சினிமா செய்திகள்

‘‘சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி வைப்பது தவறு அல்ல’’ விஜய் சேதுபதி பேட்டி + "||" + It is not wrong to view smoking in cinema Vijay Sethupathi interview

‘‘சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி வைப்பது தவறு அல்ல’’ விஜய் சேதுபதி பேட்டி

‘‘சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி வைப்பது தவறு அல்ல’’ விஜய் சேதுபதி பேட்டி
விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்தியன் நடித்துள்ள புதிய படம் ஜுங்கா. கோகுல் டைரக்டு செய்துள்ளார்.
 நடிகர் அருண்பாண்டியனுடன் இணைந்து விஜய்சேதுபதியே தயாரித்துள்ளார். படக் குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது விஜய் சேதுபதி கூறியதாவது:–

‘‘ஜூங்கா படம் சிறப்பாக வந்துள்ளது. நான் கஞ்சத்தனமான தாதாவாக நடித்துள்ளேன். குடும்பத்தோடு ரசிக்கும் நகைச்சுவை படமாக இருக்கும். அதிரடி காட்சிகளும் உள்ளன. நான் தயாரிப்பாளரானது குறித்து கேட்கிறார்கள். திரையுலகில் ஒவ்வொரு நடிகரின் படங்களுக்கும் வியாபார அளவை நிர்ணயம் செய்து கட்டம் கட்டி வைத்துள்ள நிலைமை இருக்கிறது.


எல்லோரும் படத்தை பார்த்து இருக்கிறார்களே என்று கேட்டால், இல்லை. இவ்வளவுதான் வியாபாரம் என்கிறார்கள். கதைக்கு எவ்வளவு செலவு தேவையோ அதை செய்யாமல் சுருக்கும் நிலையும் உள்ளது. மக்களுக்கு இந்த படம்தான் பிடிக்கும் என்று நாமே முடிவு செய்ய கூடாது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் எடுக்கும் போது தலைப்பு நன்றாக இல்லை என்றனர். பீட்சா படத்துக்கும் அதையே சொன்னார்கள்.

ஒரு நடிகரின் படத்துக்கு இவ்வளவுதான் செலவு செய்யணும் என்றும் கட்டுப்பாடு வைத்து இருக்கிறார்கள். எனவேதான் நானே எனது படத்துக்கு தயாரிப்பாளரானேன். வசூல் விவரம் வெளிப்படையாக தெரிந்தால் பிரச்சினை இல்லை. அதற்கான முயற்சிகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினியின் நடிப்பு ஒரு பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழகத்துக்குள் செல்லும் ஒரு மாணவனாக நான் இருக்கிறேன். சினிமாவில் புகைபிடிக்கும் காட்சி வைப்பது குறித்து விமர்சனங்கள் வருகின்றன. புகைபிடிப்பது தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை.

கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லும்போது அந்த காட்சி தேவையாக இருக்கிறது. வில்லனை ஏன் உருவாக்குகிறீர்கள் என்று கேட்க முடியுமா? நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை’’

இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்.