சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார் + "||" + Cinema Question-Answer! : Kuruviyar

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில், விஜய் ஒரு படத்தில் நடிப்பாரா? ‘சர்கார்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படம் எது, அந்த படத்தை தயாரிப்பவர் யார், இயக்குபவர் யார்? (கே.ரங்கநாதன், ஸ்ரீரங்கம்)


கவுதம் வாசுதேவ் மேனன், விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னார். அந்த கதை விஜய்க்கு பிடித்து இருந்தது. ஏனோ அந்த படம் கைவிடப்பட்டு விட்டது. விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிப்பவர், கல்பாத்தி அகோரம். இந்த படத்தின் டைரக்டர், அட்லீ!

***

காஜல் அகர்வாலிடம் போய், ‘‘ஐ லவ் யூ’’ என்று சொன்னால் என்ன செய்வார்? (ப.வெற்றிவேல், சேலம்)

சிரித்துக்கொண்டே ‘‘நன்றி’’யை ஆங்கிலத்தில் தெரிவிப்பார்!

***

திரிஷா வெளிநாடுகளுக்குப் போய் உயிர் பணயம் வைக்கிற விளையாட்டுகளில் ஈடுபடுகிறாரே...அவருக்கு பயம் என்பதே கிடையாதா? (ஏ.அகமது ஷெரீப், செய்துங்க நல்லூர்)

பயந்தால், பதினைந்து வருடங்களாக திரையுலகில் அவர் நடித்துக் கொண்டிருக்க மாட்டார். பயம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கக் கூடியவர், திரிஷா! எங்கும் எதிலும் துணிச்சல் மிகுந்தவர், அவர்!

***

சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது? அந்த படத்தின் கதாநாயகி யார்? டைரக்டர் யார்? (ரா.சுந்தரபாண்டியன், மதுரை)

சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், ‘என்.ஜி.கே.’ அந்த படத்தில் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். செல்வராகவன் டைரக்டு செய்திருக்கிறார். படம், தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது!

***

உதயநிதி ஸ்டாலின் இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (சாம்சன் ராஜசேகர், மயிலாடுதுறை)

உதயநிதி ஸ்டாலின் இதுவரை 11 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடைய 12-வது படம், (கண்ணே கலைமானே) இப்போது படப்பிடிப்பில் இருக்கிறது!

***

பிரபுதேவா டைரக்‌ஷனில் நயன்தாரா எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (எம்.ஸ்டீபன் பால்ராஜ், தூத்துக்குடி)

பிரபுதேவா டைரக்‌ஷனில், ‘வில்லு’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நயன்தாரா நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தில் நடித்த கோபிகா இப்போது என்ன செய்கிறார்? (ஆர்.பூவரசன், ரெட்டியார்பட்டி)

கோபிகா, கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்!

***

குருவியாரே, நடிகர் அர்ஜுன் ஒரு பக்தி படத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக நடிப்பாரா? (கே.ஸ்ரீதர்ராஜன், வால்பாறை)

அர்ஜுன், மிக தீவிரமான ஆஞ்சநேயர் பக்தர் என்பதால் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வேடத்தை பக்தி பரவசத்துடன் ஏற்றுக்கொண்டு நடிப்பார்!

***

குருவியாரே, நகைச்சுவை நடிகராக பிரபலமான பின், கதாநாயகனாக நடித்த நடிகர்கள் யார்-யார்? (பி.மார்த்தாண்டன், நாகர்கோவில்)

சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, வடிவேல், சந்தானம்!

***

நடிகை ரூபினி எங்கே வசிக்கிறார்? அவர் மறுபடியும் நடிக்க வருவாரா? (சா.கோவிந்தராஜ், ஈரோடு)

ரூபினி, மும்பையில் வசிக்கிறார். அவர் மீண்டும் நடிக்கலாமா என்று நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்!

***

குருவியாரே, நித்யா மேனன் எந்த மொழி படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்? (எம்.சசிகுமார், வேலூர்)

மலையாள படத்தில் அறிமுகமாகி, தமிழ் படங்கள் மூலம் பிரபலமான நித்யா மேனன் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் மலையாள படங்களே அதிகமாக உள்ளன!

***

ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் பெயர்களே திரும்ப திரும்ப வருகிறதே...இதனால் பழைய படமா அல்லது புது படமா? என்ற குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவு வருமா? (பி.முனுசாமி, திண்டுக்கல்)

திரைப்பட சங்கங்கள் தொடர்பான இந்த பிரச்சினைக்கு அந்த சங்கங்களே முடிவு கட்ட வேண்டும்!

***

குருவியாரே, சிவகார்த்திகேயன் மீது ஸ்ரீதிவ்யாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறதாமே...உண்மையா? (எல்.வசீகரன், கோபிச்செட்டிப்பாளையம்)

“அதற்கு பெயர், ஈர்ப்பு அல்ல...நட்பு” என்று கூறுகிறார், ஸ்ரீதிவ்யா!

***

குருவியாரே, ‘கயல்’ பட நாயகி ஆனந்திக்கு புதிய தமிழ் பட வாய்ப்புகள் இருக்கிறதா? அவர் எந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்? (சி.பிரவீன்குமார், துவரங்குறிச்சி)

ஆனந்தி தற்போது, ‘பதியேறும் பெருமாள்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் கைவசம் 2 புதிய படங்கள் உள்ளன!

***

ஒரு கால கட்டத்தில், தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனர்களாக இருந்த டி.பி.கஜேந்திரன், செந்தில் நாதன் ஆகிய இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? (வி.அரவிந்த் குமார், புதுச்சேரி)

டி.பி.கஜேந்திரன், நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். செந்தில் நாதன், ‘நாயகி’ என்ற டி.வி. தொடரில் நடித்து வருகிறார்!

***

அஞ்சலி திகில் படங்களில் விரும்பி நடிக்கிறாராமே...அதற்கு என்ன காரணம்? (எஸ்.பி.சாமிநாதன், கோவில்பட்டி)

அவர் நடித்த ஒரு தெலுங்கு திகில் படம் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது. அதில் இருந்து அஞ்சலி ‘திகில் பட விரும்பி’ ஆகிவிட்டார்!

***

குருவியாரே, ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன், சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறாரே... அவர் முழு நேர நடிகராக மாறிவிட்டாரா? (ஜே.கே.மதன், பொள்ளாச்சி)

சூப்பர் சுப்பராயன் தனது வாரிசாக மகன் திலீப் சுப்பராயனை ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்கி விட்டார். தன்னை வில்லன் நடிகராக மாற்றிக் கொண்டு சில படங் களில் நடித்து வருகிறார்!

***