சினிமா செய்திகள்

உச்சம் தொட்ட சர்வதேச திரைப்படங்கள்:ஒதுக்கிவிட முடியாத காதல் ‘ஒபிஸீட்’ + "||" + Can not be ignored Love

உச்சம் தொட்ட சர்வதேச திரைப்படங்கள்:ஒதுக்கிவிட முடியாத காதல் ‘ஒபிஸீட்’

உச்சம் தொட்ட சர்வதேச திரைப்படங்கள்:ஒதுக்கிவிட முடியாத காதல் ‘ஒபிஸீட்’
மனித இனம் ‘குடும்பம்’ என்ற செயற்கை சட்டத்திற்குள் என்று அடைக்கப்பட்டதோ, அன்றே மனிதன் இயற்கைக்கு முரணாக வாழத் தொடங்கி விட்டான்.
ணும் பெண்ணும், கணவன் மனைவியாக ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள்; ஆனால் சிலரே வாழ்கிறார்கள்.

வீட்டுக்கு வெளியே முகமூடி அணிந்து நடக்கும் மனித கூட்டமானது, தனது ரகசிய பக்கங்களில் கிறுக்கி வைத்திருப்பதே அவரவர் நிஜ முகங்கள்.

கள்ளக்காதல் என்ற சொல் இந்த நூற்றாண்டில் தான் உருவாகியிருக்க வேண்டும். உண்மையில் காதல் எப்படி கள்ளத்தனமாகும்? திருமணம் என்ற பெயரில் பொருந்தாத இரு உடல்களை, ஊர் கூடி சேர்த்து வைப்பது எத்தனை அபத்தமானது. கணவனை மனைவியும், மனைவியை கணவனும் கட்டாயம் நேசித்தாக வேண்டிய குரூர தண்டனை, மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவராசிக்கும் இல்லை. அவைகள் பசித்துப் புசிக்கின்றன.

காதல் தூவப்பட்ட காமத்தைத் தவிர, ஐம்புலனும் உணரும் சுவை வேறு எதுவாக இருக்க முடியும்? முதல் முத்தம் என்பது முதன் முதலில் கொடுக்கப்பட்டதோ, பெறப்பட்டதோ அல்ல. அது முதன் முறையாக உணரப்படுவது.

2014-ம் ஆண்டு வெளியான ‘ஒபிஸீட்’ (Obsessed) எனும் கொரிய திரைப்படம், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான ரகசிய காதல் பற்றி அன்புபொங்க பேசுகிறது.

1969 வியட்நாம் யுத்தத்திற்கு பிறகு, கொரிய படைகள் ஓரிடத்தில் அவரவர் குடும்பத்துடன் தங்கி இருக்கின்றனர். அதில் கொரிய போரில் நாயகனாக கருத்தப்பட்ட கொலானல் தம்பதியும், அவருக்கு கீழ் வேலை செய்யும் மற்றொரு ராணுவ தம்பதியும் அடக்கம்.

அதிகாரி கொலானலின் மனை வியும், காக்யூன் எனும் சீன பெண்ணும் ராணுவ மருத்துவ மனையில் வேலை செய்கிறார்கள். அதே போல கொலானல் மற்றும் காக்யூனின் கணவரும் ஒன்றாக பணிபுரியும் ராணுவ அதிகாரிகள்.

குழந்தை இல்லாத இவ்விரு தம்பதிகளின் குடும்பமும் நட்பாகிறது. யுத்தம் முடிந்த ஓய்வு காலத்தில் நடக்கும் இந்தக் கதையில், கொலானல் தன்னுடன் வேலை செய்யும் அதிகாரியின் மனைவியான காக்யூன் மீது காதல் கொள்கிறான். இப்படி ஒரு கதை, மேலோட்டமாக பார்த்தால் சற்று முகம் சுளிக்க வைக்கலாம். ஆனால் படத்தின் காட்சி அமைப்பானது இப்படி யொரு ரகசிய காதலை நியாயப்படுத்துகிறது. அதற்காக முன் வைக்கப் படும் காரணங்கள் அடிப்படை வாதிகளைக் கூட ஓரளவு சமாதானம் செய்கிறது.

காக்யூன் ஒரு காட்சியில், தனது 13-வது வயதில் கணவன் தன்னோடு உறவு கொண்ட கசப்பான இரவு பற்றி கொலானலிடம் பேசுகிறாள். ‘அந்த வயதில் உண்மையில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனது முதல் காதலை உங்களிடம் தான் உணர்கிறேன்’ என்கிறாள். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஒருவரையொருவர் கொண்டாடுகின்றனர். அதற்கு மழை, நடுநடுவே ஈர சாட்சியாக தலைகாட்டுகிறது. என்றாலும் அவளிடத்தில் தலைதூக்கும் குற்ற உணர்ச்சியையும் தடுப்பதற்கில்லை. காதலின் வேர் அவர்களின் மனதுக்குள் பரவி பூக்கவும் தொடங்கியிருக்கிறது.

