விவசாய வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி உதவி நடிகர் சூர்யா வழங்கினார்


விவசாய வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி உதவி நடிகர் சூர்யா வழங்கினார்
x
தினத்தந்தி 26 July 2018 12:03 AM GMT (Updated: 26 July 2018 12:03 AM GMT)

விவசாய வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி உதவியும், விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் நடிகர் சூர்யா வழங்கினார்.

சென்னை,

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து உள்ளார். இந்த படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, இயக்குனர்கள் பாண்டிராஜ், இரா.சரவணன், நடிகைகள் சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, விஜி சந்திரசேகர், பானுப்பிரியா, மவுனிகா, இசை அமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விவசாயத்தில் சாதனை படைத்த நெல் ஜெயராமன், ஆலங்குடி ஆர்.பெருமாள், திருவலஞ்சுழி சேகர், விதை நெல் விஜயலட்சுமி, மரம் தங்கசாமி மகன் கண்ணன் ஆகிய 5 பேருக்கு நடிகர் சூர்யா தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும், அவர் விவசாய வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி உதவியும் வழங்கினார்.

இதையடுத்து நடிகர் சூர்யா பேசியதாவது:-

தமிழ்நாட்டில் டாக்டர்கள், என்ஜினீயர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான விஷயமாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்புதான். எங்களைவிட அதிகமாக வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள்தான். அதனால் தான் ரூ.1 கோடியை அவர்களுக்கு வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, ‘நாங்கள் தற்போது ‘ஸ்டாப்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் ஒயிட் சுகரின் பயன்பாட்டை நிறுத்துவது, மஞ்சளை நமது தினசரி வாழ்க்கையில் எடுத்து வருவது போன்ற பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், தானியங்களின் முக்கியத்துவம் பற்றியும் இந்த அமைப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும்’ என்றார்.

விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேரை தேர்வு செய்த ‘கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குனர் இரா.சரவணன் பேசும்போது, விவசாயத்தில் சாதனை படைத்த இந்த 5 பேரும், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள்தான்.

விவசாய வளர்ச்சிக்காகவும், விவசாயிகளுக்கு உதவவும் நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதி உதவி அறிவித்து இருக்கிறார். இன்னும் பல கோடி ரூபாய் வரை செலவு செய்து விவசாயிகளுக்கு உதவ அவர் திட்டமிட்டு உள்ளார்’ என்றார். 

Next Story