கபில்தேவ் வாழ்க்கை படத்தில், ரன்வீர்சிங்


கபில்தேவ் வாழ்க்கை படத்தில், ரன்வீர்சிங்
x
தினத்தந்தி 5 July 2018 11:30 PM GMT (Updated: 5 July 2018 7:22 PM GMT)

கபில்தேவ் வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ரன்வீர்சிங்கை தேர்வு செய்துள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி வாழ்க்கை சினிமா படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கிறார்கள். இதுபோல் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் வாழ்க்கையையும் படமாக்க முயற்சிகள் நடந்தன. 

கபில்தேவ் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக விளங்கியவர். பேட்டிங், பவுலிங்கில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது தலைமையில்தான் முதன்முறையாக இந்தியா 1983–ல் உலக கோப்பையை வென்றது. இப்போதும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 

கபில்தேவ் வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது ரன்வீர்சிங்கை தேர்வு செய்துள்ளதாகவும், படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரன்வீர்சிங் இந்தி பட உலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக இருக்கிறார். பத்மாவத் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. 

பிரபல நடிகர் நவாஜுதீன் சித்திக்கும் இந்த படத்தில் நடிக்க தேர்வாகி உள்ளார். இவர் கபில்தேவின் பயிற்சியாளர் வேடத்தில் வருகிறார். இந்த படத்தை கபீர்கான் டைரக்டு செய்கிறார். விஷ்ணு இந்தீரி தயாரிக்கிறார். உலக கோப்பையை வென்ற வருடத்தை குறிக்கும் வகையில் படத்துக்கு ‘83’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 

கபில்தேவ் வாழ்க்கை கதை படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் ஆகியோர் வாழ்க்கையையும் படமாக்க முயற்சிகள் நடக்கின்றன.

Next Story