சினிமா செய்திகள்

கலக்கத்தில் தவிக்கும் நாகசைதன்யா + "||" + Nagasaitanya in troubled times

கலக்கத்தில் தவிக்கும் நாகசைதன்யா

கலக்கத்தில் தவிக்கும் நாகசைதன்யா
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான நாகேஸ்வரராவின் பேரன், உச்ச நடிகரான நாகர்ஜூனாவின் மகன் என்ற பெரிய நட்சத்திர எதிர்பார்ப்போடு, தெலுங்கு சினிமா உலகில் கால் பதித்தவர் நாகசைதன்யா.
வாசு வர்மா இயக்கத்தில் இவர் அறிமுகமான ‘ஜோஸ்’ திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சுமார் ரகமாக அமைந்தது.

‘ஜோஸ்’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடையப் போகும் தருவாயில், இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறார் நாகசைதன்யா. இதில் ஒரு சில படங்கள் வெற்றியைப் பெற்றிருந்தாலும், அந்த வெற்றியை, முழுமையாக தனக்கான வெற்றி என்று கொண்டாட முடியாத நிலையில் அவர் இருக்கிறார்.


ஏனெனில் அந்த படங்களின் வெற்றிகள், ஒன்று இயக்குனரின் வசப்பட்டதாக இருக்கும், அல்லது உடன் நடித்த நடிகர்- நடிகையர்களுக்கானதாக அமைந்திருக்கும்.

முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், நாகசைதன்யாவுக்கு கிடைத்த படம் தான் ‘யே மாய சேசாவே’. இது ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷன். தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில்தான் இயக்குனர் கவுதம் மேனன் இந்தப் படத்தை இயக்கினார். தெலுங்கில் வெளியான படத்தில் நாகசைதன்யாவின் ஜோடியாக சமந்தா நடித்தார். மிகப்பெரிய வெற்றிப்படமாக இது அமைந்த போதிலும், அந்த வெற்றியை தனக்கானதாக நாகசைதன்யா வால் கொண்டாட முடியவில்லை. காரணம் காதல்படங்களில் தனி அடையாளத்தை பதித்த இயக்குனரான கவுதம் மேனன்.

இந்தப் படத்திற்குப் பிறகு நாகசைதன்யா நடித்த படம் ‘100% லவ்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். காதல் கதையாக உருவான இந்தப் படமும் வெற்றிப்படமாகவே அமைந்தது. ஆனால் இந்தப் படத்தின் வெற்றியையும் நாகசைதன்யாவால், ‘தன் நடிப்புத் திறனால் வெற்றிப் பெற்றப்படம்’ என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.

அதற்கு காரணம் இயக்குனர் சுகுமார். ஏனெனில் ‘100% லவ்’ படத்தை இயக்குவதற்கு முன்பாக தன்னுடைய இயக்கத்தில் வெளியான ‘ஆர்யா’, ‘ஜகடம்’, ‘ஆர்யா-2’ ஆகிய மூன்று படங்களிலும் வெற்றிக்கொடியை பறக்கவிட்டிருந்தார். இதனால் அவரது இயக்கத்தில் உருவாகி வந்த ‘100% லவ்’ படத்திற்கு, படம் வெளியாவதற்கு முன்பிருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் ‘100% லவ்’ படத்தின் வெற்றியை நாகசைதன்யாவுக்கு கிடைத்ததாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து நாகசைதன்யா ‘தடா’, ‘பெஜவாடா’, ‘தடகா’ ஆகிய படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் யாவும் தோல்வியையே தழுவின. இதில் ‘தடகா’ படம் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வேட்டை’ படத்தின் ரீமேக்காகும்.

