நான் ஆவலோடு எதிர்பார்த்த எம்.ஜி.ஆர்.


நான் ஆவலோடு எதிர்பார்த்த எம்.ஜி.ஆர்.
x
தினத்தந்தி 6 July 2018 7:55 AM GMT (Updated: 6 July 2018 7:55 AM GMT)

நம்முடைய வாழ்க்கையில் பல பெரிய மனிதர்களை, தூரத்தில் இருந்து பார்த்து, பிரமித்து, அவர்களை மானசீகக் குருவாகவும், இதய தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டு கொண்டாடுவோம்.

ஒரு கட்டத்தில் நம்முடைய மனம் கவர்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, அவருடன் நெருங்கிப் பழகும் போது, நாம் அதுவரை அவரைப் பற்றி நினைத்திருந்த கம்பீர பிம்பங்கள் எல்லாம் சுக்குநூறாக உடைந்து போகவும் வாய்ப்புண்டு. ஆனால், ஒரு சிலரிடம் மட்டும், நாம் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்ட நல்ல குணங்களும், எல்லோரும் போற்றக்கூடிய நாகரிகமும், பண்பாடும் நிறைந்து காணப்படும். அப்படிப்பட்டவர்களிடம் நம்முடைய மரியாதை மேலும் கூடி பிரம்மிப்பை உண்டாக்கும். அது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

‘ஒரு கவிஞனோ, ஒரு இலக்கியவாதியோ, ஒரு நாடக ஆசிரியரோ, ஒரு நடிகனோ, அவர்கள் படைக்கின்ற, உருவாக்குகின்ற, நடிக்கின்ற கதாபாத்திரங்களைப் போல் மற்றும் அவர்கள் உருவாக்குகின்ற காட்சிகளைப் போல், நிஜ வாழ்க்கையில் அவர்களால் வாழ்ந்து காட்ட முடியாது’ என்று சொன்னவர் கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ.

ஆனால் அவரது கருத்தை பொய்ப்பித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர். ‘நாடகத்திலும், திரைப்படங்களிலும் வேண்டுமானால், ராஜாவாக நடிக்கலாம். ஆனால் நிஜ வாழக்கையில் ராஜாவாக முடியாது’ என்று, எம்.ஜி.ஆரை விரும்பாதவர்கள் அன்றைக்குச் சொன்னார்கள். ஆனால் திரையிலும், நிஜத்திலும் நாட்டை ஆண்டவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.

மருதூர் மேலங்கத்து கோபாலமேனன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆரை, நான் முதன் முதலாக சந்தித்துப் பேசியது, அவரது ராமாபுரத்தில் உள்ள வீட்டில்தான். 9-11-1983 அன்று என்னுடைய திருமணம் நடைபெற இருந்தது. எம்.ஜி.ஆருக்கு திருமணப் பத்திரிகையைக் கொடுத்து, அவரை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்பது என்னுடைய பதினோரு வயதில் இருந்தே ஆரம்பமான நீண்டநாள், சிறுவயது கனவு. அந்தக் கனவை, என் விருப்பத்தை அன்றைக்கு அமைச்சராக இருந்த காளிமுத்துவிடம் தெரிவித்தேன். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் மகேந்திரன். எனது தந்தையின் உடன்பிறந்த மூத்த சகோதரியின் மகன்தான் இயக்குனர் மகேந்திரன். அதனால் அமைச்சர் காளிமுத்துவின் அறிமுகம் எனக்கு எளிதாகிவிட்டது.

காளிமுத்துவின் முதல் மனைவியான நிர்மலாவின் குடும்பம், எங்களுக்கு பல வருடங்கள் பழக்கமான குடும்பம். எனவே அமைச்சரோடு அறிமுகமானதுமே எங்களுக்கும் நெருக்கம் அதிகரித்துவிட்டது. இதையடுத்து காளிமுத்து, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்கு தேதியும், நேரமும் வாங்கிவிட்டார். குறிப்பிட்ட அந்த நாள் வந்ததும், அமைச்சர் காளிமுத்து, என்னை ராமாபுரம் தோட்டத்திற்கு வரச்சொன்னார்.

