மனதில் நின்ற மனிதர்கள் : சிவாஜியைப் பார்க்க காத்திருந்தேன்


மனதில் நின்ற மனிதர்கள் : சிவாஜியைப் பார்க்க காத்திருந்தேன்
x
தினத்தந்தி 20 July 2018 6:14 AM GMT (Updated: 20 July 2018 6:36 AM GMT)

நடிகர் திலகம் சிவாஜி அண்ணனை, நான் முதன் முதலில் சென்னையில் தான் பார்த்தேன். 1968-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி நான் சென்னைக்கு வந்தேன்.

தஞ்சையில் இருந்து ரெயிலில் பத்து ரூபாய் பயணச்சீட்டில், 2-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினேன்.

திரைப்படங்களில் நான் பார்த்து பிரமித்த எழும்பூர் ரெயில் நிலையம், நேரில் பார்க்கும் பொழுது, என்னுடைய கற்பனையில் பத்தில் ஒரு பங்கு தான் இருந்தது. வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கிறது.

‘தினத்தந்தி’ கட்டிடத்தின் பக்கமாக வந்து இறங்கி வெளியே வந்தோம்; என்னுடன், என்னுடைய அம்மாவின் தங்கை குடும்பத்தினரும் வந்தனர். என் சித்தி தான் எனக்கு டிக்கெட் எடுத்தார்.

எனக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி சென்னைக்கு அழைத்து வந்தார்கள். நான் வந்ததோ சினிமாவில் நடிப்பதற்கு. சென்னைக்கு புறப்படும் பொழுது என் தாயார், எனக்கு செலவுக்கு பதினைந்து ரூபாய் கொடுத்தார்கள். சித்தி எனக்கு டிக்கெட் எடுத்து விட்டதால், அந்த பதினைந்து ரூபாய் அப்படியே இருந்தது.

எழும்பூர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வரும்பொழுது, நிறைய கை ரிக்‌ஷாக்கள் இருந்தன. மூன்று கை ரிக்‌ஷாக்களில் நாங்கள் அனைவரும் ஏறினோம். என்னிடம் என் சித்தி ‘கை ரிக்‌ஷாவை ரிக்‌ஷாக்காரன் தூக்கும் பொழுது, ரிக்‌ஷாவை இறுக்கி பிடித்துக்கொள். இல்லையென்றால் மல்லாக்கு விழுந்து விடுவாய்’ என்று எச்சரித்தார். நான் ரிக்‌ஷாவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்.

பின்னர் சித்தப்பாவிடம், ‘இந்துநேசன் பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தனை, கத்தியால் குத்திய இடத்தை காண்பியுங்கள்’ என்றேன்.

காரணம் நான் சிறு பிள்ளையாக இருக்கும்பொழுது, ‘லட்சுமிகாந்தனை எங்கள் வீட்டிற்கு அருகில்தான் கத்தியால் குத்தினார்கள்’ என்று சித்தப்பா சொல்லி கேட்டிருக்கிறேன். எனவே தான் அந்த இடத்தை காண்பிக்கச் சொல்லி கேட்டேன். வேப்பேரியில் உள்ள லெட்டன்ஸ் ரோடு வரும்பொழுது, அந்த இடத்தை சித்தப்பா காண்பித்தார். அந்த இடத்தைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.

கார்களை விட, டாக்ஸிகளும், கை ரிக்‌ஷாக்களும் சென்னையில் அதிகமாக ஓடிய காலம் அது. அன்று சென்னையில் இருந்த ராக்ஸி தியேட்டரில் ‘பணமா பாசமா’, புவனேஸ்வரியில் ‘குடியிருந்த கோயில்’, மேகலாவில் ‘கண்ணன் என் காதலன்’, உமா தியேட்டரில் ‘கணவன்’, சித்ராவில் ‘மூன்றெழுத்து’, கெயிட்டியில் ‘பொம்மலாட்டம்’, சாந்தியில் ‘கலாட்டா கல்யாணம்’, குளோப் தியேட்டரில் ‘குடியிருந்த கோயில்’, மிட்லாண்டில் ‘என் தம்பி’ போன்ற படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

சென்னையில் அன்று எல்லா இடங்களிலும் காதில் ஒலித்த பாடல்கள், நடிகை மனோரமா பாடிய ‘வா வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டி நான் விடமாட்டேன்’ என்ற பாடலும், ‘அப்பப்பா நான் அப்பனல்லடா.. தப்பப்பா நான் தாயுமல்லடா’ மற்றும் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம், சுகம், சுகம்’ போன்ற பாடல்கள் தான்.

