ரசிகர்கள் முற்றுகையால் சூர்யா படப்பிடிப்பு ரத்து


ரசிகர்கள் முற்றுகையால் சூர்யா படப்பிடிப்பு ரத்து
x
தினத்தந்தி 26 Aug 2018 11:45 PM GMT (Updated: 26 Aug 2018 6:47 PM GMT)

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. என்ற படத்தில் நடிக்கிறார் சூர்யா. இதில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, ரகுல் பிரீத்சிங் நடிக்கின்றனர்.

என்.ஜி.கே. படம் அரசியல் சார்ந்த கதையம்சத்தில் தயாராவதாக தகவல். வித்தியாசமான சூர்யாவின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்த இதன் படிப்பிடிப்பை செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர். இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

சென்னை பூந்தமல்லியிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் சில காட்சிகளை படமாக்க படக்
குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். 

சூர்யாவும் படப்பிடிப்பில் பங்கேற்க ராஜமுந்திரி சென்று இருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கேரவனை நிறுத்தி வைத்து மேக்கப் போட்டார். சூர்யா வந்த தகவல் அறிந்ததும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

கேரவனில் இருந்து இறங்கிய அவரை முற்றுகையிட்டு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் முண்டியடித்தனர்.  ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினார்கள்.

வழிநெடுகிலும் கூட்டம் நிரம்பி இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கூட்டத்தை மீறி படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சூர்யாவால் செல்ல முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

மறுநாள் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து படப்பிடிப்பை நடத்தினர். சூர்யா படங்களுக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவரது படங்களின் தெலுங்கு உரிமை ரூ.21 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகிறது. சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் தமிழகத்தை விட ஆந்திராவில் அதிகம் வசூல் பார்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story