வைரமுத்துவை பாடலாசிரியராக்கிய அனுபவம் : படவிழாவில், பாரதிராஜா ருசிகர பேச்சு


வைரமுத்துவை பாடலாசிரியராக்கிய அனுபவம் : படவிழாவில், பாரதிராஜா ருசிகர பேச்சு
x
தினத்தந்தி 21 Aug 2018 11:00 PM GMT (Updated: 21 Aug 2018 5:38 PM GMT)

பாரதிராஜா கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம் ஓம். இதில் நாயகியாக நக்‌ஷத்திரா நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

பாரதிராஜா இதில்  பங்கேற்று பேசும்போது கவிஞர் வைரமுத்துவை பாடலாசிரியராக அறிமுகம் செய்த அனுபவத்தை பகிர்ந்தார். அவர் கூறியதாவது:–

‘‘கவிஞர் வைரமுத்து முதன் முதலில் என்னை சந்திக்க வந்தார். அப்போது ஒரு புத்தகத்தை கொடுத்து, ‘‘இது நான் எழுதிய கவிதை. உங்களால் இந்த கவிதைகளை புரிந்து கொள்ள முடிந்தால் என்னை பாடலாசிரியராக பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்றார். அந்த திமிர் எனக்கு பிடித்து இருந்தது.

புத்தகத்தை படித்து விட்டு மீண்டும் அவரை அழைத்தேன். அப்போது என்னுடன் இருந்த இளையராஜா தன்னுடையை டியூனுக்கு பாடல் எழுதி தருமாறு கேட்டார். சிறிது நேரம் வெளியே சென்று இருந்த வைரமுத்து திரும்பும்போது ஒரு பேப்பரோடு வந்தார். அந்த பேப்பரை வாங்கி படித்த இளையராஜா என்னை தனியே அழைத்துச் சென்று ‘‘எங்கிருந்து இவனை பிடித்தாய். சினிமாவில் இருக்கும் பெரிய பெரிய யானைகளையெல்லாம் சாய்த்து விடுவான் இவன்’’ என்று கூறினார்.

அப்போது வைரமுத்து எழுதி கொடுத்த பாடல்தான் ‘‘இது ஒரு பொன் மாலை பொழுது. வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் என்ற பாடலாகும்.’’

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

கவிஞர் வைரமுத்து பேசும்போது, ‘‘பாரதிராஜா என்ற சொல் தமிழ் கலையுலகின் மந்திரச்சொல். இங்கு இயக்குனர்கள் கூடி ஒரு இயக்குனரை பாராட்டி உள்ளனர். எவ்வாறு சூரியன் தன்னிடமிருந்து பிரிந்த பூமியை தன்னை சுற்றி வரச்செய்கிறதோ அதுபோல் தான் உருவாக்கிய இயக்குனர்களை தன்னையே சுற்றி வரச்செய்வது யாருக்கும் கிடைக்காத பாக்கியம்’’ என்றார்.

விழாவில் சீமான், பாக்யராஜ், அமீர், கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story