முதல்-அமைச்சர் வீட்டில் இருந்து என்னுடைய காரின் எண்ணை வாங்கிக்கொண்டார்கள். ராமாபுரம் நோக்கி நான் செல்லும் வழியில், கத்திப்பாரா சந்திப்பை கடந்தபோது, என் காரின் எண்ணை அங்கே நின்று கொண்டிருந்த போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த போலீசாரும் குறித்துக் கொண்டார்கள். அந்த நேரத்தில் என் மனதுக்குள் ஒரு படபடப்பு உண்டானது. என்னுடைய மாணவப் பருவத்தில் திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள வடமதுரை என்ற ஊரில், 1956-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த காமராஜரின் வருகைக்காக கடும் வெயிலில் காத்திருந்தோம். ஆனால் இன்று ஒரு முதல்-அமைச்சரை அவரது வீட்டிலேயே சந்திக்கப் போவதை நினைத்து என்னுடைய படபடப்பு இரட்டிப்பானது.

என்னுடன் எனது நீண்டகால நண்பர் நமச்சிவாயத்தையும் அழைத்துச் சென்றேன். ராமாபுரம் தோட்டத்தின் முன்பு உள்ள கேட்டில், அப்போது ஒரு கூர்கா வேலையில் இருந்தார். முகம் பார்க்கின்ற அளவிற்கு ஒரு சிறிய கதவு, அந்த வாசல் கதவில் அன்றைக்கு அமைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து காரையும், காரின் எண்ணையும், எங்களையும் நன்றாகப் பார்த்து விட்டு, எங்களை உள்ளே போக அனுமதித்தார். எங்களுக்கு முன்பாகவே காளிமுத்து வந்து தோட்டத்தில் இருந்தார். அன்று நிறைய கட்சித் தொண்டர்களும், அமைச்சர்களும், தொழிலதிபர்களும் அங்கு குழுமி யிருந்தனர்.

ஒரு பெரிய மாலை, தட்டில் பழங்கள், அதில் திருமண அழைப்பிதழ் என முறைப்படி எடுத்து வைத்து, முதல்-அமைச்சரின் அழைப்பிற்காக விருந்தினர்கள் அமரும் பகுதியில் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது. காளிமுத்துவுடன் நானும் எனது நண்பர் நமச்சிவாயமும் முதல்-அமைச்சர் அறைக்குள் நுழைந்தோம். திரைச்சீலையை விலக்கிக் கொண்டு, நாங்கள் முதல் அமைச்சரைப் பார்க்கும்போது, ஒரு சிலையைப் போல் நின்று எங்களைப் பார்த்து வரவேற்கும் விதமாக, கும்பிட்டுக் கொண்டு இருந்தார். நானும் எனது நண்பர் நமச்சிவாயமும் மாலையையும், பழத்தட்டையும் கையில் பிடித்துக்கொண்டிருந்ததால் உடனடியாக அவருக்கு வணக்கம் செலுத்த முடியவில்லை, எப்படியோ கஷ்டப்பட்டு ஒருவாராக வணங்கினோம்.

‘வணங்குவதிலும், வாழ்த்துவதிலும், முதல்வனாக இரு’ என்று, இஸ்லாத்தில் குறிப்பிட்டுள்ளபடி மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அந்த உயர்ந்த பண்பாட்டிற்கு அன்று முதல் நான் அடிமையானேன். அன்றிலிருந்து இன்றுவரை யாராக இருந்தாலும், நான் தான் எல்லோருக்கும் முதலில் வணக்கம் செலுத்துவேன்.

என்னிடம் இருந்து திருமண அழைப்பிதழை முதல்-அமைச்சர் வாங்கிய பிறகு எங்களை உட்காரச் சொன்னார். நாங்கள் உட்கார்ந்த பிறகுதான், அவரும் இருக்கையில் அமர்ந்தார். இந்த பண்பாட்டையும், நாம் பின்பற்ற வேண்டும் என்று என் உள் மனதில் வைத்துக்கொண்டேன். இதே பண்பாட்டை மதிப்பிற்குரிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரிடமும் நான் கண்டேன்.