ஒவ்வொரு ஓட்டலிலும், ஜூக் பாக்ஸ் என்று ஒன்று இருக்கும். 25 பைசா போட்டு நமக்கு பிடித்த பாடலை போட்டுக் கேட்கலாம். அந்த பாக்ஸில் ஒவ்வொரு பாடலுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் விரும்பும் பாடலின் எண்ணை அழுத்தினால், அந்த பாடலைக் கேட்டு மகிழலாம். அப்போது அது போன்ற ஓட்டலில் ஒரு டீயின் விலையே 25 பைசாதான். டீ சாப்பிடும் அனைவரும் 25 பைசைவுக்கு டீ வாங்கி விட்டு, அதை குடிப்பதற்குள் 75 பைசா போட்டு தாங்கள் விரும்பும் பாடலை மூன்று முறை கேட்டுவிட்டு, ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு போவார்கள். சிறிய டீக்கடைகளில் டீ - பத்து பைசா, காபி - 15 பைசா. அந்த மாதிரி கடைகளில் தான் நான் டீ சாப்பிடுவேன்.

கிறிஸ்டோபர் வாக்லர் என்கிற எழுத்தாளர் எழுதிய ‘எழுத்தாளர்களின் பயணம்’ என்கிற புத்தகத்தில், இந்த உலகத்தை நான்காக பிரிக்கிறார், ஒன்று நாம் வாழும் நிஜ உலகம் அல்லது சாதாரண உலகம். இரண்டு மன உலகம் அல்லது கற்பனை உலகம். மூன்றாவது உலகம் விசேஷ உலகம் (சினிமா, கலை, விளையாட்டு, அரசியல்). நான்காவது உலகம் - கடவுள் உலகம்.

எங்களது ஊரான பட்டுக்கோட்டை அருகிலுள்ள அனைக்காடு கிராமம் என்கிற நிஜ உலகை விட்டு, விசேஷ உலகமாகிய சினிமா இருக்கும் ஊரான சென்னைக்கு வந்துவிட்டேன். என்னுடைய 18 வயதிற்கு என் அறிவிற்கு எட்டிய அளவு, மன உலகத்திலும் கற்பனை உலகத்திலும் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

அப்படி இருக்கும்பொழுது ஒருநாள், ஒரு சுவரொட்டியைப் பார்த்தேன். அந்த சுவரொட்டி... 1968-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள, என்.கே.டி. கலா மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிக்கும் ‘வியட்நாம் வீடு’ என்கிற நாடகம் மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது என்ற விஷயத்தை எனக்குச் சொல்லியது. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து திருவல்லிக்கேணி வரை பல பேரிடம் விலாசம் கேட்டு விசாரித்துக் கொண்டு என்.கே.டி கலா மண்டபத்திற்கு, மாலை 5 மணிக்கே வந்துவிட்டேன். மண்டபத்திற்கு முன்பாக மூங்கில் தட்டியில் ‘வியட்நாம் வீடு’ நாடகம் என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

மண்டபத்தின் வாசல் கதவில் நின்ற காவலாளி யிடம், ‘சிவாஜிகணேசன் நாடகத்திற்கு எந்தப் பக்கம் வருவார்?’ என்று விசாரித்தேன். நான் அதிக ஆர்வத்துடனும், அதே சமயம்.. மிகவும் பரிதாபமாகக் கேட்டதையும், என்னுடைய பேச்சின் பாணியையும் கேட்டபிறகு, அந்த காவலாளி, நான் வெளியூர் பையன் என்று தெரிந்து கொண்டார்.

அவர் எனக்கு உதவும் பொருட்டு, ‘இந்த மண்டபத்தில் இரண்டு நுழைவு வாயில் இருக்குப்பா. அதில் எந்த வழியில் அவர் வருவார் என்று எனக்குத் தெரியாது. எந்த வழியிலும் வரலாம்’ என்று கூறிவிட்டு, ‘இங்க நிக்காதப்பா. அந்தப் பக்கம் போயி நில்லு; எனக்கு திட்டு வாங்கிக் கொடுக்காத’ என்றார்.

