சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, தமிழ் திரையுலகில், இப்போது அம்மா வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் முன்னாள் கதாநாயகிகளில், நீண்ட கால அனுபவமும், அதிக படங்களில் நடித்த பெருமையும் கொண்டவர் யார்? (பி.வெற்றி வினாயகம், காஞ்சிபுரம்)

ராதிகா சரத்குமார்! இவர், 1978–ம் ஆண்டு டைரக்டர் பாரதிராஜா மூலம் ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில், 300 படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார். திரையுலகில் 40 வருடங்களை தாண்டி, இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில், சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ஜோடி யார்? (எம்.துரைசிங், திருச்சி)

சிவகார்த்திகேயனுக்கு நயன்தாராவை விட, கீர்த்தி சுரேஷ் பொருத்தமாக இருப்பதாக அவருடைய ரசிகர்கள் கூறுகிறார்கள்!

***

குருவியாரே, ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படம் எது, அந்த படத்தை டைரக்டு செய்பவர் யார்? (எஸ்.ராஜா, வேலூர்)

‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து அஜித், வினோத் டைரக்‌ஷனில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்!

***

விஜய் இப்போது சென்னையில் எங்கே வசிக்கிறார்? (பி.வி.ராம கோபால், கோவை)

சென்னை நீலாங்கரையை அடுத்துள்ள கபாலீஸ்வரர் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த விஜய், இப்போது பனையூருக்கு போய் விட்டார். அவருடைய கபாலீஸ்வரர் நகர் வீடு முழுவதுமாக இடிக்கப்பட்டு, நவீன பங்களாவாக கட்டப்படுகிறது!

***

குருவியாரே, தமிழ் சினிமாவில், வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் அதிக படங்களில் நடித்தவர் யார்? அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர் யார்? (எம்.நாக சூரி, நாகர்கோவில்)

வில்லன் மற்றும் குணச்சித்ர நடிகராக அதிக படங்களில் நடித்தவர், பிரகாஷ்ராஜ்! அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவரும் இவரே!

***

‘கஜினிகாந்த்’ படத்தில், ஆர்யாவின் நகைச்சுவை நடிப்பு எப்படி? (பி.சக்திவேல், வந்தவாசி)

சூப்பர். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகமாக கொண்டவர், ஆர்யா. அதனால்தான் நகைச்சுவை நாயகனாகவும் அவரால் வெற்றி பெற முடிகிறது! ‘கஜினிகாந்த்’ படத்தில் இதை பார்த்திருக்கலாம்!

***

குருவியாரே, ஒரு கதாநாயகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை, அதே நாயகனுக்கு அம்மாவாக நடிக்கும்போது, அவருடைய உணர்வுகள் எப்படியிருக்கும்? (ஜே.விஷால், தாரமங்கலம்)

அடுத்த ஜென்மத்தில் நாம் கதாநாயகனாக இருக்க வேண்டும். இவர் (கதாநாயகன்) நடிகையாக இருக்க வேண்டும் என்று இஷ்ட தெய்வங்களை மனதுக்குள் வேண்டிக்கொள்வார்கள்!

***

‘நாயகி’ என்ற டி.வி. தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் அம்பிகாவுக்கு, ‘சின்னத்திரை’யில் வரவேற்பு எப்படியிருக்கிறது? (எம்.மாதேஷ், காட்பாடி)

வெள்ளித்திரையில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக இருந்த அம்பிகா, ‘சின்னத்திரை’யில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து வருகிறார். அம்மா கதாபாத்திரத்திலும் அவர் ஒரு ‘அட்டகாசமான’ அம்மாவாக ஆச்சரியப்பட வைக்கிறார்!

***

குருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனை வைத்து பல படங்கள் தயாரித்த கே.பாலாஜி, எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரித்தாரா, இல்லையா? (டி.எஸ்.பால் சாமுவேல், கோபிச்செட்டிப்பாளையம்)

கே.பாலாஜி, எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கவில்லை!

***

கே.ஆர்.விஜயா சென்னையில் வசிக்கிறாரா, கேரளாவில் வசிக்கிறாரா? (கே.ஸ்ரீதர், மதுரவாயல்)

பாதி நாட்கள் சென்னையிலும், மீதி நாட்கள் கேரளாவிலும் மாறி மாறி வசித்து வருகிறார், கே.ஆர்.விஜயா!

