நடிகர் அஜித்குமார் குழு செய்த சாதனை


நடிகர் அஜித்குமார் குழு செய்த சாதனை
x
தினத்தந்தி 15 July 2018 10:35 AM GMT (Updated: 15 July 2018 10:35 AM GMT)

நடிகர் அஜித்குமார் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா என்னும் ஆளில்லா விமானத்தை தயார் செய்யும் குழு புதியதாக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

சென்னை,

நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மோட்டார் பைக் பந்தயங்களில் ஆர்வமுள்ள அஜித் இதற்காக நடிப்பதை ஒத்திவைத்து விட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று போட்டிகளில் பங்கேற்று வந்தார். விமானம் ஓட்டுவதிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. விமானம் ஓட்டும் லைசென்சும் வாங்கி வைத்துள்ளார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளார்.

ருசியாக பிரியாணி சமைப்பார். படப்பிடிப்பின் கடைசி நாளில் தனது கையால் பிரியாணி சமைத்து படக்குழுவினருக்கு பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் அஜித்குமாருக்கு புதிய பதவி வழங்கப்பட்டது. அந்த கல்லூரியின் ஹெலிகாப்டர் சோதனை விஞ்ஞானி மற்றும் ஆளில்லா விமான பயிற்சி ஆலோசகராக அவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கும் பணிக்கு அஜித்குமாரை நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆளில்லா விமானத்தை தயாரிக்க தக்‌ஷா என்னும் குழுவை அமைத்தனர். அக்குழுவானது அஜித்குமார் ஆலோசனையின் படி ஒரு ஆளில்லா விமானத்தை தயார் செய்தது.
 
இந்நிலையில் இந்தியா முழுவதும் 111 பொறியியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தக்‌ஷா குழுவினரும் கலந்து கொள்ள, அவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் 6 மணி நேரம் 7 நிமிடம் விண்ணில் பறந்து சாதனை புரிந்துள்ளது. மேலும் இது கின்னஸ் குழுவினருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆளில்லா விமானம் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால் இதை ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என அஜித் யோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Next Story