சினிமா செய்திகள்

என் காலில் விழுந்து வணங்கிய சோ + "||" + Fell on my feet Worshiped Cho

என் காலில் விழுந்து வணங்கிய சோ

என் காலில் விழுந்து வணங்கிய சோ
தேனிக்கு அருகிலுள்ள சின்னமனூர் என்ற ஊரில் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
தேனிக்கு அருகிலுள்ள சின்னமனூர் என்ற ஊரில் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயம் வெளிவந்த படம் ‘பார் மகளே பார்.’ 11.7.1963 அன்று வெளியான இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி, முத்துராமன் உள்பட பலர் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் தான் நகைச்சுவை வேடத்தில் சோ சார் அறிமுகமானார். அதற்கு முன்பே சோ என்கிற நடிகர் பல நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும். ‘பார் மகளே பார்’ படத்திற்குப் பிறகு சோ சார் நடித்த பல படங்களை நான் பார்த்திருக்கிறேன்.

1968-ம் ஆண்டு நான் சென்னைக்கு வந்தேன். சென்னை எழும்பூரில் இருந்த ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். 1969-ம் ஆண்டு சாந்தி தியேட்டரில் படம் பார்க்க நானும், என்னுடைய நண்பர்கள் சிலரும் சென்றிருந்தோம். இயக்குனர் மகேந்திரனும் படம் பார்க்க வந்திருந்தார்.

அந்த சமயத்தில் மகேந்திரன் என்னிடம், ‘சோ சார் இரண்டு பத்திரிகைகள் ஆரம்பிக்கப் போகிறார். ஒன்று தமிழில் ‘துக்ளக்’ என்கிற பெயரிலும், மற்றொன்று ‘பிக்விக்’ என்கிற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியாகப் போகிறது. அதில் நானும் சேர்ந்து பங்காற்றப் போகிறேன். என்னை சோ சார் வரச் சொல்லியிருக்கிறார்’ என்றார்.

‘நிறைகுடம்’ படத்தின் மூலக்கதை மகேந்திரன் எழுதியது. அதன் படப்பிடிப்பு சமயத்தில் தான் சோ சாருடன் மகேந்திரனுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. அதனால் மகேந்திரன் ‘துக்ளக்’ பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றினார். 1970-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி ‘துக்ளக்’ பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களாகிய நாங்கள் ஆவலுடன் அந்த பத்திரிகையை வாங்கிப் படிப்போம்.

அந்த நேரம் திருச்சி களைவ் ஹாஸ்டலில் நடந்த விஷயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த உதயகுமார் என்ற மாணவரின் மரணம் போன்றவற்றை மகேந்திரன் துக்ளக்கில் மிக அருமையாக எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைகள் மக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழ் திரைப்படங்களைப் பற்றி ‘போஸ்ட் மார்ட்டம்’ என்ற பெயரில் மகேந்திரன் கேலியும், கிண்டலும், பாராட்டும் கலந்து கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார். எந்த ஒரு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அந்த நிகழ்ச்சி நடந்த இடத்திற்கே சென்று, புலனாய்வுத் துறையைப் போல் ஆய்வு செய்து, பாரபட்சமில்லாமல் கட்டுரைகளை மகேந்திரன் எழுதி வந்தார். அதை சோ சாரும் அதிகமாக ஊக்குவித்தார்.

மகேந்திரனை பார்ப்பதற்காக துக்ளக் அலுவலகத்திற்கு ஐந்தாறு முறை சென்றிருக்கிறேன். துக்ளக் பத்திரிகை ஆரம்ப காலங்களில் ஆனந்த விகடன் பத்திரிகையின் காம்ப்பவுண்டில் தான் இருந்தது. துக்ளக் பத்திரிகையில் வேலை செய்பவர்கள் அனைவரும் மாலை வேளைகளில் ‘ஷட்டில்காக்’ விளையாடுவார்கள்.

