சினிமா செய்திகள்

‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன் + "||" + Kamal Haasan is getting ready for Indian-2 film

‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்

‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்
கமல்ஹாசன் அரசியல் பணிகளுக்கு இடையில் ‘இந்தியன்–2’ படத்தில் நடிக்க தயாராகிறார்.
விஸ்வரூபம்–2 படம் அடுத்த மாதம் 10–ந் தேதி திரைக்கு வருகிறது. அதன்பிறகு இந்தியன்–2 பட வேலைகள் தொடங்க இருக்கின்றன.  இதன் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஸ்வரூபம்–2 படத்துக்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் உளவு அமைப்பான ரா அதிகாரியாக நடிக்கிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் கதை. இதன் முதல் பாகம் எதிர்ப்புகளில் சிக்கியே வெளிவந்தது. இரண்டாம் பாகத்துக்கு சர்ச்சை ஏற்பட்டால் அரசியல்வாதியாக சந்திப்பேன் என்று கமல் கூறியுள்ளார். 

இந்த படத்துக்கு தணிக்கை குழு ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் டெல்லி சென்று சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மேடையில் அவரை சந்தித்து விஸ்வரூபம்–2 படத்தை விளம்பரப்படுத்தினார். அந்த படத்தில் நடித்துள்ள பூஜாகுமாரும் இதில் கலந்து கொண்டார். 

இந்தியன்–2 படப்பிடிப்பை சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நடத்த உள்ளனர். முதல் பாகத்தில் வர்ம கலையால் ஊழல்வாதிகளை வீழ்த்தும் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் பேசப்பட்டது. அதே கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலும் வருவதுபோல் இயக்குனர் ‌ஷங்கர் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

முழுமையான அரசியல் படமாக இது இருக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள்.