? (ஆர்.தனபால், பெருங்களத்தூர்)

அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை வேட்டை மிக தீவிரமாக நடக்கிறது. திரிஷா, திருமணத்தை பற்றி நினைத்தே பார்ப்பதில்லையாம்!

***

‘‘எங்கள் தல அஜித்குமார் அரசியலுக்கு வருவாரா? (‘தீனா’ சுரேஷ், வெள்ளாளப்பட்டி)

வந்தால், நன்றாக இருக்கும்!

***

 குருவியாரே, லட்சுமிப்ரியா என்று ஒரு நடிகை இருந்தாரே...அவர் என்ன ஆனார்? (வி.சுப்பிரமணியம், குமாரபாளையம்)

காணாமல் போன நடிகைகள் பட்டியலில், அவருடைய பெயரும் இடம் பெற்று இருக்கிறது!

***

வில்லன் நடிகர் பொன்னம்பலம் என்ன செய்கிறார்? (ஷேக்மாபூப், சென்னை–11)

பொன்னம்பலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் இதுவரை நடித்த படங்களின் எண்ணிக்கை 500–ஐ தாண்டி விட்டது!

***

குருவியாரே, திரிஷா நடித்த ‘மோகினி’ படம் எப்போது திரைக்கு வர இருக்கிறது? (எம்.அரவிந்த் கிருஷ்ணா, பெரியகுளம்)

‘மோகினி’ படத்தை அடுத்த மாதம் (ஆகஸ்டு) திரைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது!

***

‘‘பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணம்...’’ என்ற பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது? அந்த பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (பழனியப்பன், மேட்டூர் அணை)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘பெரிய இடத்து பெண்.’ அதில் நடித்தவர்கள் எம்.ஜி.ஆர்–சரோஜாதேவி!

***

குருவியாரே, இயக்குனர் வின்சென்ட் செல்வா தயாரித்து டைரக்டு செய்திருக்கும் ‘பத்து செகன்ட் முத்தம்,’ காதல் படமா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

அது காதல் படம் அல்ல. குடும்பத்துடன் கண்டு களிப்பதற்கான ஜனரஞ்சகமான படம்!

***

மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் அதிக படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் யார்? (கே.பத்மநாபன், ராசிபுரம்)

நாகேஷ்! மனோரமாவும், நாகேசும் ஏறக்குறைய 100 படங்களில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்!

***

குருவியாரே, திரிஷாவுக்கு அவருடைய அம்மா உமா கிருஷ்ணன் மாதிரி...இன்னொரு கதாநாயகியின் பெயரையும், அவருடைய வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் அம்மாவையும் கூறமுடியுமா? (எஸ்.மாதவன், திருப்போரூர்)

மேனகா! மகள் கீர்த்தி சுரேசை பிரபல கதாநாயகியாக உயர வைத்த பெருமை இவரையே சேரும்!

***

‘அசுரவதம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் யார்? (ஆர்.பன்னீர்செல்வம், புதுச்சேரி)

அந்த வில்லன் நடிகரின் பெயர், வசுமித்ரா. இவர், பிரபல எழுத்தாளர். ‘கிடாரி’ படத்தில் துணை வில்லனாக நடித்த இவரை, ‘அசுரவதம்’ படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க வைத்தவர், சசிகுமார்!

***

குருவியாரே, கே.பாக்யராஜுடன், ‘இது நம்ம ஆளு,’ ரஜினிகாந்துடன், ‘சிவா,’ கமல்ஹாசனுடன், ‘என்னைப் போல் ஒருவன்’ உள்பட பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த ஷோபனாவை இப்போதெல்லாம் பெரிய திரையில் பார்க்க முடியவில்லையே...அவர் என்ன ஆனார்? (பி.சி.ராம்குமார், கரூர்)

ஷோபனா நடனப்பள்ளி நடத்தி வருகிறார். அவருடைய நடனப்பள்ளியில் ஏராளமான மாணவ–மாணவிகள் நடன பயிற்சி பெற்று வருகிறார்கள்!

***

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அம்ரிஷ் இதுவரை எத்தனை படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்? (எஸ்.ஆர்.ரவீந்தர், கோபிச்செட்டிப்பாளையம்)

‘நானே என்னுள் இல்லை,’ ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய 3 படங்களுக்கு அம்ரிஷ் இசையமைத்து இருக்கிறார். அடுத்து அவர் கைவசம் 7 புதிய படங்கள் உள்ளன!

***

குருவியாரே, ‘காலா’ படத்தின் மூலம் ரஜினிகாந்தின் மனைவி வேடத்தில் மறுபிரவேசம் செய்திருக்கும் ஈஸ்வரிராவ், இனியாவது தமிழ் பட உலகில் நீடித்து நிலைத்து நிற்பாரா? (டி.கோவிந்தராஜ், கோவூர்)

‘காலா’ படத்துக்குப்பின் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று ஈஸ்வரிராவ் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லையாம்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் லாரி டிரைவராக எத்தனை படங்களில் நடித்து இருந்தார்? ரிக்ஷாக்காரராக எத்தனை படங்களில் நடித்தார்? (ஏ.ஜெயசீலன், பர்கூர்)

‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு,’ ‘நீதி’ ஆகிய 2 படங்களில் லாரி டிரைவராகவும், ‘பாபு’ படத்தில் ரிக்ஷாக்காரராகவும் சிவாஜிகணேசன் நடித்து இருந்தார்!

***

குருவியாரே, மணிரத்னம் இயக்கி வந்த ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா? (இரா.செந்தமிழ் செல்வன், திருவேற்காடு)

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகள் தற்போது நடைபெறுகின்றன!

***

டாப்சியை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லையே...அவர் இப்போது எந்த மொழி படத்தில் நடித்து வருகிறார்? (என்.இசக்கிராஜா, திருக்கோவிலூர்)

டாப்சி, இந்தி படங்களில் நடித்து வருகிறார். அங்கே நிறைய சம்பளம் வாங்கி பழக்கப்பட்ட அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய படங்களில் நடிக்க தயங்குகிறாராம்!

***

குருவியாரே, நடிப்பு, நடனம், சண்டை ஆகிய மூன்றிலும் பிரஷாந்த், அருண் விஜய் ஆகிய இருவரும் சிறந்தவர்கள். இருப்பினும் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லையே...ஏன்? (பி.ஜெயராம், சென்னை–87)

திறமைசாலிகள் தோற்பதில்லை. எதற்கும் ஒரு காலம் உண்டு. அந்த பொற்காலம் வரும் வரை பிரஷாந்த், அருண் விஜய் ஆகிய இருவரும் பொறுமையுடன் காத்திருப்பார்களாம்!

***

‘காலா’ படத்தை அடுத்து பா.ரஞ்சித் டைரக்டு செய்யும் படம் எது? (எஸ்.மீனாட்சி சுந்தரம், மதுரை)

பா.ரஞ்சித் அடுத்து ஒரு இந்தி படத்தை இயக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது!

***

Next Story