***

குருவியாரே, ரகுல்பிரீத்சிங், மிகுந்த துணிச்சல் உள்ளவராமே...அப்படியா? (எம்.அப்துல் காதர், அரக்கோணம்)

அப்படித்தான்...அவர் வெளியிட்டு வரும் கவர்ச்சியான புகைப்படங்களே அதற்கு சாட்சி. அந்த புகைப்படங்களை இதய பலவீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என்று தெலுங்கு பட உலகில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்!

***

வெங்கட் பிரபுவும், அவருடைய தம்பி பிரேமும் ஒற்றுமையான அண்ணன்–தம்பியாக இருக்கிறார்களா? (எஸ்.பிரேம்குமார், கம்பம்)

வெங்கட் பிரபு இயக்கும் படங்களில், அவருடைய தம்பி பிரேம் கட்டாயமாக இடம் பெற்று விடுவார். அண்ணன் டைரக்‌ஷனில் பிரேம் நடிக்கும்போது, கூடுதல் ‘ரிஸ்க்’ எடுத்துக் கொள்வாராம். இந்த கூட்டணி பெரும்பாலும் வெற்றி பெற்று விடுவதால், இதுவரை அண்ணன்–தம்பி ஒற்றுமைக்கு பங்கம் வரவில்லையாம்!

***

குருவியாரே, ‘அமரகாவியம்’ படத்தில் அறிமுகமான மியா ஜார்ஜ் அழகாகவும் இருக்கிறார். திறமையாகவும் நடிக்கிறார். இருப்பினும் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லையே, ஏன்? (ஏ.அறிவழகன், கரூர்)

‘‘பட வாய்ப்புகளுக்கு அழகும், திறமையும் மட்டும் போதாது என்பதற்கு மியா ஜார்ஜ் ஒரு உதாரணம்’’ என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறுகிறார்!

***

இன்றைய பூர்ணிமா பாக்யராஜ், அன்றைய பூர்ணிமா ஜெயராம் இந்தி பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு வந்தாரா? அல்லது வேறு மொழி பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு வந்தாரா? அவர் அறிமுகமான படம் எது? (ஜி.லட்சுமிப்ரியன், புதுச்சேரி)

பூர்ணிமா பாக்யராஜ் அறிமுகமான படம், ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்.’ (மலையாளம்) இந்த படம் கேரளாவில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியது!

***

குருவியாரே, சிம்பு, தனுஷ் ஆகிய இருவரில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (வெ.சின்னதுரை, சேத்துமடை)

சிம்புவை விட, தனுஷ் அதிக சம்பளம் வாங்குகிறார்!

***

நீச்சல் உடை அணிந்து நடிப்பதற்கு சில கதாநாயகிகள் பெரிய தொகையை சம்பளமாக கேட்பது உண்மையா? (எம்.கே.தியாகு, திருக்கோவிலூர்)

உண்மைதான். அதற்கென்று சில கதாநாயகிகள், ‘ஸ்பெ‌ஷல்’ கட்டணம் வைத்து இருக்கிறார்களாம்!

***

குருவியாரே, ‘விஸ்வரூபம்–2’ படத்தில் நடித்திருக்கும் பூஜா குமார் திருமணம் ஆனவரா, ஆகாதவரா? (எஸ்.ரங்கநாதன், அருப்புக்கோட்டை)

பூஜா குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குமார் என்பது அவருடைய அப்பாவின் பெயராம்!

***

அனுஷ்காவுக்கு திருமணம் பேசுகிறார்களாமே...அவரை விட ஒல்லியான மாப்பிள்ளை வேண்டுமா? குண்டு மாப்பிள்ளை வேண்டுமா? எது மாதிரி மாப்பிள்ளை அவருக்கு தேவை? (சி.ராஜேந்திரன், பெங்களூரு)

அனுஷ்கா இப்போது மேலும் குண்டாகி விட்டார். இருப்பினும், ஒல்லியான மாப்பிள்ளைதான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறாராம்!

***

குருவியாரே, ‘‘நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்...காரணம் ஏன் கண்ணா...உன் கண்ணும் நீல நிறம்...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது? பாடல் காட்சியில் நடித்தவர்கள் யார்? (ஆர்.பிருதிவிராஜன், செட்டிக்குளம்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘என் அண்ணன்!’ அந்த பாடல் காட்சியில், எம்.ஜி.ஆர்–ஜெயலலிதா ஆகிய இருவரும் நடித்து இருந்தார்கள்!

***

அஞ்சலி அறிமுகமான படம் எது? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

‘கற்றது தமிழ்!’

***