சினிமா செய்திகள்

நில அதிர்வை பதிவு செய்த ‘ஆப்டர் ஷாக்’ + "||" + Ground shock absorber 'Aftershock'

நில அதிர்வை பதிவு செய்த ‘ஆப்டர் ஷாக்’

நில அதிர்வை பதிவு செய்த ‘ஆப்டர் ஷாக்’
பெருமழையோ.. பேரிடரோ.. இயற்கையின் முன் அனைவரும் சமம்.
1976-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி, சீனாவின் டாங்சன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான், இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கைச் சீற்றமாக அறியப்படுகிறது. இருபத்தி மூன்றே நொடிகளில், இயற்கை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மனித உயிர்களை வேட்டையாடி ஓய்ந்தது. ஆனால் பலி எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரம் என்கிறது ஓர் அறிக்கை. அதன் நினைவாக சீன அரசு உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட நினைவுச் சுவர் ஒன்றை எழுப்பியது. 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள நினைவிடம் உருவாக்கி, அதில் 1976 பேரழிவின் போது எடுக்கப்பட்ட 400 புகைப்படங்கள் மற்றும் 600 கட்டுரைகளை காட்சிக்கு வைத்துள்ளது. ‘லிங் ஜாங்க்’ (Ling Zhang) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், ‘டாங்சன்’ நிலநடுக்கத்தை மீண்டும் நம் கண் முன் நிகழ்த்திக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.


2010-ம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் ‘ஆப்டர் ஷாக்’ (After shock).

சீனாவில் 1976-ம் ஆண்டில் நடப்பது போல் படத்தின் காட்சி தொடங்குகிறது. லி யுஅன்னி, தனது கணவன் மற்றும் 5 வயது மகன் பேங்க் டா, 5 வயது மகள் பேங்க் டெங்க் ஆகியோருடன் வசித்து வருகிறாள். கணவன்-மனைவி இருவரும் இரவு வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், வீட்டில் குழந்தைகள் தனியாக உறங்குகிறார்கள்.

அதிகாலை சரியாக 3.42 மணிக்கு பேரொலியுடன் அதிர்கிறது, டாங்சன். பூமி தன் வயிற்றைக் கிழித்து மனிதர்களை நிறைக்கிறது. பிணங்கள் மீது கட்டிடங்கள், கட்டிடங்கள் மீது பிணங்கள் என மாறி மாறி சமாதி எழும்புகிறது.

தம்பதிகள் தங்கள் வீடு நோக்கி ஓடுகிறார்கள். குழந்தைகள் இருவரும் நடப்பது புரியாமல் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். திசைகள் தோறும் மனித சத்தம். காற்றெல்லாம் சாவின் நெடி. 23 நொடிகள் நீடித்த அந்த நில நடுக்கத்தில் பலாயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். லி யுஅன்னி தனது கணவனையும் இழக்கிறாள். குழந்தைகள் இருவரும் இடிபாடுகளுக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.

பூகம்பத்திற்கு பிறகு பேரமைதி நிலவுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட சிறுமி ஒரு கல்லால் தரையில் தட்டி எழுப்பும் ஒலியால், அவர்கள் இருக்கும் இடம் கண்டறியப்படுகிறது. மகன், மகள் இருவரில் ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது யாரைக் காப்பாற்றுவது என முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் அந்தக் குழந்தைகளின் தாய், ‘என் மகனைக் காப்பாற்றுங்கள்’ என்கிறாள்.

அந்தச் சொல், இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த சிறுமியின் காதில் விழுகிறது. அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. அது தனது தாயின் மீதான அவளது வெறுப்பைக் காட்டுகிறது. இப்போது அவள் கல்லால் ஒலி எழுப்புவதை நிறுத்தியிருந்தாள். ஒரு கையை இழந்த நிலையில் மகன் காப்பாற்றப்படுகிறான்.

ஊர் முழுக்க மனித உடல்கள் கிடத்தப்பட்டிருக்கிறது. அதில் தனது தந்தையின் அருகில் சிறுமி பேங்க் டெங்க் கிடக்கிறாள். மீட்புக் குழு தீவிரமாக வேலை செய்து, முடிந்த வரை பலரை மீட்கிறது. இயற்கை குற்றவுணர்ச்சியில் அழுவது போல, அந்த நேரத்தில் மழை பெய்கிறது. உண்மையில் சிறுமி பேங்க் டெங்க் இறக்கவில்லை, மயங்கித்தான் கிடந்தாள்.

ராணுவ மீட்புக்குழுவில் டாங்சன் பகுதிக்கு வந்திருந்த, குழந்தையில்லாத ராணுவ தம்பதி ஒன்று பேங்க் டெங்கை எடுத்து வளர்க்கிறார்கள். லி யுஅன்னி கையிழந்த தன் மகனை வளர்த்து ஆளாக்குகிறாள். இப்படியாக இவர்களின் வாழ்க்கை நதியின் கிளைகளாக விரிகிறது.

