சினிமா செய்திகள்

‘‘எனக்கு வந்த மிரட்டல்கள்’’ –நடிகை பார்வதி + "||" + Threats to me - actress Parvathi

‘‘எனக்கு வந்த மிரட்டல்கள்’’ –நடிகை பார்வதி

‘‘எனக்கு வந்த மிரட்டல்கள்’’ –நடிகை பார்வதி
நடிகை பார்வதி தனக்கு வந்த மிரட்டல்கள் குறித்த தகவல்களை கூறியுள்ளார்.
சென்னையில் ஒரு நாள், பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக பிரச்சினைகள் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்தார். பார்வதிக்கு ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் மிரட்டல்கள் வந்தன. கற்பழித்து விடுவதாகவும் பயமுறுத்தினார்கள். 

இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பார்வதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பார்வதி கூறியதாவது:–

‘‘சமூக வலைத்தளத்தில் எனக்கு மிரட்டல்கள் வந்தபோது நான் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானேன். மன உளைச்சல் ஏற்பட்டது. அதில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். மன அழுத்தத்தில் இருந்து வெளியேற நீண்ட நாட்கள் ஆனது. நான் திரையுலகுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் 20 படங்களில்தான் நடித்து இருக்கிறேன். 

பெரிய வெற்றி படங்கள் எனக்கு அமையவில்லை. நடிப்பு என்பது கவர்ச்சியை சார்ந்தது என்று நினைக்கிறார்கள். அது தவறு. நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பதுதான் சினிமா. சிலர் எனது கருத்துக்களை ஆதரிக்கிறார்கள். சிலர் ஏற்பது இல்லை. நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று யாரையும் நான் நிர்ப்பந்திப்பதும் இல்லை.’’

இவ்வாறு நடிகை பார்வதி கூறினார்.