ஒருநாள் துக்ளக் அலுவலகத்தில் நான் உட்கார்ந்திருக்கும் பொழுது, மகேந்திரன் இருக்கும் இடத்திற்கு சோ சார் வந்தார். என்னைப் பார்த்ததும் யாரென்று கேட்டார். அதற்கு மகேந்திரன் ‘என்னுடைய மாமா மகன்’ என்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.

உடனே சோ சார் என்னைப் பார்த்து ‘என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்றார்.

‘எழும்பூரில் உள்ள ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

அந்த சமயத்தில் சோ சாருக்கு தலையில் நிறைய முடி இருக்கும். சோ சார் அலுவலகத்தில் இருக்கும் பொழுது வேலை இல்லாத சமயங்களிலும், அடுத்த அறைகளுக்கு செல்லுகின்ற குறுகிய இடைவெளியிலும் சமஸ்கிருத சுலோகங்களை சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படி அவர் பாடிக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருப்பது, அவருக்கு பழக்கமாகி, நாளடைவில் அதுவே அவரது வழக்கமாகிவிட்டது. அதுதான் அவருடைய மனப்பாட சக்தியையும், நினைவாற்றலையும் வளர்ப்பதற்கு, மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு துணைபுரிந்திருக்கிறது என்பது எனது எண்ணம்.

அதனால் தான் நம்முடைய நாட்டில் அந்தக்காலத்தில் எல்லாவற்றையும் உரைநடையில் எழுதாமல், செய்யுள் நடையிலும், பாடல் வடிவிலும் எழுதிவைத்தார்கள். ஒருவித ராகத்துடன் பாடப்படும் பாடல் எதுவுமே நமக்கு என்றைக்கும் மறக்காது.

ஒருமுறை துக்ளக் பத்திரிகையில் சோ சார் ‘நடிகர் ராஜேஷ், பூனா பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் விரிவுரையாளராக இருப்பதற்குத் தகுதி பெற்றவர்’ என்று எழுதி இருந்தார். பாரபட்சமில்லாமல் எல்லோரையும் மிகக் கடுமையாக விமர்சிக்கும் சோ சார் என்னைப் பாராட்டி எழுதியிருந்தது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். அன்று முதல் அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையான மரியாதை ஏற்பட்டது.

என்னுடைய 50-வது பிறந்த நாள், 60-வது பிறந்த நாள் இரண்டிற்கும் அவரது அலுவலகத்திற்கு சென்று சோ சாரிடம் ஆசி வாங்கினேன். முதல் முறை நான் அவரிடம் காலில் விழுந்து ஆசி வாங்கும்பொழுது, மின்னல் வேகத்தில் அவர் என்னுடைய கால்களைத் தொட்டு வணங்கி எழுந்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

என்னுடைய முக மாறுதலைக் கண்ட அவர், ‘என்னைப் பொறுத்தவரையில் யாரும் யாருடைய காலிலும் விழக்கூடாது. அது எனக்குப்பிடிக்காது, அதுதான் என் கொள்கையும் கூட’ என்றார்.

உடனே நான், ‘நீங்கள் வயதிலும், அனுபவத்திலும் பெரியவர், நான் உங்களிடம் ஆசி வாங்கலாம். நான் ஆசி வாங்கியது ஒன்றும் என் சுயமரியாதைக்கு இழுக்கும் அல்ல, அத்துடன் நான் எதையும் எதிர்பார்த்து, காக்காய் பிடிப்பதற்காக உங்களுடைய காலில் விழவில்லை. இது ஆண்டான் அடிமைபோல் அல்ல’ என்றேன்.

நான் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அவர் அவருடைய கொள்கையில் இருந்து மாறவே இல்லை.

50-வது வயதில் நான் ஆசி வாங்கியவுடன் விடைபெற்றேன். முதல் மாடியிலுள்ள அவரது அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி எனது கார் வரை வந்து, என்னை வழியனுப்பிய அவரது பண்பாடு மிக உயர்ந்தது.

