கனவு உலகத்தில் வாழும் கன்னிப் பெண்கள்


கனவு உலகத்தில் வாழும் கன்னிப் பெண்கள்
x
தினத்தந்தி 22 July 2018 8:19 AM GMT (Updated: 22 July 2018 8:19 AM GMT)

பெண்களிடம் திரை உலகில் மின்னும் ஆசை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அழகாக இருக்கும் பெண்கள் அதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

 குறைந்த வயதில் நிறைய பணமும், புகழும் சம்பாதிக்க திரை உலகம் ஏற்றது என்ற கருத்து அவர்களிடம் வலுப்பெற்றிருக்கிறது. அதனால் படிக்கவேண்டிய வயதில் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறைகிறது. கல்வி மீதான நம்பிக்கையும் குறைகிறது.

திரைப்பட கல்லூரிகள், விளம்பர துறை, மாடலிங் துறை போன்று எங்கு பார்த்தாலும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏதேனும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் படிப்பைக்கூட பாதியில் விட்டு விடுகிறார்கள். பணம், புகழ் எல்லாவற்றையும் வேகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு வகை பதற்றம் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

தங்களது பிள்ளைகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக இன்னொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்காக கல்வி, திருமணம் போன்றவைகளை தள்ளிப்போடவும் தயாராக இருக்கிறார்கள். நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து கற்கவேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அங்கு கற்கும்போதே நட்சத்திரமாகிவிட்டதைப் போன்று கனவு காண்கிறார்கள். அந்த கனவு வாழ்க்கைதான் இப்போது நிறைய பேருக்கு பிடித்தமானதாக இருக்கிறது. யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு குறைவாகத்தான் இருக்கிறது. கனவிலே வாழ்க்கை நடத்துகிறார்கள் பல கன்னிப்பெண்கள்.

பல பெண்களை பெற்றோர்களே சினிமாவில் திணிக்கிறார்கள். குழந்தையாக இருக்கும்போதே விளம்பரங்களில் நடிக்க விடுகிறார்கள். படிப்பு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அதோ அந்த டி.வி. விளம்பரத்தில் வருவது என் பெண்தான் என்று பலரிடமும் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி கிடைக்கிறது. கல்வி என்பது எதிர்காலத்தின் அஸ்திவாரம். இதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொண்டால்தான் பின்பு குழந்தைகளுக்கு புரியவைக்க முடியும்.

சினிமா மோகம் சிறுவயதிலே குழந்தைகளிடம் ஏற்பட பெற்றோரின் நடவடிக்கைகளும், குடும்பச் சூழலும் ஒரு காரணம். இப்போதெல்லாம் குழந்தைகள் தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளத்திலும்தான் கண் விழிக்கிறார்கள். வெகு நேரம் அதிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். பெற்றோர்களும் விட்டது தொல்லை என்று கருதி, அதை தடுக்க முன் வருவதில்லை. அதன் மூலம் கண் பாதிக்கப்படுகிறது. அறிவு வளர்ச்சியடைவதில்லை. ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. வெளி உலக தொடர்பும் இல்லாமல் போகிறது. திரைக்காட்சிகளுக்குள்ளே மூழ்கி கிடக்கும்போது எதிர்கால ஆர்வமும் அதை சுற்றித்தான் ஏற்படுகிறது. அவர்களிடம் வயதுக்கு மீறிய பேச்சு இருக்கிறது. அதை அறிவு என்று வகைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அறிவு என்பது சிந்திக்கும் திறனையும், எதிர்கால சரியான திட்டமிடுதலையும் உள்ளடக்கியது.

முன்பு சர்க்கஸில் மிருகங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அவை மனிதன் கற்றுக்கொடுத்ததை அப்படியே திருப்பிச் செய்யும். அது அறிவல்ல, பழக்கம். அதுபோல் குழந்தைகளுக்கும் தேவையில்லாதவைகளை கற்றுக்கொடுத்து, பழக்கப்படுத்தக்கூடாது. குழந்தைகளால் இந்த உலகத்தில் இருந்து நிறைய அனுபவங்களை பெறமுடியும். அவைகளை குழந்தைகள் பெற வழிகாட்டவேண்டும். திரை கவர்ச்சிக்குள் குழந்தைகளை சிக்கவைக்க வழிகாட்டக்கூடாது.

ஆண்களுக்கும் சினிமா ஆசை உண்டு. ஆனாலும் அதிக சினிமா தாக்கம் பெண்களுக்குத்தான் ஏற்படுகிறது. சிறுவயதிலேயே அவர்கள் தங்களை சினிமா நடிகைகளைபோல் பாவித்துக்கொண்டு, அவர் களைப் போலவே மாற நினைக்கிறார்கள். உடலை வெளிக்காட்டும் கவர்ச்சி உடைகளை சினிமாவிற்கு உண்டான ஒரு தகுதியாக கருதுகிறார்கள். விதவிதமான சிகை அலங்காரம், ஒப்பனைகள் என்று தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். எந்த அளவு இவை எல்லாம் அவர்கள் எதிர்காலத்தை வளப்படுத்த உதவும் என்பதற்கு எந்த முன்னுதாரணமும் இல்லை.

கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகைகளைப் பார்த்து கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டிருந்த பல பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் திருமணமும் நடக்காமல், வேறு வேலைக்கும் போக முடியாமல் சினிமா ஆசையும் நிறைவேறாமல் அந்தரத்தில் நின்று விடுகிறார்கள். இதுதான் பரிதாபம். வயதுக்கு மீறிய பேச்சு, வயதுக்கு மீறிய ஒப்பனை இது மட்டுமே சினிமா தகுதியல்ல. அப்படியே எல்லா தகுதிகளும் இருந்தாலும் எல்லோருக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைத்துவிடும் என்று சொல்லவும் முடியாது.

பெண்களின் வாழ்க்கையில் சினிமா கட்டாயம் இல்லை.. ஆனால் கல்வி கட்டாயம்.. 

Next Story