சினிமா செய்திகள்

ஆலியா பட்டின் அசுர பாய்ச்சல்.. + "||" + Alia bhatt in furious action

ஆலியா பட்டின் அசுர பாய்ச்சல்..

ஆலியா பட்டின் அசுர பாய்ச்சல்..
பிரபல இந்தி சினிமா டைரக்டர் மகேஷ் பட்- நடிகை சோனி ராஸ்தானி தம்பதிகளின் மகள் ஆலியா பட்.
ஆலியா பட், பாலிவுட் திரை உலகில் அசுர வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார். 25 வயதான இவரை திரை உலகிற்கு அறிமுகமான நேரத்தில், ‘அறிவுஜீவியான அப்பாவுக்கு பிறந்த மக்கு மகள்’ என்று வர்ணித்தார்கள். பொறுப்பற்ற முறையில் கண்டதையும் பேசியதால் அப்படி சொல்லப்பட்டவர், இப்போது அப்பாவின் பெயரை காப்பாற்றும் விதத்தில் தானும் அறிவும், ஆற்றலும் நிறைந்த நடிகை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ‘ராஸி’ என்ற படத்தின் வெற்றி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது. அவர் சொல்கிறார்:


நான் பிளஸ்-டூ படிப்பை முடித்துவிட்டு, நாடகத் துறை சார்ந்த பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கும் முனைப்பில் இருந்தபோது என்னை கரண்ஜோகர் ‘ஸ்டூடன்ட் ஆப் தி இயர்’ படத்தில் நடிக்க அழைத்தார். நானும் அதை ஏற்றுக்கொண்டு நடித்தேன். அந்த படம் வெளியான உடனே ‘டூ ஸ்டேட்ஸ்’ ஒப்பந்தமானது. அப்படியே நான் நடிகையாகிவிட்டேன். பல நடிகைகள் திட்டமிட்டு சினிமாவில் நடிக்க வருவார்கள். என் விஷயத்தில் அதற்கு நேர்மாறாக நடந்துவிட்டது.

ராஸி படத்திற்காக என்னையே நான் பலவிதங்களில் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய திருந்தது. காஷ்மீர் பெண்ணாக நடித்ததால், உருது பேச பயிற்சி எடுத்துக்கொண்டேன். ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஜோம்கா வகை ஜீப்பினை ஓட்ட ரொம்ப சிரமப்பட்டு பயிற்சி எடுத்தேன். காலை ஏழு மணி முதல் அதை ஓட்டுவதற்காக பயிற்சி எடுத்துவிட்டு, அதன் பின்புதான் தினமும் ஷூட்டிங் நடந்தது. நான் நாட்டிற்காக உளவு பார்க்கும் பெண்ணாக நடித்ததால், உளவுத் தகவல்களை பரிமாற ரகசிய சங்கேத மொழி ஒன்றை கற்றேன். அது படங்களையும், புள்ளிகளையும் கொண் டது. ஷூட்டிங் நடைபெற்ற காலகட்டத்தில் தினமும் கனவிலும் அந்த புள்ளிகளும், படங்களும்தான் வந்து கொண்டிருந்தன.

நடிகைகளுக்கு சினிமா மூலம் பணம், புகழ், அந்தஸ்து போன்றவை கிடைக் கிறது. அவைகள் மீது எனக்கு எல்லை மீறிய காதல் எதுவும் இல்லை. ஆனால் சினிமாவில் நாம் வெவ்வேறு கதாபாத் திரங்களில் வாழ்வோம். நாம் கற்பனை செய்து பார்க்காத அந்த கதாபாத்திர வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது. புதுமையான அந்த சினிமா வாழ்க்கையை நான் நன்றாக ரசித்து அனுபவிக்கிறேன். ஒரு ஜென்மத்தில் பல கதாபாத்திரங்களாக வாழும் வாழ்க்கை என்னை எப்போதும் சந்தோஷமாகவைத்திருக்கிறது.

நான் நடிகையானபோது அம்மா, ‘நீ ஒரு போதும் கர்வம் அடைந்துவிடக்கூடாது’ என்றார். என்னை சராசரியான பெண்ணாக காட்டிக்கொண்டால் ரசிகர்கள் மனதில் எளிதாக இடம் பிடிக்க முடியும் என்றும் சொன்னார். அம்மா நடிப்பு மற்றும் டைரக்‌ஷன் ஆகிய இரண்டு துறைகளில் அனுபவம் பெற்றவர். அதனால் அம்மா சொன்னதை நான் வேதவாக்காக எடுத்துக்கொண்டேன். எனது தந்தையின் வார்த்தைகள் கடுமையானதாக இருக்கும். அவை மற்றவர்களை காயப்படுத்திவிடும். அதனால் தந்தையை போல் நான் பேசுவதில்லை. எனது அக்காள் பூஜா பட்டை நான் ‘பூஜ்’ என்று அழைப்பேன். அவள் மிகுந்த அன்பானவள். ‘நீ சிறந்த நடிகையாகவேண்டும் என்றால், நடிப்பின் மீது உனக்கு தீராத காதல் இருக்கவேண்டும்’ என்றார்.

அமீர்கானும், பூஜா பட்டும் இணைந்து நடித்த வெற்றிப்படம் ‘தில் ஹே கி மான்தா நஹி’. அதில் அக்காள் நடித்த கேரக்டரில் என்னை நடிக்க வைத்து ரீமேக் செய்ய, அவள் விரும்புகிறாள். 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த படம் சூப்பர் ஹிட்டானது. இருவரும் அப்போது சூப்பர் ஜோடியாக வலம் வந்தார்கள். அக்காள் நடித்த வேடத்தில் நான் இப்போது நடிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

எனது தந்தை தயார் செய்யும் படங்கள் எல்லாம் அதிகம் மசாலா கலந்தவை. அவர் எனது தந்தை என்பதால், அவர் தயார் செய்யும் அத்தைகய படங்களில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகவில்லை என்று நினைக்கிறேன். மர்டர் போன்ற படங்களில் கதாநாயகியாக நடிக்கும் பக்குவமும் எனக்கு இன்னும் வரவில்லை.

இ்ந்தி திரை உலகில் நடிகைகளிடம் இருக்கும் போட்டியை நினைத்து எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. எனக்கும், பரிநிதி சோப்ராவுக்கும், ஷ்ரத்தா கபூருக்கும் போட்டி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.