நடிகைகளின் கவர்ச்சி உடைகள் பற்றி கமல்ஹாசன் விளக்கம்


நடிகைகளின் கவர்ச்சி உடைகள் பற்றி கமல்ஹாசன் விளக்கம்
x
தினத்தந்தி 31 July 2018 11:30 PM GMT (Updated: 31 July 2018 7:56 PM GMT)

நடிகைகளின் கவர்ச்சி உடைகள் பற்றி நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ள நடிகைகளில் சிலர் கவர்ச்சி ஆடைகளில் வருவதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இதில் கலந்து கொண்டுள்ள வில்லன் நடிகர் பொன்னம்பலம் கலாசார உடைகள் அணியும்படி நடிகைகளிடம் வற்புறுத்தினார். கமல்ஹாசனிடமும் இதுபற்றி அவர் பேசினார். 

‘‘கலாசாரத்தின்படியே நாம் நடக்க வேண்டும். பொங்கல் மாதிரி பண்டிகைகளை வேட்டி கட்டித்தான் கொண்டாடுகிறோம். விருந்துக்கு தனி ஆடைகள் இருக்கிறது. நம்மை சுற்றி உள்ள ஊரும் உலகமும் என்ன நினைக்கிறதோ? அதுதான் கலாசாரம்’’ என்றார். இதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசியதாவது:–

‘‘நீங்கள் ஆடையில்தான் கலாசாரம் இருக்கிறது என்கிறீர்கள். நான் சரியாக உடை அணிந்து இருப்பதாக நினைக்கிறேன். ஒரு வி‌ஷயம் இங்கு சொல்கிறேன். நூறு நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை ஜாக்கெட் அணியாத பெண்களே அதிகம் இருந்தார்கள். அதன்பிறகும் அது தொடர்ந்தது. நானே கூட சிறுவயதில் அவர்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் எனக்கு தெரிந்து நல்லவர்கள்தான். 

என் பாட்டி அவருடையை 28 வயதில் கணவரை இழந்தார். முடியை மழித்து முக்காடு போட்டுக்கொண்டு 95 வயதுக்கும் மேலாக அவர் வாழ்ந்தார். அவரை நான் பார்த்து இருக்கிறேன். அதே சமயம் கணவரை இழந்து வெளிஉலகுக்கு வந்த இந்திரா காந்தியையும் பார்த்து இருக்கிறேன். பாட்டியோ படிக்கிற பையனுக்கு எதிராக கூட போகமாட்டார். இந்திரா காந்தியோ ஐ.நா சபைக்கே போய் பேசிவிட்டு வந்தார். 

இதை எப்படி பார்ப்பீர்கள்? ஆடை என்பதற்கும் கலாசாரம் என்பதற்கும் எந்த ஒற்றுமையும் இருப்பதாக தெரியவில்லை. இப்படியெல்லாம் சொன்னால் ஒரு பெண் என்னதான் செய்யமுடியும்? இங்கே இருக்கும் யாஷிகா எனக்கு சுருதியாகத்தான் தெரிகிறார். எனது இரண்டு மகள்களின் ஆடை வி‌ஷயத்தில் நான் எதுவும் சொல்வது இல்லை. அது பார்ப்பவர்களின் கண்களை பொருத்தது.’’

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Next Story