மலையாள நடிகைகள் எதிர்ப்பு வலுக்கிறது திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்தது ரத்தாகுமா? செயற்குழுவில் ஆலோசனை


மலையாள நடிகைகள் எதிர்ப்பு வலுக்கிறது திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்தது ரத்தாகுமா? செயற்குழுவில் ஆலோசனை
x
தினத்தந்தி 3 July 2018 12:05 AM GMT (Updated: 3 July 2018 12:05 AM GMT)

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்தது கேரளாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

திலீப்பை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்ததை மலையாள நடிகைகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகையும் சங்கத்தில் இருந்து விலகினார்.

நடிகைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய நடிகர் சங்கம் திலீப்பை மீண்டும் சேர்த்து கடமையில் இருந்து தவறி விட்டது என்று அவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நடிகைகள் அமலா, ரஞ்சனி, சம்யுக்தா, கனி கஸ்துரி, சஜிதா, ஜாலி சிரஜத், திவ்ய பிரபா, சாந்தி பாலச்சந்திரன், திவ்யா கோபிநாத், அர்ச்சனா பத்மினி, அபிஜா சிவகலா, தர்ஷனா, சைலஜா, சுஜாதா ஆகிய மேலும் 14 நடிகைகள் திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

நடிகர் சங்க தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாகவும் புதிய குற்றச்சாட்டை கிளப்பி உள்ளனர். இதுகுறித்து நடிகை பத்மபிரியா கூறும்போது, நடிகர் சங்க தேர்தல் வெளிப்படை தன்மை இல்லாமல் நடந்தது. நடிகை பார்வதி இந்த தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரை மோகன்லால் ஆதரவாளர்கள் தேர்தலில் நிற்கவிடாமல் செய்து விட்டனர்.

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற விவரமும் தெரியவில்லை என்றார். கன்னட நடிகர் சங்கமும் திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்து உள்ளது. நீதிமன்றம் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு அளிப்பதற்கு முன்பு அவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது கண்டிக்கத்தக்கது. அவரை சங்கத்தில் சேர்த்த முடிவை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் விரைவில் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் திலீப் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று இடைவேளை பாபு கூறியுள்ளார். இதில் திலீப் சேர்க்கப்பட்ட முடிவை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று மலையாள பட உலகில் பேசப்படுகிறது. 

Next Story