படம் லாபம் ஈட்டுவது வரை சம்பளம் வாங்காத அமீர்கான்


படம் லாபம் ஈட்டுவது வரை சம்பளம் வாங்காத அமீர்கான்
x
தினத்தந்தி 9 Aug 2018 11:45 PM GMT (Updated: 9 Aug 2018 7:00 PM GMT)

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார் அமீர்கான். இவரது படங்கள் உலகம் முழுவதும் பெரிய வசூல் பார்க்கின்றன.

அமீர்கான் இதனால் அதிக சம்பளம் கேட்பதாகவும் படத்தில் கிடைக்கும் லாபத்திலும் பங்கு கேட்பதாகவும் இந்தி படஉலகில் தகவல் பரவியது. மும்பையில் நடந்த திரைப்பட எழுத்தாளர்கள் சங்க விழாவில் கலந்து கொண்ட அமீர்கானிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்து அமீர்கான் கூறியதாவது:–

‘‘சினிமாவுக்கு தயாரிப்பாளர்கள்தான் முக்கியம். அவர்கள்தான் பணம் போடுகிறார்கள். படம் தோல்வி அடைந்தால் அவர்களுக்குதான் பாதிப்பு வருகிறது. நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் நஷ்டத்தில் பங்கெடுப்பது இல்லை. நான் எப்போதும் தயாரிப்பாளர்கள் பக்கம்தான் இருப்பேன்.

நான் நடித்த படம் திரைக்கு வந்து லாபம் ஈட்டிய பிறகுதான் சம்பளமே வாங்குவேன். அதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்குவது இல்லை. சம்பள முன்பணமும் பெறுவது இல்லை. லகான் படத்துக்கு முன்பு வரை படம் தயாராகும்போதே சம்பளத்தை பெற்று வந்தேன். அந்த படத்துக்கு பிறகுதான் இப்படி ஒரு கொள்கைக்கு மாறினேன்.

எனக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் படம் வெளியாகும் முன்பு எனது விலை மதிப்பில்லா நேரத்தையும் உழைப்பையும் பணயமாக வைத்து இருப்பதை உணர வேண்டும்.’’

இவ்வாறு அமீர்கான் கூறினார்.

Next Story