கொலானல் அவளுக்காக நடனமாட கற்றுக்கொள்கிறான். இருவரும் சேர்ந்து ரகசியமாக புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அடிக்கடி மது அருந்தும் அவன், ஒரு நாள் அனைவரின் முன்பும் காக்யூனிடம் கோபமாக நடந்து கொள்கிறான். மது வெறியில் அவளின் கணவனையும் தாக்கிவிடுகிறான். இவர்களின் ரகசிய காதல் பற்றி ராணுவ கேம்ப் முழுக்க தெரியவருகிறது. கொலானலின் மனைவியின் தந்தை அவனது மேலதிகாரியும் கூட. அதனால் கொலானல் வியட்நாமிற்கு புரமோஷன் கிடைத்து போக வேண்டியிருக்கிறது.

அதன் முதல் நாள் இரவில் தனியாக இருக்கும் காக்யூனை சந்தித்து, ‘என்னால் உன்னை மறக்க முடியாது, நான் வியட்நாமிற்கு போகவில்லை. தாய்லாந்து செல்கிறேன். சென்றதும் உனக்கு கடிதம் எழுதுகிறேன். நீயும் என்னுடன் வா. நாம் சேர்ந்து வாழலாம்’ என்கிறான்.

காக்யூனும் கொலானல் இல்லாத வாழ்க்கையை, வாழ இயலாத ஒன்றாக உணர்கிறாள். ஆனால் துரதிஷ்டவசமாக காலம் அவர்களை இரு வேறு சட்டங்களுக்குள் அடைத்தது.

இருவரும் இப்படியாக.. பிரிவு பற்றி கண்ணீர் வழிய பேசிக் கொண்டிருக்கும் போது, கொலானல் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது மார்பில் சுட்டுக் கொள்கிறான். சுருண்டு கீழே விழுந்த அவனை மடியில் வைத்துக் கொண்டு காக்யூன் அழுகிறாள். அவன் அவசர அவசரமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.

அதிஷ்டவசமாக உயிர் பிழைக்கும் அவனை நல்லொழுக்க நடவடிக்கையாக ராணுவம் டிஸ்மிஸ் செய்கிறது. அவனது லட்சியங்களை எல்லாம் அந்த காதல் சிதைத்துவிடுகிறது. அவன் எங்கோ சென்றுவிட்டான்.

காலம் உருண்டோடுகிறது.. இரண்டு வருடங்கள் கழித்து (1971) ஊரெங்கும் பனிமழை பொழிகிறது. வியட்னாமில் இருந்து ஒரு ராணுவ அதிகாரி வருகிறார். காக்யூனை சந்தித்து ‘நீங்கள் தான் கொலானலின் மனைவியா?’ என்கிறார்.

சற்று குழப்பமடைந்த அவளிடம், அவர்கள் இருவரும் ரகசியமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி, ‘வியட்நாமின் எல்லையில் திரிந்த இவரை, சந்தேகத்தின் பெயரில் ராணுவம் சுட்டுவிட்டது. சம்பவ இடத்தில் அவர் இறந்து போனார். அவரது சட்டைப் பையில் இந்த புகைப்படம் இருந்தது’ என்கிறார்.

காக்யூன் தனது காதலனை நினைத்து உடைந்து அழுகிறாள். அந்த போட்டோவின் பின்பக்கம் ‘மை லவ்’ என எழுதி இருந்தது.

சவுத் கொரியாவின் கிராண்ட் பெல் விருதை வென்ற இப்படத்தின் இயக்குனர், கிம் டியோவோ. இப்படியொரு கதையை எடுத்துப் பேசிய துணிச்சலுக்கே பாதி வெற்றி வசப்பட்டுவிட்டது. ஆனால் இதை பார்வையாளன் வக்ரமாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதில் இயக்குனரும், ஒளிப்பதிவாளர் பியான் போங்கும் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்க்கும் அனைவருக்கும் புரியும்.

1960-களில் கொரியாவின் இருப்பிட கட்டுமானங்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ராணுவ உடை, வாகனங்கள் என எல்லாமே அத்தனை நேர்த்தியாக உருவாக்கப்பட்டி ருக்கிறது. சில காட்சிகளில் மழை கவுரவத் தோற்றத்தில் தலை காட்டுகிறது.

சடசடக்கும் மழையின் நடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வாகனத்தின் உள்ளே, காக்யூனின் கைகளை கொலானல் பிடித்திருக்கிறான். அத்தனை நெருக்கமான அன்பை.. அத்தனை நெருக்கமான கதகதப்பை.. அவள் அதுவரை உணர்ந்ததே இல்லை. இக்காட்சியில் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். மதுவும் மனதும் போல கலந்து போகிறார்கள். அதுதான் அவர்களது முதல் முத்தமாக இருந்தது.

இந்த சினிமாவின் மீது பலருக்கும் பல்வேறு விமர்சனங்கள் உண்டு என்றாலும், நீங்கள் ஒருபோதும் புறந்தள்ளிவிட முடியாத காதல் ஒன்றும் இப்படத்தில் நிரம்பி வழிகிறது.

திருமணத்திற்கு பிறகு இன்னொருவரின் மனைவி மீதோ, கணவன் மீதோ பலருக்கு வரும் காதலை மறைக்க முடியுமே தவிர, தடுக்க முடியாது என்பது, எல்லோராலும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியாத உண்மை.

‘ஒபீஸீட்’ என்ற சொல்லுக்கு ‘அன்புடன்’ என்று அர்த்தம். அன்பெனப்படுவது அன்பேயன்றி வேறொன்றுமில்லை தானே.