சினிமா செய்திகள்

திருமணத்தில் முடியுமா தீபிகா- ரன்வீர் காதல்? + "||" + Deepika - Ranveer love? Can you get married

திருமணத்தில் முடியுமா தீபிகா- ரன்வீர் காதல்?

திருமணத்தில் முடியுமா தீபிகா- ரன்வீர் காதல்?
எல்லா நட்சத்திர ஜோடிகளும் சொல்வதைப் போலத்தான், அப்போது ரன்வீர் சிங்கின் பேட்டியும் இருந்தது.
‘தீபிகாவுக்கும் எனக்கும்  இடையே எதுவும் இல்லை. அவரது நடிப்புத் திறமை, தொழில் பக்தி எனக்குப் பிடிக்கும். அதைப் பாராட்டுகிறேன்; அவ்வளவு தான். அதைத் தாண்டி அவர் ஒரு அன்பான தோழி. நாங்கள் இருவரும் எங்களுக்கான வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டு வருகிறோம். காதல் ஜோடியாக எங்களைப் பார்க்காதீர்கள். அது நல்லதல்ல. காதல் பற்றி விளக்கம் கொடுக்க எங்களுக்கு நேரமும் இல்லை. எங்கள் இருவருக்குமே தனித்தனி வாழ்க்கை இருக்கிறது. எங்களை சேர்த்து வைத்து பேசுவதால், அந்த தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படலாம். ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து செல்வதை, இன்னும் இந்த சமூகம் தவறாகத்தான் பார்க்கிறது. அந்தப் பார்வை சரியானதல்ல.’


2013-ம் ஆண்டு ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நடித்து வெளியான படம் ‘ராம் லீலா’. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, ரன்வீருக்கும், தீபிகாவுக்கும் காதல் என்ற விஷயம் கசிந்தது. அதுபற்றி ரன்வீர் சிங்கிடம் கேட்டபோது, அவர் அளித்த விளக்கம் தான் நீங்கள் மேலே பார்த்தது.

அது சரி.. எந்த சினிமா நட்சத்திர ஜோடிகள் தான், எடுத்த உடனேயே ‘ஆமாம்.. நாங்கள் காதலிக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். 5 வருடம் அல்லது அதற்கு மேல் வெளியுலகத்திற்கு, ‘‘நாங்கள் அப்படியல்ல’’ என்பதைப் போல் காட்டிவிட்டு, திடீரென்று ‘‘இருவரும் திருமணம் செய்யப் போகிறோம்’’ என்று அறிவிப்பதுதானே காலம் காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் ரன்வீர் சிங்- தீபிகா ஜோடியும் சேர்ந்திருப்பதாக பாலிவுட் வட்டாரமே பரபரத்துக் கிடக்கிறது.

ஆம்! ‘ராம் லீலா’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே ஜோடி, தாங்கள் ஜோடி சேர்ந்த முதல் படத்தில் இருந்தே காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆரம்பத்தில் இதனை இருவருமே மறுத்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் ரன்வீர் சிங் வெளிப்படையாக, தான் தீபிகா படுகோனேவை காதலிப்பதாக ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லத் தொடங்கினார். ஆனால் தீபிகா படுகோனேவிடம் இருந்து காதலை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதே நேரம் ரன்வீர்சிங் சொன்னதை அவர் மறுக்கவும் இல்லை. எந்த இடத்திற்குச் சென்றாலும் இந்த ஜோடிகள் இருவரும் ஒன்றாகவே சென்று வந்ததை பல நிகழ்வுகளில் பார்க்க முடிந்தது. அது இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் காதலை, வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்த நிலையில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கை காதலிப்பதாக வெளிப்படையாக சொல்லாததால், பாலிவுட்டைச் சேர்ந்த ஒரு தரப்பினர், ‘தன்னை மீடியா வெளிச்சத்திலேயே வைத்துக்கொள்ள ரன்வீர் சிங், அவ்வப்போது அடிக்கும் ஸ்டண்ட்களில் இதுவும் ஒன்று’ என்று கூறினர்.

சினிமாவிற்காக ரன்வீர் சிங் முயற்சி செய்துக் கொண்டிருந்த நேரத்தில், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் விளம்பர நிறுவனங்களில் பணியாற்ற வந்த வாய்ப்பை பயன்படுத்தினார். பின்னர் அங்கிருந்தே தன்னுடைய சினிமா தாகத்தை தணிப்பதற்காக, வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். அப்படிக் கிடைத்ததுதான் ‘பேன்ட் பாஜா பாராத்’ திரைப்படம். அவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய வெற்றி. இந்தப்படத்தில் அனுஷ்கா சர்மா ஜோடியாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் வெற்றியைப் பெறவில்லை. ‘அவ்வளவுதான் ரன்வீர் சிங்’ என்று பலரும் முனுமுனுத்த நேரத்தில், தன்னுடைய விளம்பர நிறுவன தொடர்பை வைத்து, விளம்பரப் படங்களில் நடித்து, மக்களிடம் தான் எப்போதும் ஆக்டிவாக இருப்பது போலவே காட்டிக்கொண்டார். இடையில் அனுஷ்கா சர்மா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோருடன் காதல், மோதல் என்று மீடியா வெளிச்சத்திலேயே வலம் வந்தார்.

