சினிமா செய்திகள்

கட்டிடம் கட்ட மேலும் ரூ.20 கோடி திரட்டப்படும் நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு + "||" + Build more and more Rs 20 crore will be collected Acting Union Election 6 month postponement

கட்டிடம் கட்ட மேலும் ரூ.20 கோடி திரட்டப்படும் நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு

கட்டிடம் கட்ட மேலும் ரூ.20 கோடி திரட்டப்படும் நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு
நடிகர் சங்க தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பொதுக்குழுவில் விஷால் பேசியதாவது:-


‘நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தை ரூ.26 ஆயிரத்துக்கு வாங்கினார்கள். இப்போது அதன் மதிப்பு ரூ.150 கோடியில் இருந்து ரூ.200 கோடி வரை இருக்கும். கட்டிடம் கட்டுவதை எதிர்த்து பல தடைகள் ஏற்படுத்தினார்கள். கோர்ட்டுக்கு சென்றார்கள். அதையெல்லாம் மீறி கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆத்மா நமக்கு துணையாக இருக்கிறது.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் எனது திருமணம் நடைபெறும். வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்றது தொடர்பாக முந்தையை நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு விஷால் பேசினார்.

கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

‘நடிகர் சங்க பொறுப்பில் 3 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். உறுப்பினர்களுக்கு பல நலப்பணிகள் செய்துள்ளோம். வாக்குறுதி அளித்தபடி சங்க கட்டிடத்தையும் கட்டி வருகிறோம். உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்வதற்காக நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். எனவே தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

அனைத்து உறுப்பினர்களுமே தேர்தலை தள்ளி வைக்க ஆதரவு தெரிவித்தனர். அடுத்த மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சர்வதேச தரத்தில் இந்த கட்டிடமும் அரங்குகளும் கட்டப்பட்டு வருகிறது இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பொதுக்குழுவில் நடிகர்கள் விஜயகுமார், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், விஜய்சேதுபதி, ஜீவா, ஐசரி கணேஷ், பூச்சி முருகன், நந்தா, ஸ்ரீமன், கே.ராஜன், சரவணன், உதயா, ஆனந்தராஜ், நடிகைகள் லதா, சரோஜா தேவி, பூர்ணிமா, சச்சு, காஞ்சனா, சோனியா, சங்கீதா, குட்டி பத்மினி, ஷீலா, ரோகிணி, கோவை சரளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.