பேங்க் டெங்க் ராணுவ தம்பதிகளின் ஒரே செல்ல மகளாக வளர்கிறாள். காலத்தால் வளர்க்கப்பட்ட அவள் மருத்துவப் படிப்பை தேர்வு செய்கிறாள். தன்னுடன் படிக்கும் இளைஞனுடன் காதல் கொள்கிறாள். அதன் விளைவாக வயிற்றில் குழந்தை உருவாகிறது.

தனது வளர்ப்புத் தாயின் மரணத்திற்கு பிறகே அது நடந்தது. தனது வளர்ப்பு மகளை காண மருத்துவக்கல்லூரி விடுதிக்கு வரும் தந்தைக்கு அதிர்ச்சி. அவள் அங்கிருந்து யாருக்கும் சொல்லாமல் எங்கோ சென்று விட்ட செய்தி அவருக்கு கிடைக்கிறது. மனைவியையும் இழந்து, வளர்ப்பு மகளையும் இழந்த நிலையில் அவரது வாழ்க்கை தனித்து விடப்படுகிறது. அது ஒரு பழுத்த பழம் கிளையிலிருந்து விடைபெற மறுப்பதை போல இருந்தது.

சில ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் சுமந்த கருவை, மகளாக பெற்றுக் கொண்டு தனது வளர்ப்புத் தந்தையை அடைகிறாள், பேங்க் டெங்க்.

கையிழந்த நிலையில் தனது தாயால் வளர்க்கப்பட்ட பேங்க் டாவும் வளர்ந்து பெரியவனாகிறான். மனைவி, குழந்தை என அவனது வாழ்வும் நீள்கிறது.

பேங்க் டெங்க்-வை வளர்த்த தந்தை, அவளை ஒரு முறை ‘டாங்சன் சென்று வா. அங்கு உன் உறவினர்கள் யாராவது உயிரோடு இருக்கலாம்’ என்கிறார். ஆனால் அவளுக்கு, தான் இடிபாடுகளில் சிக்கியிருந்த போது, தன் சகோதரனை காப்பற்றச் சொல்லி தன்னை கைவிட்ட தாயை தேடிச் செல்ல மனமில்லை. அவள் உடைந்து அழுகிறாள். ‘நான் அங்கு போக மாட்டேன். நீங்கள் தான் என் அப்பா, இவள் தான் உங்கள் பேத்தி’ என வளர்ப்பு தந்தையின் தோளில் சாய்ந்து அழுகிறாள்.

கால வேகத்தால் முப்பது வருடங்கள் ஓடி மறைகிறது. இப்போது காட்சி 2008-ல் விரிகிறது.

பேங்க் டெங்க் தனது கணவன் மற்றும் மகளோடு கனடாவில் வசிக்கிறாள். 30 வருடங்களுக்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட மற்றொரு நில நடுக்கம் டிவியில் காட்டப்படுகிறது. பேங்க் டெங்க் தன் சிறுவயது அனுபவத்தை நினைத்துக் கொள்கிறாள். தானும் உதவ வேண்டும் என சீனா விரையும் அவள், அங்குள்ள மருத்துவ மீட்புக் குழுவோடு சேர்ந்து உதவுகிறாள். அங்கு தனது சகோதரனும் உதவி செய்ய வந்திருப்பதை அறிந்து நெகிழ்கிறாள். அவனோடு தனது தாயை காணச் செல்கிறாள். தாயும் மகளும் 30 வருடம் கழித்து சந்திக்கும் காட்சியில் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி அழுகிறார்கள். தனது தந்தையின் சமாதியருகே பேங்க் டெங்க்-வுக்கு அமைக்கப்பட்டிருக்கும் சமாதியில் ‘ஆப்டர் ஷாக்’ நிறைவுபெறுகிறது.

ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் வாழ்வில் வந்து போகிற தற்காலிக மனித முகங்களையும், உறவுகளின் நிலையற்ற தன்மையையும், இயற்கையின் பெரும் பலத்தையும், நிஜ சம்பவத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குனர் பெங்க் ஜியோகாங் தனிக் கவனம் பெறுகிறார்.

சீனா, பெய்ஜிங், துபாய் உட்பட 26 சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டியிட்ட இந்தத் திரைப்படம், 20-க்கும் அதிகமான விருதுகளை குவித்தது. ஒளிப்பதிவுக் குழுவும் கிராபிக்ஸ் - அனிமேஷன் குழுவும் இத்திரைப்படத்திற்கு வழங்கியிருக்கும் அசுர உழைப்பை, நிலநடுக்க காட்சிகளை ரிக்டரில் உணர முடிந்தது.

‘முப்பது வருடம் முன் சரிந்த கட்டிடங்கள் நிமிர்ந்து விட்டன. ஆனால் நொறுங்கிய என் தாயின் இதயம் அப்படியே கிடக்கிறது’ போன்ற வசனங்கள், நம்மை இன்னும் உறவுகளுக்குள் நெருக்கம் கொண்டாடச் செய்கிறது.

காலம் கருணையற்றது என்றாலும், அதனிடம் எல்லா இழப்பு களுக்கும் பதில் உண்டு.

-தொடரும்.