ரூ.37 லட்சம் கையாடல் புகார்: பாக்யராஜுக்கு விசு கண்டனம்


ரூ.37 லட்சம் கையாடல் புகார்: பாக்யராஜுக்கு விசு கண்டனம்
x
தினத்தந்தி 25 July 2018 11:30 PM GMT (Updated: 25 July 2018 9:06 PM GMT)

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு மீது மோசடி புகார் அளித்து இருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஆரம்பித்து ரூ.37 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என்றும், முன்னாள் தலைவரும் திரைப்பட இயக்குனருமான விசு, முன்னாள் செயலாளர் பிறைசூடன், அறங்காவலர் மதுமிதா ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு பதில் அளித்து இயக்குனர் விசு கூறியிருப்பதாவது:–

‘‘எனக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறேன். இயக்குனர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்குச் சென்று என் மீது பண மோசடி புகார் அளித்து இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அறக்கட்டளையில் எந்த மோசடியும் நடக்கவில்லை. பணம் கையாடல் செய்யப்படவும் இல்லை.

அந்த பணம் வங்கியில் பத்திரமாக இருக்கிறது. அதில் வரும் வட்டியில் நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. பாக்யராஜ் என்மீது போலீசில் புகார் அளித்ததன் மூலம் மனிதாபிமானம் செத்துப்போய் விட்டதாக நினைக்கிறேன். ஆண்டவன் கருணையால் உடல்நலம் தேறி திரும்பி வருவேன். அப்போது இந்த மோசடி புகாரை எதிர்த்து நிற்பேன்.

நான் நாணயத்தோடு பிறந்தவன். நிறைய பேருக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். நேர்மையாக வருமான வரி கட்டுகிறேன். சங்க அறக்கட்டளையில் இருந்து ஒரு பைசா கூட எடுத்தது இல்லை.’’

இவ்வாறு விசு கூறியுள்ளார்.

Next Story