ஐஸ்ஹவுஸ் பக்கம் உள்ள சாலையில் ஒரு நுழைவு வாசல் உள்ளது. மற்றொன்று மண்டபத்திற்கு வலதுபக்கம் உள்ள அடுத்த தெருவில் உள்ளது. எனவே சிவாஜிகணேசன் எந்தப் பக்கம் வருவார் என்று எனக்கு கணிக்க முடியவில்லை.

நான் சென்னைக்கு வந்த பத்து நாட்களுக்குள், தியாகராய நகரில் போக் ரோட்டில் உள்ள சிவாஜி அண்ணன் வீட்டை, இயக்குனர் மகேந்திரன் எனக்கு காண்பித்தார். அது தெரிந்த காரணத்தினால் தியாகராய நகர் எந்தப்பக்கம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, ஐஸ் ஹவுஸ் பக்கம் இருந்துதான் வருவார் என்று முடிவு கட்டினேன். அதன்படி ஐஸ்ஹவுஸ் பக்கம் உள்ள சாலையின் நுழைவு வாசல் பக்கம் நின்றுகொண்டு சிவாஜி அண்ணனின் வருகைக்காக காத்திருந்தேன்.

மாலை 5.30 மணி இருக்கும். பச்சை நிறத்தில் இருக்கும் பியட் கார், நான் நிற்கும் இடத்திற்கு அருகில் வந்து நின்றது. அந்தக் காரின் பின் இருக்கையில், சிவாஜி அண்ணன் அமர்ந்து, மாலை பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுதுதெல்லாம் கார்களில், கருப்பு நிறக் கண்ணாடியோ, கருப்பு நிறத்தில் உள்ள பேப்பர்களை கண்ணாடிகளில் ஒட்டுவதோ கிடையாது. குளிர்சாதனமும் பெரும்பாலான கார்களில் இருக்காது.

அண்ணன் வந்த காரின் கண்ணாடி இறக்கப்பட்டிருந்ததால், அண்ணன் எனக்கு நன்றாகத் தெரிந்தார். ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று அவருடன் காரில் இருந்தது.

‘இந்தப் பக்கம் வாசல் கதவு அடைத்திருக்கிறது’ என்று டிரைவர் சிவாஜி அண்ணனிடம் கூறினார்.

உடனே அண்ணன் ‘அப்படியென்றால் அந்தப்பக்கம் கூடிப்போ’ என்று கூறும்போது வாசலைப் பார்த்தார். அங்கே நான் நின்று கொண்டிருந்ததால், அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அவரும் வணங்குவது போல் தலையை ஆட்டினார். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த இடத்தில் ஒரு குட்டி பிளாஷ்பேக் சொல்ல நினைக்கிறேன்...

1961-ம் ஆண்டு மதுரை பக்கம் உள்ள கம்பம் என்கிற ஊருக்கு அருகில் உள்ள கூடலூரில் ஒரு கல்யாணத்திற்கு நடிகர் திலகம் வருகை தந்தார். மதுரையில் இருந்து கூடலூர் வரை 100 கிலோமீட்டருக்கு மேலாக ஒவ்வொரு ஊரிலும் சாலையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் சிவாஜி அவர்களை கண்டு ரசித்தனர். அதற்காக பல மணி நேரம் வரை காத்திருந்தனர்.

அவர் வந்த சமயம் நான் சின்னமனூர் என்கிற ஊரில் ஏழாவது படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த சிறிய வயதில் முண்டியடித்துக்கொண்டு போய் அவரைப் பார்க்க முடியவில்லை. அந்த சமயம் ‘பாவ மன்னிப்பு’ படம் வெளியாகி இருந்த நேரம்; அவர் அந்தப் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தார்.

எனவே உத்தமபாளையத்தில் உள்ள இஸ்லாமியப் பெண்கள் கூடைகூடையாக ரோஜா பூக்களை மாடியில் இருந்து அவர் தலையில் கொட்டினார்கள். சாலை முழுவதும் ரோஜா பூக்களாக நிறைந்து இருந்தது. அந்த ரோஜாக்கள் கொட்டப்பட்ட மலர் படுக்கையில் அண்ணன் நடந்து சென்றார் என்று கேள்விப்பட்டேன். அந்த நடிகர் திலகத்தை, இன்று நாம் சாதாரணமாக பார்த்து விட்டோமே என்பது தான் என் மகிழ்ச்சிக்கு காரணம்.

