‘‘சினிமாவுக்கு தணிக்கை குழு தேவை இல்லை’’ –கமல்ஹாசன்


‘‘சினிமாவுக்கு தணிக்கை குழு தேவை இல்லை’’ –கமல்ஹாசன்
x
தினத்தந்தி 3 Aug 2018 11:30 PM GMT (Updated: 3 Aug 2018 7:44 PM GMT)

திரைப்படங்களுக்கு தணிக்கை குழு தேவை இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

‘விஸ்வரூபம்–2’ படத்தை விளம்பரப்படுத்த ஐதராபாத் சென்ற கமல்ஹாசன் அங்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘‘நடிகர்களை தேர்வு செய்வது, அவர்களை உருவாக்குவது என்று இரண்டு விதத்தை சினிமாவில் பார்க்கலாம். பாலசந்தர் நடிகர்களை உருவாக்கினார். மண் பொம்மைகளைகூட தேவதைகளாக மாற்றினார். அவருடையை தொழில் யுக்தி எனக்கு பிடிக்கும். சினிமாவை நேசிப்பவர்களால் மட்டும்தான் அவர் மாதிரி இருக்க முடியும். 

கேரவனில் தங்குவது, மேக்கப் போடுவதெல்லாம் நடிப்பு இல்லை. நடிப்பு பயிற்சி எடுக்க வேண்டும். டைரக்டர் எதிர்பார்க்கும் நடிப்பை கொடுக்க வேண்டும். இந்திய சினிமா உலக தரத்துக்கு உயர்ந்து இருக்கிறது. திறமையான கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். விஸ்வரூபம்–2 படமும் உலக தரத்திலான படமாக இருக்கும். 

முதல்  பாகத்தின் கதை வெளிநாட்டில் நடந்தது. இரண்டாம் பாகம் இந்தியாவில் நடக்கிற கதை. சில பிரச்சினைகளால் இந்த படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. முதல் பாகம் படத்துக்கு எதிர்ப்புகள் வந்தன. இரண்டாம் பாகத்துக்கு சர்ச்சைகள் ஏற்படாது என்று நம்புகிறேன். இந்த தலைமுறையினருக்கும் ஏற்ற படமாக இது இருக்கும். 

சினிமாவுக்கான ஆயுள் 3 வாரங்கள்தான். பிறகு அந்த படத்தை மறந்து விடுவார்கள். ஆனால் விஸ்வரூபம் முதல் பாகத்தை ரசிகர்கள் இப்போதும் ஞாபகம் வைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது. விஸ்வரூபம் 3–ம் பாகத்தை எடுப்பது பற்றி சிந்திக்கவில்லை. திரைப்படங்களுக்கு தணிக்கை குழு தேவை இல்லை என்பது எனது கருத்து. இந்த கோரிக்கையை ஏற்கனவே வற்புறுத்தியும் நிறைவேறவில்லை. எனக்கு பணம், புகழ் எல்லாவற்றையும் மக்கள் கொடுத்தனர். அவர்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்.’’

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Next Story