சினிமா செய்திகள்

பிரபலங்கள் நிறைந்திருக்கும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ + "||" + Sye Raa Narasimha Reddy

பிரபலங்கள் நிறைந்திருக்கும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’

பிரபலங்கள் நிறைந்திருக்கும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’
தெலுங்கு சினிமா உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிரஞ்சீவி.
இந்திய திரையுலகில் உள்ள பல மொழிகளிலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மூத்த கதாநாயகர்கள், பெரும்பாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களின் நடன அசைவுகளை குறைத்துக் கொண்டு, பாடல் காட்சிகளில் நடந்தே சமாளிக்கும் யுக்தியை கையாளுவது வாடிக்கை. ஆனால் 60 வயதைத் தாண்டிய நிலையிலும், 30 வயது இளம் கதாநாயகர்களுக்கு இணையாக வளைந்து நெளிந்து துள்ளல் நடனம் போடும் ஒரே நடிகர் சிரஞ்சீவியாகத்தான் இருக்க முடியும். நடிப்பின் மூலமாக மட்டுமின்றி, நடனத்தின் வாயிலாகவும் தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்த நினைக்கும் நபர் அவர்.

‘புனதிராலு’ என்ற படத்தின் மூலம் நடிகராக ஒப்பந்தமானவர் சிரஞ்சீவி. ஆனால் அந்தப் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், 1978-ல் வெளியான ‘பிரானம் காரீடு’ என்ற படம் தான் அவரது அறிமுகப் படமாக அமைந்தது. தொடர்ந்து சில படங்களில் துணை நடிகராக நடித்தபிறகே அவருக்கு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

2007-ம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் ‘சங்கர் தாதா ஜிந்தாபாத்’ என்ற படம் வெளியானது. இது இந்தியில் சஞ்சய் தத் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான ‘லகே ரஹோ முன்னாபாய்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்திற்குப் பிறகு அரசியலில் கவனம் செலுத்திய அவர், படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சிரஞ்சீவி, மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

படங்களில் நடித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், தனது ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க ஒரு நல்ல கதையை அவர் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் தான் ‘கைதி எண்:150’. இது தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘கத்தி’ படத்தின் ரீமேக் ஆகும். 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், சிரஞ்சீவியின் ரசிகர்கள் இன்னும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டியது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், சிரஞ்சீவியின் 150-வது படமாகவும் அமைந்தது.

ரீ-எண்ட்ரி அதிரிபுதிரியாக அமைந்த காரணத்தால், அடுத்த படத்தில் உடனடியாக நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டினார். 150 படங்களாக கமர்ஷியல் கதாபாத்திரங்களிலேயே காலத்தைக் கடத்தி விட்டதால், அடுத்த படம் ஒரு வரலாற்று கதாபாத்திரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் சிரஞ்சீவி உறுதியாக இருந்தார். அப்படி கிடைத்ததுதான் ஆந்திராவில், 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதை.

தற்போதைய கர்னூல் மாவட்டத்தில் குண்டூ நதிக்கரையில் அமைந்திருந்த இடம்தான் உய்யலவாடா. இந்தப் பகுதியில் நரசிம்மரெட்டியின் தாத்தா ஜெயராமி ரெட்டியும், தந்தை பெத்தமல்ல ரெட்டியும் சிற்றரசர்களாக இருந்துள்ளனர். அவர்களின் வாரிசாக வந்த நரசிம்ம ரெட்டி, கிடலூரு என்ற இடத்தில் இருந்த ஆங்கிலேயர் களின் முகாமை தாக்கி, அவர்களை ஓட ஓட விரட்டினார்.இதையடுத்து நரசிம்ம ரெட்டியின் மீது வஞ்சம் கொண்ட ஆங்கிலேயார்கள் அவரைப் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால், நரசிம்ம ரெட்டியை நெருங்கக் கூட முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தன் குடும்பத்தாரை விடுவிப்பதற்காக படைகளைத் திரட்டியபடி காட்டுப் பகுதியில் வசித்து வந்தார் நரசிம்மரெட்டி. ஆனால் கிராமத்தினர் சிலர் காட்டிக் கொடுத்ததன் விளைவாக, நரசிம்ம ரெட்டியை ஆங்கிலேயர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

இனி ஒருவன் தங்களை எதிர்க்க பயப்பட வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள், நரசிம்ம ரெட்டியை சங்கிலியால் பிணைத்து சித்ரவதை செய்தபடியே ஊர் தெருக்களின் வழியாக இழுத்துச் சென்றனர். நரசிம்ம ரெட்டியோடு இருந்த பலரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சிலர் விடுவிக்கப்பட்டனர். சிலர் 5 முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றனர். நரசிம்ம ரெட்டி மட்டும் தூக்கில் இடப்பட்டார் என்பதாக அவரது வரலாறு சொல்லப்படுகிறது.

இந்தக் கதையை மையப்படுத்தி தான் சிரஞ்சீவியின் 151-வது படமாக உருவாகி வரும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இவரோடு இந்தி திரைப்பட உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன், தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தெலுங்கின் முன்னணி நட்சத்திரம் ஜெகபதிபாபு, கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீப், நயன்தாரா, தமன்னா, ‘கபாலி’ படத்தில் நடித்த ஹுமா குரேஷி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதனால் இந்திய அளவில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சுமார் 200 கோடி மதிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் டீசர், சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி வெளியானது. இந்த டீசர் வெளியான ஒரே நாளில், 75 லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள். 1 நிமிடம் 20 நொடிகள் ஓடும் இந்த டீசரில் கோட்டையின் மீது சிரஞ்சீவி நிற்பது, குதிரையில் வந்து போர் புரிவது போன்ற காட்சிகள் மட்டுமே இருக்கின்றன. சிரஞ்சீவியைத் தவிர மற்ற கதாநாயகர்கள், கதாநாயகிகள் இதில் காட்டப்படவில்லை. இனி வரும் டீசர்களில் அவர்களின் காட்சிகள் வரலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

2006-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அதனொக்கடே’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானவர் சுரேந்தர் ரெட்டி. தனது முதல் படத்திலேயே அறிமுக இயக்குனருக்கான நந்தி அவார்டு பெற்றவர். இந்தப் படத்தைத்தான் விஜய் தமிழில் ‘ஆதி’ என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்தார். முதல் படத்தைத் தொடர்ந்து ‘அதிதி’, ‘கிக்’, ‘ரேஸ்குர்ரம்’, ‘கிக்-2’ என அதிரிபுதிரி வெற்றிப்படங்களை இயக்கியவர் என்பதால், அவர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

இருந்தாலும் படத்தின் தரத்தை மக்கள் எப்படி கணிக்கிறார்கள் என்பதை அறிய கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.