‘‘இளையராஜா இசையில் நடித்தது பெருமை’’ –விக்ரம் பிரபு


‘‘இளையராஜா இசையில் நடித்தது பெருமை’’ –விக்ரம் பிரபு
x
தினத்தந்தி 1 Aug 2018 10:45 PM GMT (Updated: 2 Aug 2018 5:19 AM GMT)

இளையராஜா இசையில் நடித்தது பெருமையாக இருக்கிறது என்று நடிகர் விக்ரம் பிரபு கூறினார்.

விக்ரம் பிரபு நடித்துள்ள புதிய படத்துக்கு ‘60 வயது மாநிறம்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். வி.கிரியே‌ஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தை ராதாமோகன் டைரக்டு செய்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். 

படம் பற்றி விக்ரம் பிரபு கூறும்போது, ‘‘மொழி படத்தை அனுபவித்து பார்த்து அந்த படத்தை இயக்கிய ராதாமோகனை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தேன். இப்போது அவர் இயக்கத்திலேயே நடித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது தாத்தா, அப்பா படங்களுக்கு இசையமைத்த இளையராஜா இப்போது எனது படத்துக்கும் இசையமைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது. வளரும் நடிகரான நான் திறமையான இயக்குனர்கள் அனைவருடைய படங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜாலியாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது’’ என்றார்.

டைரக்டர் ராதாமோகன் கூறும்போது, ‘‘கன்னட படத்தின் கருவை மட்டும் எடுத்து புதிய திரைக்கதையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். தந்தைக்கும், மகனுக்கும் உள்ள உறவை சித்தரிக்கும் படமாக தயாராகி உள்ளது. இளையராஜா ஒரு பாடலை பாடி இருக்கிறார்’’ என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.தாணு, ‘‘மொழி படத்தை பார்த்த பிறகு ராதாமோகனை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று எனக்குள் இருந்த ஏக்கம் இப்போது நிறைவேறி இருக்கிறது. எங்கள் தயாரிப்பில் வந்த கிழக்கு சீமையிலே படம் போல் இந்த படமும் சிறந்த படமாக அமையும்’’ என்றார். 

Next Story