சினிமா செய்திகள்

“ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் நடிக்க ஆசை” -ஹன்சிகா + "||" + The desire to act in the life story of Sridevi -Hansika

“ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் நடிக்க ஆசை” -ஹன்சிகா

“ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் நடிக்க ஆசை” -ஹன்சிகா
நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஹன்சிகா விருப்பம் தெரிவித்து உள்ளார்.
நடிகர், நடிகைகள் வாழ்க்கை படங்கள் சமீப காலமாக தயாராகி வருகின்றன. சில்க் சுமிதா வாழ்க்கை ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வந்தது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் தேசிய விருது பெற்றார். மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியானது.

இதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு பாராட்டுகள் குவிந்தன. பிரபல இந்தி நடிகரும் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்றவருமான சஞ்சய்தத் வாழ்க்கை சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது. மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல் மந்திரியுமான என்.டி.ராமராவ் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது.

என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது. சமீபத்தில் துபாய் நட்சத்திர ஓட்டலில் குழியலறை தொட்டியில் மூழ்கி இறந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாகிறது. இதில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது.

இந்த நிலையில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா விருப்பம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எனக்கு ஸ்ரீதேவியை மிகவும் பிடிக்கும். புலி படத்தில் இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது எனக்கு நிறைய அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொன்னார். அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம். என் வாழ்க்கைக்கு அவரைத்தான் முன்மாதிரியாக கருதுகிறேன். ஸ்ரீதேவி வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அவர் வாழ்க்கை கதையை யார் படமாக்கினாலும் அதில் நடிக்க தயார்.”

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.