நான் கொடுத்த பத்திரிகை முழுவதையும் படித்துப் பார்த்துவிட்டு ‘இண்டர்காமில்’ “நவம்பர் ஒன்பதாம் தேதி.. ராஜேஷ் இல்லத்திருமணம், இடம்: ஏவி.எம். ராஜேஸ்வரி மண்டபம் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று உதவியாளரிடம் கூறினார். அவருடைய வாயால், ராஜேஷ் இல்லத்திருமணம் என்று சொன்னது, இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

என்னுடைய திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழன் அமைச்சர் காளிமுத்து. திருமணத்தன்று தமிழக சட்டசபையில் அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த துரைமுருகனும், ரகுமான்கானும் நீண்ட நேரம் வரை உரையாற்றி, விவாதம் பண்ணினார்கள். எனவே, எனது திருமண வரவேற்பிற்கு முதலமைச்சர் வருவதற்கு காலதாமதம் ஆனது. அதனால், எனக்கு மாப்பிள்ளை தோழனாக இருக்கும் காளிமுத்து வருவதும் தாமதமானது. நான் அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்றைக்கு மயிலாப்பூரில் காவல்துறை உதவி கமிஷனராக பணிபுரிந்தவர் சாமிவேல். இவரும் இயக்குனர் மகேந்திரனும் காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதுமட்டுமின்றி, அதே கல்லூரியில் பணியாற்றிய என்னுடைய சித்தப்பாவின் மாணவர்தான் சாமிவேல். எனது திருமணம் நடந்த ஏவி.எம்.ராஜேஸ்வரி மண்டபம் உதவி கமிஷனர் சாமிவேல் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. எனவே அவர் முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவையும் எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் முதலமைச்சர், ராமாபுரம் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்த மேடைக்கு வந்த நடிகை விஜயகுமாரியும், அவரது மகன் ரவியும் கூட “முதலமைச்சர் புறப்பட்டு விட்டதாக ஜானு அக்கா (ஜானகி அம்மாள்) சொன்னதாகக் கூறினர். அப்போது மேடையில் நின்ற இயக்குனர் மகேந்திரன், ‘இவனுக்கு தன்னுடைய திருமணத்தை விட, எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வருவதுதான் அக்கறையாக இருக்கிறது’ என்று கிண்டல் செய்தார்.

ஒரு கட்டத்தில் உதவி கமிஷனர் சாமிவேல், என் காதருகில் வந்து “முதலமைச்சர் திருமணத்திற்கு வரமாட்டார். வேறு ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார்” என்றார்.

அந்த அதிர்ச்சியான செய்தியை என்னால் தாங்க முடியவில்லை. நான், சாதாரண மனநிலைக்கு திரும்புவதற்கு சற்று நேரம் பிடித்தது. உடனே மணப்பெண்ணாகிய என்னுடைய மனைவியிடம் எனது தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர். வருவார் என்றேன். அதன்படியே வந்தார்.

சட்டசபையிலிருந்து, காலதாமதமாக ராமாபுரம் வீட்டிற்குச் சென்ற முதல் அமைச்சர், உடைகளை மாற்றிக்கொண்டு ஏவி.எம். ராஜேஸ்வரி மண்டபத்திற்குத்தான் புறப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் அவர் வந்த கார்... கத்திப்பாராவை நெருங்கும்போது, சென்னையில் உள்ள ஒரு முக்கிய புள்ளியின் மரணச் செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. உடனே முதலமைச்சர், அண்ணன் ஜேப்பியர் அவர்களைத் தொடர்பு கொண்டு, “நான் ராஜேஷ் திருமணத்திற்கு செல்ல முடியாது. ஆகவே, நீ அங்கு சென்று, நான் முன் நின்று நிகழ்ச்சியை நடத்துவதுபோல, என்னுடைய இடத்தில் நின்று நடத்திவிட்டு வா” என்று அன்பு கட்டளையிட்டிருக்கிறார். அதன் படியே அண்ணன் ஜேப்பியர் வந்து என்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முன்னின்று சிறப்பாக நடத்தினார்.

சில ஆண்டுகள் கழித்து துரைமுருகன், ரகுமான்கான் இருவரையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தில், “என்னுடைய திருமணத்திற்கு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். வருவதாக இருந்தது. அவரை வரவிடாமல் செய்தவர்கள் நீங்கள் தான்” என்று, சட்டசபை விவாதத்தை பற்றி குறிப்பிட்டேன். அவர்கள் இருவரும் “அப்படியா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டுச் சிரித்தார்கள்.

