கேரள வெள்ளத்தில் பாதித்த திரையுலகம் ; தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.30 கோடி நஷ்டம்


கேரள வெள்ளத்தில் பாதித்த திரையுலகம் ; தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.30 கோடி நஷ்டம்
x
தினத்தந்தி 26 Aug 2018 11:00 PM GMT (Updated: 26 Aug 2018 5:21 PM GMT)

கேரளாவில் பெய்த கன மழையால் 10–க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மழை தற்போது  நின்றுள்ளதால் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறிய 8 லட்சம் மக்கள் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.  இந்த வெள்ளம் மலையாள பட உலகிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் கொச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் திரையுலகினருக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆலோசித்தனர். முடங்கிய படங்களை எந்த தேதிகளில் வெளியிடுவது என்பது குறித்தும் விவாதித்தனர்.

கூட்டம் முடிந்ததும் மலையாள திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கூறும்போது, ‘‘மழை வெள்ளத்தால் 4 திரையரங்குகள் முற்றிலும் அழிந்துள்ளன. மேலும் பல திரையரங்குகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவைகளை சீரமைக்க பெரிய தொகை செலவாகும். திரைக்கு வந்து நன்றாக ஓடிக்கொண்டிருந்த விஸ்வரூபம்–2, நீலி, மரடோனா, ஒரு பழைய பாம்ப் கத உள்ளிட்ட சில படங்கள் வசூல் பாதித்தன என்றனர். தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஓணம் பண்டிகையையொட்டி திரைக்கு வருவதாக இருந்த மோகன்லால், நிவின் பாலி நடித்த காயம்குளம் கொச்சுனி, மோகன்லாலின் ஓடியன், மம்முட்டி நடித்துள்ள ஒரு குட்ட நாடன் பிளாக், பிஜுமேனன் நடித்துள்ள படையோட்டம், பிருதிவிராஜ் நடித்துள்ள ரணம், தீவண்டி, ஜானி ஜானி எங்கப்பா, மாங்கல்யம் தந்துனானே சாலக்குடிகாரன் சங்கதி, லில்லி உள்ளிட்ட படங்கள் அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளன என்றும் அவர்கள் கூறினார்கள்.

Next Story