சினிமா செய்திகள்

நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார் போலீஸ் விசாரணை + "||" + Fraud complaint in Actor 'Power Star' Srinivasan Police investigation

நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார் போலீஸ் விசாரணை

நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார் போலீஸ் விசாரணை
நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது தரப்பட்டு உள்ள மோசடி புகார் மீது போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
பெரம்பூர்,

நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஆவார்.

ஆனால் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி சர்ச்சைகளுக்கும் ஆளாகி உள்ளார்.


இந்த நிலையில் அவர் மீது சென்னை புது வண்ணாரப்பேட்டை, இந்திரா நகரை சேர்ந்த முத்து என்பவரின் மகன் தயாநிதி (வயது 32), புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் 2 ஆண்டுகளுக்கு முன்னர் கார் டிரைவராக வேலை செய்து வந்தேன். அப்போது எனது நண்பர் மூலமாக நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர் எனக்கு தொழில் செய்வதற்கு வங்கியில் ரூ.30 லட்சம் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். அதை நான் நம்பினேன். அவர் கமிஷன் மற்றும் ஆவண கட்டணமாக ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டார். அதை நான் கொடுத்தேன்.

அதன்பிறகு எனக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலை தரப்பட்டது. ஆனால் அதை நான் வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது. இதுபற்றி நான் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனிடம் கேட்டபோது, அவரிடம் இருந்து எனக்கு சரியான பதில் இல்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

பல முறை அலைந்து பணம் கேட்டதில் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ரூ.1 லட்சத்துக்கு காசோலை தந்தார். ஆனால் அதுவும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. அவர் என்னை மோசடி செய்து விட்டார்.

எனது புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளதாக தெரிகிறது.

இந்தப் புகாரின் மீது புது வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.