பிரபலங்களும்..! விளம்பரங்களும்..!


பிரபலங்களும்..! விளம்பரங்களும்..!
x
தினத்தந்தி 13 July 2018 9:30 PM GMT (Updated: 12 July 2018 7:33 AM GMT)

பாலிவுட் பிரபலங்கள் பலரும் தற்போது விளம்பரங்களில் நடிப்பதில் அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்கு காரணம் பலநாள் படப்பிடிப்பில் பெறும் ஊதியத்தை சில மணி நேர விளம்பர சூட்டிங் மூலம் பெறுவதுதான்.

டிகர்- நடிகைகளின் பிரபலத்தை பொறுத்து அவர்கள் நடிக்கும் விளம்பரங்களும், ஊதியங்களும் மாறுபடுகின்றன. சிலர் தங்களின் விளம்பர மதிப்பை உயர்த்தி கொள்வதற்காகவே சமூக வலைத்தளங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆம்..! இத்தகைய சர்ச்சைகள் பிரபலங்களின் விளம்பர மதிப்பை உயர்த்துமாம்.

பாலிவுட் பிரபலங்களும், அவர்களது விளம்பர தந்திரங்களும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

* ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் உடற்பயிற்சி உபகரணங்கள் தொடங்கி, வீட்டு உபகரணங்கள் வரை விளம்பர மாடலாக பிசியாக இயங்கி வருகின்றனர். தீபிகா இன்று பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகை. அதற்கு நிகராக விளம்பரங்கள் மூலமும் பல கோடிகளை சம்பாதிக்கிறார். ரன்வீர் 2019-ம் ஆண்டின் இறுதி வரை பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் அவரது விளம்பர மதிப்பும் கூடியிருக்கிறது. இவ்விருவரும் காதல், கல்யாணம் போன்ற செய்திகளில் அடிக்கடி சிக்கிக்கொள்வதால் இவர்களை விளம்பரங்களில் நடிக்க வைத்து, தங்களது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள பிரபல நிறுவனங்கள் போட்டாபோட்டி நடத்துகின்றன. அதனால் இருவரும் ஆண்டிற்கு, 8 முதல் 10 பிராண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் திருமண ஆடை விளம்பரம் ஒன்றில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இணைந்து நடித்தனர். தற்போது ரன்வீர்- தீபிகா ஜோடியும் இதே போன்று ஒரு விளம்பரத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

* கரீனா கபூர் மற்றும் சைப் அலி கான் ஆகியோர் தங்களது மகன் தைமூரின் வருகையை எதிர் பார்த்துக்கொண்டிருந்தபோது, இவர்கள் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவின. அதனால் அந்த சமயத்தில் இவர்களை தங்களின் விளம்பரங்களில் மாடலாக்குவதற்கு பல நிறுவனங்கள் போட்டாபோட்டி நடத்தின.

* அஜய் தேவ்கான் விளம்பரங்களில் மாடலாக தோன்றுவதற்கு ரூ.2 கோடி வரை ஊதியமாக பெறுகிறார். அதுவே மனைவி கஜோலுடன் இணைந்து தோன்றும் போது அவர்களின் மதிப்பு உயர்ந்து விடுகிறது. திருமண பொருட்கள், பிரபலமான பிராண்டுகளில் நடிக்க இவர்கள் ரூ.10 கோடி வரை ஊதியம் பெறுகிறார்கள்.

* ஆனந்த் அவுஜா 2015-ம் ஆண்டில் சோனம் கபூருடன் டேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, அவரது இன்ஸ்டாகிராமில் சுமார் 4 ஆயிரம் பேர் அவரை பின் தொடர்ந்தனர். அவர்களது திருமணத்திற்கு பிறகு பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. திருமணம் முடிவான பின்னரும் கூட சோனம், பத்துக்கும் அதிகமான புத்தகங்களில் அட்டைப்படமானார். இதற்கு சமூக வலைத்தளங்களில் சோனம் சம்பந்தமான செய்திகளும், புகைப்படங்களும் பகிரப்படுவதே காரணம். ஆக..! சமூக வலைத்தளங்களில் வைரலாக இருப்பவர்களின் விளம்பர மதிப்பு கிடுகிடுவென உயர்வதை இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

* ஒரு பிரபலமானவர் சமூக வலைத்தளங்களில் எந்தளவிற்கு ஈடுபாடு காட்டுகிறார். சமூக வலைத்தளங்கள் மூலம் அவர் எவ்வளவு மக்களால் கவனிக்கப்படுகிறார் என்பதை பொறுத்தும் அவர்களின் மார்க்கெட் அந்தஸ்து மாறுபடுகிறது. தற்போது ஒரு பிராண்ட் என்பது விளம்பரங்கள் மூலம் மட்டுமல்லாது விளம்பர மாடல்கள் மூலமாகவும் அதிகம் பேசப்படுகிறது. அதற்கு அவர்களின் புகழும், திரையுலகில் அவர்களை சுற்றி வரும் கிசுகிசுக்களும் ஒரு காரணமாக அமைகின்றன. விளம்பரங் களை பயன்படுத்தி பிரபலங்கள் பட வாய்ப்பு இல்லாத சமயங்களில் கூட தங்களை ரசிகர்கள் மத்தியில் பிசியாக காட்டிக் கொள்கின்றனர். சமுதாய த்தின் பார்வை எந்த பிரபலத்தின் மீது அதிகமாக விழுகிறதோ அந்த பிரபலத்தை ஒரு புதிய பிராண்டில் பயன்படுத்துவதன் மூலம் அந்த பிராண்டும் பிரபலமடைகிறது.

* கணவன்-மனைவி உறவு எப்படி ரசிகர்கள் மத்தியில் ஒரு பிராண்டை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதற்கு ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர் சிறந்த உதாரணம். இந்த தம்பதியர் எப்பொழுதும் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்வதால் இவர்களின் விளம்பரங்கள் 50 மில்லியன் மக்களிடம் அந்த பிராண்டை பிரபலப்படுத்துகின்றன. இவர்களை போன்றே தற்போது விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா ஆகியோரின் விளம்பரங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

* ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் ஆகியோர் தற்போது பாலிவுட் வட்டாரத்தின் இளம் ஜோடிகள். இவர்களின் விளம்பர மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கொண்டுள்ள தொடர்பு அவர்களின் விளம்பர மதிப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அலியா பட் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்பொழுதும் அவர் பக்கம் ஈர்ப்புடன் வைத்துள்ளார்.

மேலும் பிரபலங்கள் தங்களின் சந்தை மதிப்பை அதிகரித்து கொள்ள நிறுவனத்தின் பங்குதாரர்களாக இணைந்து கொள்கின்றனர். இதன் மூலம் அந்த பிராண்டும் பிரபல பங்குதாரர் மூலம் பிரபலம் அடைகிறது. மேலும் பிரபலத்தின் ரசிகர் பட்டாளங்கள் பிராண்டின் வாடிக்கையாளர்களாகின்றன. எனவே பிரபலங்களை தங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக ஆக்குவதற்கும் பங்குதாரராக சேர்த்து கொள்வதற்கும் பல முன்னணி நிறுவனங்கள் முண்டியடித்து பிரபலங்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன. 

Next Story