அவர் அளித்த ஸ்டேட்மெண்ட் ஒன்று பாலிவுட் வட்டாரத்தையே பற்றி எரியச் செய்தது. ‘நான் 12 வயதிலேயே கற்பை இழந்தேன். இதுவரை 26 பெண்களிடம் செக்ஸ் வைத்திருக்கிறேன். என்னுடைய பாக்கெட்டில் எப்போதும் காண்டம் இருக்கும். செக்ஸில் நான் ஆர்வமாக இருந்தாலும், ஆழமான நட்பின் மீதும், காதலின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்பது தான் அந்த ஸ்டேட்மெண்ட்.

இப்படி ரன்வீர்சிங் அவ்வப்போது அளித்த பேட்டிகளும், செய்த காதல் லீலைகளும் தான் அவரை எப்போதும் வைரலின் உச்சத்திலேயே வைத்திருந்தன. அதுபோன்று தான் இப்போது தீபிகா படுகோனேவுடன் காதல் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று அந்தத் தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். இப்படி ரன்வீரை குறைசொல்லி வந்தவர்களுக்கு, இடையில் ஒரு இனிப்பான செய்தி கூட கிடைத்தது.

ஹாலிவுட்டில் ‘டிரிபிள் எக்ஸ்: ரிட்டர்ன் ஆப் எக்ஸன்டர் கேஜ்’ படத்தில் வின்டீசலுடன் நடித்தார் தீபிகா படுகோனே. இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில், வின்டீசலுடன் இருப்பது போன்ற படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு, ‘நான் வின்டீசலுடன் கனவில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்று விட்டேன்’ என்று கூறினார், தீபிகா படுகோனே.

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘தீபிகா.. வின்டீசலுடன் காதலில் விழுந்து விட்டார், அவர் ரன்வீர் சிங்குடனான காதலை கைகழுவி விட்டார்’ என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. தீபிகாவின் ஸ்டேட்மெண்டைப் பார்த்து ரன்வீர் சிங் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் அந்த பரபரப்பு எல்லாவற்றுக்கும் ‘பத்மாவத்’ படத்தில் இணைந்து முற்றுப்புள்ளி வைத்தனர், தீபிகாவும் ரன்வீரும். படத்திற்கான புரமோஷன் சமயத்தில் இருவரும் ஒன்றாகவே வலம் வந்தனர். இதையடுத்து இந்த ஆண்டுக்குள் இந்த ஜோடி தங்களது அடுத்தக் கட்டமான திருமணத்தில் அடியெடுத்து வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ரன்வீர்- தீபிகா இருவரும் வருகிற நவம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும், திருமணத்திற்கான ஆடை, ஆபரணங்களை வாங்கும் பணியில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுவரை தீபிகா படுகோனேவை காதலிப்பதாக ரன்வீர் சிங் மட்டுமே சொல்லி வந்த நிலையில், சமீபத்தில் தீபிகா படுகோனே அளித்துள்ள ஒரு பேட்டி அவருக்கும், ரன்வீர் சிங் மீது காதல் இருப்பதை கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

‘ரன்வீர் மிகவும் நல்ல மனிதர். அனைவரிடமும் அன்பைக் காட்டுபவர். வெளிப்படையாக அழுவதற்குக் கூட தயங்காதவர். அதுதான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயம். அவர் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். ஒரு போதும் அவர் என் மனதைக் காயப்படுத்த மாட்டார்’ என்று கூறியிருக்கிறார்.

இதனால் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் விரைவில் திருமணம் செய்யப்போவது உறுதி என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அது சரிதான் என்பது போலவே, ‘பத்மாவத்’ படத்திற்குப் பிறகு எந்தப் படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார், தீபிகா படுகோனே. தற்போது ஷாருக்கான், கேத்ரீனா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீரோ’ படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதுவும் கூட சிறப்பு தோற்றம் தான்.

இவை அனைத்தும் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணத்தை உறுதி செய்வதாக அமைந்திருக்கின்றன.

ஆனாலும் நட்சத்திர காதலர்களைப் பொறுத்தவரை, மணமேடையில் அமர்ந்து தாலி கட்டிய பிறகுதான் எதையும் உறுதிபடுத்த முடியும். ஏன்னா.. அவங்க முடிவு எதுவும் நிரந்தரம் கிடையாது. 

ஆசிரியரின் தேர்வுகள்...