எனது 60-வது வயதில் அவரிடம் ஆசி வாங்கச் சென்றபோது, ‘இந்த முறை அவர் என்னுடைய கால்களைத் தொட்டு வணங்கிவிட முடியாதபடி, நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்’ என்று முடிவுகட்டி இருந்தேன்; ஆனால் முடியவில்லை. நான் அவரது கால்களைத் தொட்டு வணங்கியதும், மின்னல் வேகத்தில் அவர் என் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டார். இந்த விஷயத்தில் அவரை என்னால் வெல்ல முடியவில்லை.

மாதம் ஒருமுறையாவது சோ சாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து விடுவேன். இல்லையென்றால் கைப்பேசியில் தொடர்பு கொண்டாவது பேசிவிடுவேன். ஒவ்வொரு முறையும் நான் அவருடன் கைப்பேசியில் தொடர்பு கொண்டவுடன், இரண்டாவது அல்லது மூன்றாவது முறை ஒலிப்பதற்குள் கைப்பேசியை எடுத்து, ‘சொல்லுங்க சார்’ என்பார்.

‘நான் உங்களைப் பார்க்க வேண்டும்’ என்பேன்.

‘இப்பொழுது எங்கு இருக்கிறீர்கள்?’ என்பார்.

நான், இந்த இடத்தில் இருக்கிறேன் என்றவுடன், ‘15 நிமிடத்திற்குள் வந்து விடுவீர்கள் இல்லையா?’ என்பார்.

‘ஆமாம் சார்’ என்று நான் சொல்லி முடிப்பதற்குள், ‘நான் அலுவலகத்தில் தான் இருக்கிறேன் வாருங்கள்’ என்று கூறி வைத்துவிடுவார்.

தமிழகத்திலுள்ள பெரும் புள்ளிகளில் அவரும் ஒருவர். ஆனால் என்னிடம் கைப்பேசியில் பேசும்போது ஒரு முறைகூட ‘நான் வெளியில் இருக்கிறேன், பிஸியாக இருக்கிறேன். இன்னொரு நாள் பார்க்கலாம்’ என்று கூறியதே இல்லை. இவ்வளவு ஏன் தன்னுடைய கைப்பேசியையோ, தொலைபேசியையோ எடுத்துக் கொடுப்பதற்கு உதவியாளரைக்கூட அவர் வைத்துக்கொண்டதில்லை.

கைப்பேசியை எடுத்தவுடன் ‘சொல்லுங்க சார்’ என்பார். மற்றபடி எல்லோரும் பேசுவதுபோல், நாகரிகம் கலந்த பண்பாட்டுக்காக கேட்கப்படுகின்ற வழக்கமான கேள்விகளான, ‘எப்படி இருக்கின்றீர்கள்?, நல்லா இருக்கீங்களா?, வீட்டிலுள்ளவர்கள் எப்படி இருக்கின்றார்கள்?, இப்பொழுது என்ன படம் பண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள்?, உங்களுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது?’ போன்ற எதையும் கேட்கமாட்டார்.

அதே போல் நானும் அநாவசியமாக தேவையில்லாமல் கேள்விகள் எதையும், யாரிடமும், எப்பொழுதும் கேட்கமாட்டேன். எதற்காக பார்க்க வருகிறேன் என்பதைத் தெளிவாக வருவதற்கு முன்பாக சொல்லிவிடுவேன்.

சோ சார்.. அறையில் வாசல் கதவிற்கு நேர் எதிரே பெரிய மேஜை போட்டு உட்கார்ந்திருப்பார். அவர் வழக்கமாக காக்கி உடையில்தான் இருப்பார். நாம் அறை உள்ளே நுழைந்தவுடன் அவரைப் பார்க்கும் பொழுது, போர் காலத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கிலப்படங்களில் வருகின்ற ராணுவ அதிகாரிகளைப் போல் தோற்றமளிப்பார்.

