சரித்திர படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சிரஞ்சீவி


சரித்திர படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சிரஞ்சீவி
x
தினத்தந்தி 22 Aug 2018 11:00 PM GMT (Updated: 22 Aug 2018 5:15 PM GMT)

தெலுங்கில் ‘பாகுபலி’க்கு பிறகு அதிக எதிர்பார்ப்புடன் ரூ.200 கோடி செலவில் தயாராகும் படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி.’ தமிழிலும் இந்தப் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது.  இதில் நரசிம்ம ரெட்டி வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இது அவருக்கு 151–வது படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் அவர் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், தமன்னா ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடக்கிறது.

அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். யுத்த காட்சிகளை ஹாலிவுட்டுக்கு இணையாக படமாக்குகிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஆங்கிலேயர்கள் பீரங்கியுடன் சிரஞ்சீவியுடன் மோதுவதுபோன்றும் அவர்களை சிரஞ்சீவி ஆவேசமாக எதிர்த்து தாக்குவது போன்றும் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன.

அரண்மனை அரங்குகளும் பிரமிக்க வைத்தன. பாகுபலி தவிர மகதிரா, ஸ்ரீராமராஜ்ஜியம், கவுதமி புத்ர சாதகர்னி, ருத்ரமாதேவி உள்பட பல சரித்திர புராண படங்கள் தெலுங்கில் வந்துள்ளன. அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. சைரா நரசிம்ம ரெட்டி படமும் அந்த பட்டியலில் சேரும் என்கின்றனர்.

Next Story