நண்பரை டைரக்டராக உயர்த்தி நட்புக்கு மரியாதை செய்த சிவகார்த்திகேயன்


நண்பரை டைரக்டராக உயர்த்தி நட்புக்கு மரியாதை செய்த சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 25 Aug 2018 11:30 PM GMT (Updated: 25 Aug 2018 5:36 PM GMT)

நடிகர் சிவகார்த்திகேயன், ‘கனா’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். அவருடைய நண்பரான அருண்ராஜா காமராஜ் டைரக்டு செய்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் இன்னொரு நண்பரான திபு நினன் தாமஸ் இசையமைத்து இருக்கிறார்.  ‘கனா’  படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘கனா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

‘‘நான் நண்பர்களுக்கு செய்யும் உதவி இது என்று நிறைய பேர் பேசினார்கள். உதவி இல்லை. இது, கடமை. நான் அவர்களுடன் பொறியியல் கல்லூரியில் நண்பனாக இருக்கும்போது, ‘‘வா தண்ணியடிக்க போகலாம்...வா தம்மடிக்க போகலாம்’’ என்று கூட்டிக்கொண்டு போகாமல், என்னை நல்லவனாக வழி நடத்தியவர்களுக்கு நான் திருப்பி செய்ய வேண்டிய கடமை.

தயாரிப்பாளர் என்பது பேனர் மற்றும் சுவரொட்டியில் போட வேண்டிய ‘கிரடிட்’ மட்டும்தான். ஆனால் நான் எப்போதுமே வேலைக்காரன்தான். அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அருண்ராஜா காமராஜ் எழுதிய அல்லது பாடிய பாடல் ‘ஹிட்’ ஆகும்போது, போன் பண்ணி வாழ்த்துவதை தாண்டி, ‘‘நீ இதிலேயே திருப்தி அடைந்து விடாதே... டைரக்டர் ஆவதற்காகத்தான் இங்கு வந்தாய். எனவே டைரக்டர் ஆகும் வழியைப் பார்’’ என்று திட்டிக்கொண்டே இருப்பேன்.

அவனை ஏதாவது பண்ண வைக்க வேண்டும் என்று விரும்பினேன். ‘‘கிரிக்கெட்டை வைத்து ஒரு கதை பண்ணு’’ என்று நான்தான் அவனிடம் சொன்னேன். நான் சொன்னது, ஊரில் விளையாடுவோமே...அந்த கிரிக்கெட். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டை வைத்து பண்ணலாம்...அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை வைத்து பண்ணலாம் என்றான் அருண்ராஜா காமராஜ்.

‘‘ஒரு விவசாயி மகள் கிரிக்கெட் விளையாடுகிறாள்’’ என்று ஒரு வரியில் கதை சொன்னபோது, மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஒரு வரியை திரைக்கதையாக மாற்று என்று அவனிடம் சொன்னபோதே, படத்தை நான்தான் தயாரிப்பேன் என்று முடிவு செய்து விட்டேன். ஆனால், அதை அவனிடம் சொல்லவில்லை.

ஏனென்றால், தேடல் அவனுக்குள் இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைத்தேன். முழு கதையை கேட்டபோது, ‘ஜிவ்’ என்று இருந்தது. அதன் பிறகுதான் இந்த படத்தை தயாரிக்கும் யோசனையை அருணிடம் சொன்னேன்.’’

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.


Next Story