அரசியலுக்கு வந்திருந்தால் ‘‘நான் முதல்–அமைச்சர் ஆகி இருப்பேன்’’ டைரக்டர் பாரதிராஜா பேட்டி


அரசியலுக்கு வந்திருந்தால் ‘‘நான்  முதல்–அமைச்சர்  ஆகி  இருப்பேன்’’ டைரக்டர் பாரதிராஜா பேட்டி
x
தினத்தந்தி 21 July 2018 11:30 PM GMT (Updated: 21 July 2018 7:27 PM GMT)

நான் அரசியலுக்கு வந்து இருந்தால், முதல்–அமைச்சராகி இருப்பேன் என்று டைரக்டர் பாரதிராஜா கூறினார்.

பாரதிராஜா டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘ஓம்.’ இந்த படத்தில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருக்கிறார். இது தொடர்பாக அவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘‘நான் 45 வருடங்களுக்கு மேலாக நிறைய படங்கள் டைரக்டு செய்துள்ளேன். பாண்டியநாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறேன். ‘அன்னக்கொடி’ படத்துக்கு பிறகு ஒரு நல்ல கதை கிடைத்தது. அதை திரைக்கதையாக விரிவுபடுத்தி, ‘ஓம்’ என்ற பெயரில் டைரக்டு செய்துள்ளேன். 

இந்த படத்தில் நானே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறேன். நட்சத்திரா என்ற புதுமுகம் கதாநாயகியாக வருகிறார். ஒரு எழுத்தாளரை பற்றிய கதை, இது. அந்த எழுத்தாளரின் மகன் லண்டனில் படிக்கிறான். எழுத்தாளரையும் லண்டனுக்கு அழைத்து தன்னுடன் தங்க வைக்கிறார். அப்போது சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. 

இதனால் எழுத்தாளர் தன் மகனை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது வழியில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஒரு இளம் பெண்ணை காப்பாற்றி, ‘‘10 நாட்கள் என்னுடன் பயணப்படு. அதன்பிறகும் வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் நானே உன்னை கொன்று விடுகிறேன்’’ என்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதிக்கிறாள். அந்த 10 நாட்கள் பயணம்தான் கதை. காதல் என்பதற்கும் மேலான ஒரு உணர்வை இந்த படம் பிரதிபலிக்கும். காதலை வித்தியாசமான இன்னொரு பரிமாணத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன்.

இப்போது தமிழ் சினிமாவுக்கு வரும் இளம் தலைமுறையினர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். 12 இயக்குனர்களின் திறமைகளை பார்த்து வியக்கிறேன். டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருக்கிறது. அதனை அரசிடம் வற்புறுத்துவேன். தொடர்ந்து படங்கள் டைரக்டு செய்வேன். ஒரு அரசியல் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. பெரிய பதவி தருவதாகவும் கூறினார்கள். எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி மறுத்து விட்டேன்.

நான் அரசியலுக்கு வந்து இருந்தால், முதல்–அமைச்சராகி இருப்பேன். முன்பெல்லாம் சினிமாவில் தமிழ் நடிகைகள் இருந்தனர். இப்போது இல்லை. கேரளா, மும்பை, கர்நாடகாவில் இருந்து நடிகைகளை அழைத்து வருகிறார்கள். இது வருத்தமான வி‌ஷயம். தனுஷ், சிம்பு திறமையானவர்கள். நடிகைகளில் நயன்தாரா சிறப்பாக நடிக்கிறார். தமிழ் கலாசாரம் சார்ந்த பொலிவும் அவர் முகத்தில் இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.’’

இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

Next Story