கரீனா கபூர் : அடுத்த குழந்தை எப்போது?


கரீனா கபூர் : அடுத்த குழந்தை எப்போது?
x
தினத்தந்தி 15 July 2018 5:27 AM GMT (Updated: 15 July 2018 5:27 AM GMT)

திருமணம், தாய்மை இரண்டையும் நன்றாக அனுபவித்துவிட்டு மீண்டும் கரீனா கபூர் நடிக்க வந்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம்.

திருமணம், தாய்மை இரண்டையும் நன்றாக அனுபவித்துவிட்டு மீண்டும் கரீனா கபூர் நடிக்க வந்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம். காரணம், திருமணத்திற்கு முந்தைய அதே அழகு, அதே இளமை, அதே வேகம் அவரிடம் இருந்து கொண்டிருக்கிறது. குழந்தைக்கு தாயான பின்பும், இப்போதும் கவர்ச்சி அழகியாகவே கரீனா வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சைய்ப் அலிகானுடனான திருமணம் உங்கள் திரை உலக வாழ்க்கையில் ஏதேனும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறதா?

திருமணத்திற்கு பின்பு என் வாழ்க்கையில் ஒரே ஒரு மாற்றம்தான் ஏற்பட்டிருக்கிறது. அது, என் பெயரோடு கான் என்ற இன்னொரு பெயர் சேர்ந்திருப்பது மட்டும்தான். திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக எந்த விளம்பர பட வாய்ப்பும் எனக்கு கிடைக்காமல் போகவில்லை. திருமணமான பின்பு வித்தியாச மானவர்களோடு வேலை பார்ப்பது எனக்கு ருசிகரமான அனுபவம்.

சல்மான் கானும், நீங்களும் சினிமாவில் பொருத்தமான ஜோடி என்று குறிப்பிடப் படுவது பற்றி..?

28 வருடங் களுக்கு முன்னால் பாப்பி சோனியின் படத்தில் எனது அக்காளுடன் அவர் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்து அவரை எனக்கு தெரியும். பஜ்ரங்கி பாய்ஜான், அவரோடு நான் நடித்த மூன்றாவது படம். இப்போது அவர் மிகவும் சாந்தமானவராகிவிட்டார். தனது வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் எதையும் தொழிலில் காட்டாத அளவுக்குரிய பக்குவத்தையும் அவர் பெற்றிருக்கிறார்.

முதலில் நான் அனில்கபூரின் மனைவியாக நடித்தேன். பின்பு அவரது மகன் உறவு முறை கொண்ட அர்ஜூன் கபூர் மனைவியாகவும் நடித்திருக்கிறேன். நடிக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக, இளம் வயதாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இ்ல்லை. நாம் சினிமா மீது அதிக ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டிருந்தால் வயது வித்தியாசம் எதுவும் பெரிதாக தெரியாது.

இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாக்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கிறதல்லவா?

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாக்கள் எல்லா காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. 1970-களில் வெளியான சீதா அவுர் கீதா, அமர் பிரேம் போன்ற சினிமாக்களில் கதாநாயகிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. நானும் அப்படிப்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் நான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில்லை. எனக்கு கதை பிடித்திருந்தால் போதுமானது.

நீங்கள் எல்லா கான்களுடனும் நடித்துவிட்டீர்கள் அல்லவா?

ஆமாம். சைய்ப் அலிகானுடன் ஒரு படம். அமீர் கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோருடன் தலா இரண்டு படங்கள். ஷாருக்கானுடன் நடிக்கும்போது மட்டும் கொஞ்சம் பயமாக இருக்கும். அந்த அளவுக்கு அவர் எனர்ஜி மிகுந்தவர்.

எந்த படத்தை ரீமேக் செய்தால், அதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்?

அமர் பிரேம் படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எனக்கு பாட்டு, நடனம், குத்துப்பாட்டு எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

தைமூர் பிறந்துவிட்டான். கூடுதலாக இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வீர்களா?

இப்போதைக்கு தைமூர் மட்டும் போதும் என்று நாங்கள் முடிவுசெய்திருக்கிறோம்.

பிரியங்கா சோப்ராவுக்கு நிஜ கதாபாத்திரமாக ‘மேரிகோம்’, வித்யா பாலனுக்கு ‘டர்ட்டி பிக்சர்’ போன்று நீங்களும் ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா?

நிஜ கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதைவிட, அந்த கதாபாத்திரம் நமக்கு பொருந்துமா என்று பார்ப்பதுதான் முக்கியம். எல்லோரும் நிஜ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதற்காக நானும் அதில் போய் குதிக்க முடியாது.

உங்கள் இளமை மற்றும் கவர்ச்சியின் ரகசியம் என்ன?

இந்த கேள்வியை என் கணவர் சைய்ப்பிடம் கேளுங்கள்!

சிரிப்போடு நிறைவு செய்யும் கரீனா, பதில் மூலம் சிந்திக்கவும் வைக்கிறார்!!

Next Story