சினிமா செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்: பார்த்திபன், விவேக், கஸ்தூரி கண்டனம் + "||" + Girl Forcibly: Parthiban, Vivek and Kasthuri condemned

சிறுமி பாலியல் பலாத்காரம்: பார்த்திபன், விவேக், கஸ்தூரி கண்டனம்

சிறுமி பாலியல் பலாத்காரம்: பார்த்திபன், விவேக், கஸ்தூரி கண்டனம்
சிறுமியை பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு நடிகர்கள் பார்த்திபன், விவேக், நடிகை கஸ்தூரி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 11 வயது சிறுமியை 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்துக்கு நடிகர்கள் பார்த்திபன், விவேக், நடிகை கஸ்தூரி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பார்த்திபன் கூறியதாவது:–

‘‘இந்த நிமிடம். இதே மணிக்கு இங்கோ, அங்கோ, எங்கோ ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய நிகழ்வை பார்த்தபடி. அதை தடுப்பது எப்படி? ஏனெனில் போன வாரம், போன மாதம், போன வருடம் வேறு ஒரு சிறுமியின் உறைந்த ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர் ஈக்களாய் மொய்த்துக்கொண்டிருக்கையில் இந்த 17–ம், இன்னும் சில மிருகங்களும் செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர். எனவே நம் கண்களையும், காதுகளையும் கூர்மையாக்கி – அலையும் மனு‌ஷ பிராணிகளை கண்டறிந்து காயடிக்க வேண்டும்.’’

இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சமூக வலைத்தளத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்களுக்கு தணிக்கை இல்லை. இனி பெற்றோர்தான் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மிக அவசியம்’’ என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி கூறியதாவது:– 

7–ம் வகுப்பு படிக்கும் மாணவியை சீரழித்துள்ளனர். இந்த மாதிரி நடந்தால் தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ எப்படி வாழ முடியும். பெண்கள் பாதுகாப்பில் இந்தியா மோசமான நாடு என்று சர்வே வந்துள்ளது. பெண்களை மோசமாக நடத்துபவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகள். இது சென்னை நகரமா, இல்லை வண்டலூர் பூங்காவா என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 22 பேரின் குடும்பத்திலும் மகளோ, பேத்திகளோ இருப்பார்கள் தானே. 

சினிமாதான் இதற்கு எல்லாம் காரணம். பெண்கள் ஆடை உடுத்தும் விதம் தான் இதற்கு எல்லாம் காரணம் என்று யாராவது சொல்லிப்பாருங்கள். இந்த மாதிரி கொடுமைகளை சினிமாவில் யார் காட்டுகிறார்கள். சிறுமிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிற கேடுகெட்ட கலாசாரம் தான் நம்முடைய தமிழ் கலாசாரம் என்று சொன்னால் நான் தமிழச்சி என்று சொல்வதற்கே அவமானப்படுகிறேன். யார், யாரையோ சமூக விரோதிகள் என்று சுடுகிறார்கள். இந்த சமூக விரோதிகளுக்கும் தவணை கொடுக்காமல் நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.