எனது அனுபவத்தில் சிலர், திருமணப்பத்திரிகையை நேரடியாக வாங்க மாட்டார்கள். உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் தான் வாங்குவார்கள். அப்படியே வாங்கினாலும் திருமணத்திற்கு வரமாட்டார்கள். ஒரு வேளை அவர்கள் வர முடியாதபடி சூழ்நிலை அமைந்துவிட்டால், தனக்கு பதில் வேறு யாரையும் அனுப்பி வைக்கவும் மாட்டார்கள். தொலைபேசியில் கூட வரமுடியாததற்கான சரியான காரணத்தைக் கூற மாட்டார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில், மக்கள் திலகம் நடந்து கொண்ட விதத்தை இன்று நினைத்தாலும் அவரது உருவம் என் கண் முன்பாக இமயம் அளவிற்கு உயர்ந்து நிற்கும். இதுபோன்ற காரணங்களால்தான்.. அவர் நம்மைவிட்டுச் சென்று முப்பது ஆண்டுகள் கழித்தும் கூட அவரைப் பற்றி பேசுகிறோம், எழுதுகிறோம்.

அவர் ஒரு தனிப்பிறவி. இந்த மாமனிதர், பிறர் முன்னிலையில், பொது மேடைகளில், சட்டமன்றத்தில் என அனைத்து இடங்களிலும் நடந்து கொண்ட விதமும், பண்பாடும், நாகரிகமும் மிகவும் போற்றத்தக்கது. பிறருக்கு தான் உதவி செய்ததை அவர் எந்த இடத்திலும் கூறியது கிடையாது. அவர் உதவியைப் பெற்றவர்கள் பலரும், அந்த நன்றியை மறந்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தபோதும் கூட, அவர் தான் செய்த உதவியை ஒருபோதும் சொல்லிக்காட்டியதில்லை.

மனிதர்களுக்கு இயற்கையாக வரும் தும்மல், இருமல், விக்கல், ஏப்பம், கொட்டாவி போன்றவற்றை, அவர் பொது இடங்களில் செய்து யாரும் பார்த்தது இல்லை. சிலருக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தும் கண், காது, மூக்கு போன்ற இடங்களை துடைத்தோ, சுத்தம் செய்தோ கூட அவரை யாரும் கண்டதில்லை. உடலில் எந்த பாகத்தையும் சொரிந்தோ, உடலில் சோம்பல் முறித்தோ யாரும் பார்க்கவில்லை. ஏதோ.. வானத்தில் இருந்து பூமிக்கு வந்த தேவர்களைப் போல நடந்துகொள்வார். எத்தனை மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய சூழல் வந்தாலும், சிறுநீர் கழிக்கக்கூட செல்லாமல் அங்கேயே அமர்ந்திருப்பார்.

அவரைப் பற்றி எழுதுவதே எனக்குப் பெருமைதான்.

-தொடரும்

பூரிக்கிழங்கும்.. அல்வாவும்..

ஒருநாள் அண்ணன் நடிகர் திலகத்திடம், ‘எம்.ஜி.ஆரை எப்பொழுது முதல் முதலில் சந்தித்தீர்கள்?’ என்று கேட்டேன். இந்தக் கேள்வியை கேட்டவுடன், சிவாஜி அண்ணனின் முகம் மலர்ச்சி அடைந்தது. உடனே அவர் 1943-ம் ஆண்டு ராமச்சந்திரன் அண்ணனை யானை கவுனியில் தான் முதன் முதலில் சந்தித்தேன் என்றார். அப்போது அவர் குடும்பம் யானைக்கவுனியில் தான் இருந்தது. அப்பொழுது நாங்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து ராமச்சந்திரன் அண்ணனுடன் கேரம் போர்டு விளையாடுவோம்.

பொதுவாக மாலை வேளைகளில், அண்ணன் எங்களை எல்லாம் அழைத்துக் கொண்டு, மும்பை சேட்டுக் கடைக்குச் செல்வார். அங்கு பூரிக்கிழங்கு மற்றும் மசாலா பால் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். எப்பொழுதெல்லாம் இப்படி வாங்கிக் கொடுப்பாரோ அப்பொழுதெல்லாம் அவர்தான் காசும் கொடுப்பார். ஏனெனில் அவர்தான் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள், எங்கள் இருவருக்கும் பழக்கமான சில நாடக நடிகர்கள், ‘தினமும் ராமச்சந்திரன் அண்ணன் தான் காசு கொடுக்கிறார். இன்றைக்கு நமது காசில் அவருக்கு டிபன் வாங்கிக் கொடுப்போம்’ என்று முடிவு செய்து ராமச்சந்திரன் அண்ணனை வேறு ஒரு ஓட்டலுக்கு பந்தாவாக அழைத்தார்கள். அப்போது ராமச்சந்திரன் அண்ணன் ‘கணேசா! நீ எங்கேயேயும் போயிடாதே, நீயும் என்னுடன் வா’ என்று என்னையும் அழைத்துச் சென்றார்.