வீட்டிற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் எனது தாய் மாமா, அத்தை, சித்தியிடம் விரிவாகக் கூறினேன்.

‘வேலை தேடுவதை விட சிவாஜிகணேசனை பார்ப்பதில் தான் அதிக அக்கறை காட்டுகிறான்’ என்று எனது மாமா கேலியாக பேசினார்.

என்னுடைய சித்தி ‘என்னடா! சிவாஜிகணேசனை பார்த்ததை.. ஏதோ தெய்வத்தைப் பார்த்ததைப் போல் உணர்ச்சி வசப்பட்டு சொல்கிறாயே’ என்று விமர்சித்தார்கள். பிறகு ‘ஆமா! நீ எப்படா சிவாஜிகணேசன் மாதிரி, நடிகனாக ஆகப் போகிறாய்?’ என்று ஒரு பெரிய கேள்வியை மிகவும் சாதாரணமாகக் கேட்டார்.

சிவாஜி அண்ணன் ஏழு வயதில் நடிக்கத் தொடங்கி, 1968-ம் ஆண்டு வரை முப்பத்தி மூன்று வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து, இவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்திருக்கிறார் என்கிற உண்மை என்னுடைய சித்திக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

‘நான் விரைவில் வருவேன்; நான் சும்மா சென்னை வரவில்லை, ஒரு தீர்மானத்தோடுதான் வந்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, மேலும் தொடர்ந்து ‘சித்தி! நான் நடிகனாவது நிச்சயம். சிவாஜிகணேசன் அளவு வர முடியாது; அது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் என்னை பாராட்டுகின்ற அளவிற்கு நடிப்பேன் என்பது உறுதி’ என்று வாலிப முறுக்கில் சொன்னேன்.

அப்படி நான் சொன்னது ஒருநாள் நடந்தது.

-தொடரும்.

நடந்து செல்வதை வழக்கமாக்கினேன்

சென்னைக்கு வந்த புதிதில் பஸ்சுக்கு மினிமம் பத்து பைசா தான் ஆரம்பம். பெரும்பாலும் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் நடந்தே செல்வேன். எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. அப்பொழுது ஒவ்வொரு பஸ்ஸிலும் இறங்கும் இடத்தில் ஒரு மணி இருக்கும். இறங்க வேண்டிய இடம் வரும்பொழுது அதை அடித்தால் பஸ் நின்றதும் இறங்கிவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. சென்னை எனக்குப் புதிதாக இருந்ததால், நான் செல்ல வேண்டிய இடம் வந்து விட்டதா? இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை. கண்டக்டரிடம் ஓரிரு முறை கேட்டேன்; கோபித்துக்கொண்டார். எனவே நடந்து செல்வதையே வழக்கமாக்கிக் கொண்டேன்.

சென்னையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் எனக்கு உயரமாகத் தெரிந்தார்கள். மிகவும் வேகமாக நடந்து சென்றார்கள். எனவே நானும் வேகமாக நடந்து செல்வதற்கு பழகிக் கொண்டேன். நடந்து போகும்பொழுது வழியில் வருகின்ற கார்களைப் பார்க்கும்போது, எனக்கு பிடித்த நிறங்களில் வரும் கார்களையும், வழியில் தென்படும் எனக்கு பிடித்த வீடுகளையும் பார்த்து, ‘இன்னும் பத்து ஆண்டுகளில் நடிகனான பிறகு இதுபோன்ற வீடுகளையும், கார் களையும் வாங்கிவிடுவேன்’ என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நடந்து செல்வேன். அவையெல்லாம் இன்று நடந்துவிட்டன.

நான் போகும் இடத்தை பற்றிய விவரங்களை வழியில் போகின்றவர்களிடம் விசாரித்துக் கொண்டே செல்வேன். மூன்றுமாத காலம் வேலை தேடி சென்னையில் அலைந்தேன். காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் பியுசி வரை படித்தேன். அதில் தேர்ச்சி அடையவில்லை. டைப் ரைட்டிக்கும் படிக்கவில்லை. எந்தவித தகுதியும் இல்லாத எனக்கு எப்படி வேலை கிடைக்கும். என் தலையில் சேகரித்து இருந்த அறிவே சினிமாவைப் பற்றிய புள்ளி விவரங்களும், தமிழக அரசியலை பற்றிய சிறிதளவு அறிவும் தான்.

Next Story