‘இந்தியன்–2’ படத்தில் நடிப்பது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்


‘இந்தியன்–2’ படத்தில் நடிப்பது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்
x
தினத்தந்தி 2 Aug 2018 10:45 PM GMT (Updated: 2 Aug 2018 5:56 PM GMT)

இந்தியன்–2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் கமல்ஹாசன். அப்போது அரசியல் சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். இந்தியன்–2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று கேட்டபோது கமல்ஹாசன் கூறியதாவது:–

‘‘இந்தியன் படத்துக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பலவருடங்களுக்கு முன்பே நான் விரும்பினேன். அதை இயக்குனர் ‌ஷங்கரிடமும் வெளிப்படுத்தினேன். ஆனால் ‌ஷங்கருக்கு தயக்கம் இருந்தது. வெற்றி பெற்ற படத்தை எதற்காக மாற்றி எடுக்க வேண்டும் என்று யோசித்தார். 

நான் அவரிடம், நீங்கள் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்கவில்லை என்றால் அந்த தலைப்பை என்னிடம் தந்து விடுங்கள் நான் எடுக்கிறேன் என்று கூறினேன். அதன்பிறகு சமீப காலமாக அரசியல் சம்பந்தமாக நான் பதிவிடும் கருத்துக்களை பார்த்த பிறகு இந்தியன்–2 படத்தை எடுக்கலாம் என்று அவருக்கு எண்ணம் ஏற்பட்டது. 

என்னுடையை அரசியல் பிரவேசம் என்ற புள்ளியில் இருவரும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை எடுக்க தயாராகி உள்ளோம். அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதை மனதில் வைத்தே இந்த படத்தில் நடிக்கிறேன்.’’

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Next Story