அந்த ஓட்டலில் சப்ளையர் வேலை பார்க்கும் ஒரு சிலர், நாடகம், சினிமா பார்க்கும் மோகம் உடையவர்களாக இருந்தனர். அழைத்துச் சென்ற நாடக நடிகர்கள், சப்ளையர்களுக்கு பாஸ்கள் கொடுத்து, நாடகம் பார்க்கச் செய்வது வழக்கம். இதற்கு கைமாறாக அந்த நடிகர்கள் சாப்பிட வரும்போதெல்லாம், முதலாளிக்கும் மற்ற சப்ளையர்களுக்கும் தெரியாமல், அல்வாவை இரண்டு பூரிகளுக்கும் நடுவே வைத்து, உருளைக் கிழங்கையும் சேர்த்து அமெரிக்க உளவுத்துரையாலும் கண்டுபிடிக்க முடியாதபடி தட்டில் வைத்து கொடுப்பது உண்டு.

அன்றைக்கு அந்த நாடக நடிகர்களோடு சென்ற எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் கூட அதேபோல் கொண்டு வந்து வைத்தார் ஒரு சர்வர்.

எம்.ஜி.ஆர். முதலில் பூரிக்கிழங்கை பிரித்துப் பார்க்கும் பொழுது அல்வா இருந்ததைக் கண்டு சர்வரை அழைத்து ‘ஏம்பா! நான் பூரிக்கிழங்கு மட்டும் தானே கேட்டேன். நீ என்ன? நான் கேட்காத அல்வாவையும் சேர்த்து வைத்திருக்கிறாயே’ என்றார். அப்படி கேட்டவுடன், எம்.ஜி.ஆரையும், என்னையும் அழைத்துச் சென்ற அந்த நாடக நடிகர்களைப் பார்த்து, அந்த சர்வர் திருதிருவென்று முழித்தார்.

அந்த நடிகர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரிடம் ரகசியமாக, ‘அண்ணே! இந்த அல்வாவின் விலை பில்லில் சேராது. இது சப்ளையர்களுக்கு நாங்கள் நாடகம் பார்க்க இலவசமாக பாஸ் கொடுப்பதற்காக, அவர்கள் கைமாறாக செய்யும் ஒரு விஷயம்’ என்றார்.

அதைக் கேட்டு மிகவும் கோபப்பட்ட எம்.ஜி.ஆர். என்னிடம் ‘கணேசா! உன்னுடைய பூரிக்குள்ளும் அல்வா இருக்கிறதா பார்’ என்றார்.

நானும் பார்த்து விட்டு ‘ஆமாண்னே இருக்கிறது’ என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர் சர்வரைப் பார்த்து, ‘மரியாதையாக எல்லா அல்வாவையும் எடுத்து விடு. இல்லையென்றால் முதலாளியிடம் சொல்லிவிடுவேன்’ என்றார். அதற்குள் ஒருசில நடிகர்கள் அல்வாவை தின்றுவிட்டார்கள்.

சர்வரோ கண்கலங்கி, ‘முதலாளியிடம் சொல்லிவிடாதீர்கள். என் வேலை போய்விடும்’ என்று கெஞ்சினார்.

‘அப்படியென்றால் நான் தான் இன்றைக்கு எல்லாருடைய பில்லுக்கும் காசு கொடுப்பேன்’ என்று எம்.ஜி.ஆர். சொன்னார்.

ஆனால் எங்களை அழைத்து வந்த நடிகர்களில் ஒருவர், ‘அண்ணே! உங்களை நாங்கதான் அழைத்து வந்தோம். பூரிக்கிழங்குக்கும், மற்றவைகளுக்கும் நாங்கள் காசு கொடுத்து விடுகிறோம். நீங்கள் வேண்டுமானால் அல்வாவிற்கு மட்டும் காசு கொடுங்கள்’ என்று ஒருவாராக பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். எம்.ஜி.ஆரும் சமாதானம் ஆனார். 

Next Story