நம்மைப் பார்த்தவுடன் ‘வாங்க சார்’ என்பார். நான் நேராகச் சென்று அவருக்கு எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்து விடுவேன். பெருந்தலைவர் காமராஜர் போல், யாரையும் ‘உட்காருங்க’ என்று சொல்ல மாட்டார். ‘காபி, டீ எதுவும் சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்க மாட்டார். தண்ணீர் கூட கொடுக்க மாட்டார். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மட்டுமே இங்கு பதிவிடுகிறேன்.

நானே பேச்சை தொடங்குவேன். சில சமயம் அவர் பேசுவார், சில விஷயங்களுக்கு பேசுவார், மற்றபடி வெறும் சிரிப்பு தான் அவரிடமிருந்து வரும். 1990-களின் ஆரம்பத்தில் பெரிய பெரிய அரசியல் தலைவர்களைப் பற்றியும், அரசியல் விஷயங்கள் பற்றியும், என்னிடம் பேசியிருக்கிறார். யாருக்கும் தெரியாத விஷயங்களை என்னிடம் என்னை நம்பி சொல்லியிருக்கிறார். அவைகளை இதில் எழுத இயலாது; எழுதவும் கூடாது.

ஆரம்ப காலங்களில் அவர் அதிகம் பேசினார், நான் குறைவாகப் பேசினேன். கடைசி காலங்களில் நான்தான் கொஞ்சம் பேசினேன். அவர் பேசுவதை அறவே நிறுத்திவிட்டார். நிறுத்திவிட்டார் என்பதை விட குறைத்துக்கொண்டார் என்றுதான் கூற வேண்டும்.

வயதின் முதிர்ச்சியா, அறிவின் முதிர்ச்சியா? வீண் பேச்சு தேவையில்லை என்று இவருடைய வயதுக்காரர்கள் முடிவெடுத்து விடுகிறார்களா? என்பது தெரியவில்லை.

மார்க்ஸியமும், பெரியாரையும், வான சாஸ்திரத்தையும் ஓரளவிற்கு படித்த நான், ஜோதிட சாஸ்திரத்தையும் ஆய்வு செய்தேன். பலரை நேரடியாகச் சந்தித்து, அவர்களிடம் பேட்டி எடுத்து அவைகளை ஒரு புத்தகமாகப் போட்டேன். அந்தப் புத்தகத்தை ஒருநாள் சோ சார் அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் கொடுத்தேன். ‘நேரம் கிடைக்கும்பொழுது படித்துப் பாருங்கள்’ என்றேன்.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து அந்தப் புத்தகத்தைப் பற்றி துக்ளக்கில் விமர்சித்து எழுதியிருந்தார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தெரிந்தால் பேசுவார், தெரியவில்லை என்றால் எனக்குத் தெரியாது. நான் அதைப் படிக்கவில்லை என்பார். எல்லாம் தெரிந்தவர்போல் நடிக்க மாட்டார். எது எப்படி இருந்தாலும் அவருடைய கொள்கையில் மட்டும் அதிகப் பிடிப்பாக இருப்பார், விட்டுக்கொடுக்க மாட்டார்.

ஒருமுறை சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற பழமையான கல்லூரியில் பேசுவதற்கு சோ சாரை அழைத்திருக்கிறார்கள். சோ சாரும் ஒரு தேதியை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். இடையில் ஒருநாள் கல்லூரி நிர்வாகத்தில் உள்ளவர்கள், திடீரென்று சோ சாருடன் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் கொடுத்த அந்தக் குறிப்பிட்ட தேதியில் எங்களால் விழாவை நடத்த இயலவில்லை. வேறு ஒரு தேதியில் உங்களை அழைக்கிறோம், எங்களை மன்னிக்கவேண்டும்’ என்று சொல்லி முடித்துக்கொண்டார்கள்.

அரசியல் இடையூறு காரணமாக சோ சாரை விழாவிற்கு வர வேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ததாக பின்னர் சோ சாருக்கு தெரியவந்தது. இதனால் கோபம் கொண்ட சோ சார், கல்லூரி நிர்வாகத்திற்கு பதிலடி கொடுக்க ஒரு விஷயத்தைச் செய்தார்.

அது என்ன?

- தொடரும்.