பிரபாகரன் மகன் படத்துக்கு இலங்கையில் தடை


பிரபாகரன் மகன் படத்துக்கு இலங்கையில் தடை
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 8:06 PM GMT)

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் பாலசந்திரனையும், ஈழம் டெலிவிஷனில் பணியாற்றிய இசைப்பிரியாவையும் சிங்கள ராணுவம் கொடூரமாக கொலை செய்தது.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் பாலசந்திரனையும், ஈழம் டெலிவிஷனில் பணியாற்றிய இசைப்பிரியாவையும் சிங்கள ராணுவம் கொடூரமாக கொலை செய்தது. இந்த படுகொலையை மையமாக வைத்து ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என்ற பெயரில் முழு நீள திரைப்படம் தயாராகி உள்ளது. ஈழன் இளங்கோ டைரக்டு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு இந்தியில் இந்த மாதம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. இலங்கையிலும் திரையிட முயற்சி செய்தனர். இதற்காக இலங்கை தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இலங்கையில் திரையிட தடை விதித்துள்ளனர்.

“இறுதிபோரில் நடந்த காட்சிகள் படத்தில் இல்லை. ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களையும் சித்திரவதை காட்சிகளையும் படமாக்கவில்லை. பாலச்சந்திரன், இசைப்பிரியா வாழ்க்கையை மட்டுமே படமாக்கி உள்ளோம். எனவே படத்துக்கு அனுமதி தரவேண்டும்” என்று படக்குழு சார்பில் வற்புறுத்தியும் இலங்கை தணிக்கை குழுவினர் ஏற்கவில்லை.

“இலங்கை அரசுக்கும், சிங்கள படையினருக்கும் எதிரான காட்சிகள் படத்தில் உள்ளன. இந்த படத்தை இலங்கையில் திரையிட அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவே அனுமதி தர முடியாது” என்று தணிக்கை குழுவினர் மறுத்துவிட்டனர். டைரக்டர் ஈழன் இளங்கோ கூறும்போது, “ஈழத்தமிழருக்கு எதிராக நடந்த கொடுமைகளை உலகம் முழுவதும் அறிந்து கொள்ள அனைத்து நாடுகளிலும் இந்த படத்தை திரையிடுவோம்” என்றார்.

Next Story