2014-ம் ஆண்டு ‘மனம்’ படம் வெளியானது. இந்தப் படத்தில் நாகசைதன்யாவுடன், அவரது தந்தை நாகர்ஜூனா, தாத்தாவும் பழம்பெரும் நடிகருமான நாகேஸ்வரராவ் ஆகியோரும் இணைந்து நடித்திருந்தனர். நாகசைதன்யாவின் ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். படத்தை விக்ரம் குமார் இயக்கியிருந்தார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் உருவான ‘24’ படத்தை இயக்கியவர். ‘மனம்’ படத்தில் மூன்று தலைமுறைகளை இணைத்து இயக்குனர் ஏற்படுத்தியிருந்த வித்தை படத்திற்கு பெரிய பலமாகவும், சுவாரசியம் கூட்டுவதாகவும் அமைந்திருந்தது. மேலும் படத்தில் நாகேஸ்வரராவ், நாகர்ஜூனா ஆகிய இரண்டு ஜாம்பவான்கள் இருந்ததாலும், நாகசைதன்யாவை விட சமந்தாவின் நடிப்பு அருமையாக இருந்ததாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்திலும் நாகசைதன்யாவுக்கு தனிப்பட்ட பெயர் எதுவும் கிடைக்கவில்லை.

இதற்கு பிறகு வெளியான ‘ஆட்டோ சூர்யா’, ‘ஒக லைலா கொசம்’, ‘தோஜாய்’ ஆகிய படங்களில் ‘ஒக லைலா கொசம்’ படம் மட்டும் மிதமான வெற்றியை ருசித்தது. இதையடுத்து ரீமேக் படத்தை கையில் எடுத்தார் நாகசைதன்யா. மலையாள மொழியில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்தார். ஆனால் மலையாளத்தில் கிடைத்த வரவேற்பு, தெலுங்கு மொழியில் கிடைக்காமல் போய்விட்டது.

இந்த நிலையில் தான் தெலுங்கு சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களின் மூலமாக பெரிய வெற்றியை ஈட்டி வரும் இயக்குனரான மாருதி தாசரியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நாகசைதன்யா. ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ என்ற இந்தப் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படத்தின் டைட்டிலில் வரும் சைலஜா கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. இந்தப் படம் மாமியார், மருமகனுக்கு இடையே நடிக்கும் கதையாக இருக்கும் என்பது ரசிகர்களின் அனுமானமாக இருக்கிறது.

தன்னை வெற்றிக் கதாநாயகன் என நிலைநிறுத்தும் முயற்சியில் இதுவரை தள்ளாட்டத்தையே சந்தித்துக் கொண்டிருக்கும் நாகசைதன்யா, ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படத்தை அபரிமிதமாக நம்பிக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் தனக்கு நடிப்பு ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என்று நினைக்கிறார். 31-8-2018 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் இம்மாதம் 13-ந் தேதிக்கு தள்ளிபோய் இருக்கிறது.

படம் தள்ளிப்போய் இருப்பது நாகசைதன்யாவுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பு ரிலீஸ் தேதி அறிவித்தப் பின் தள்ளி வைக்கப்பட்ட இரண்டு படங்கள் பெரும் தோல்வியை தழுவியது. அந்த சென்டிமெண்ட் இந்தப் படத்திலும் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் நாகசைதன்யா.

கணவனுக்காக பின்வாங்கும் மனைவி

கன்னடத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரில்லர் படம் ‘யூ டர்ன்’. இந்தப் படத்தை பவன்குமார் இயக்கியிருந்தார். தற்போது இந்தப் படம் அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி வருகிறது. இதில் சமந்தா, ஆதி, பூமிகா ஆகியோர் நடிக்கிறார்கள். கன்னடத்தில் இயக்கிய பவன்குமாரே தமிழ், தெலுங்கிலும் இயக்குனராக பணியாற்றுகிறார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்ட நிலையில் ‘யூ டர்ன்’ படத்தை இம்மாதம் 13-ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் சமந்தாவின் கணவரான நாகசைதன்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். எனவே கணவர் படம் வெளியாகும் போது, போட்டிக்கு விடுவது போல் எனது படத்தை வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினரிடம் சமந்தா கோரிக்கை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே ‘யூ டர்ன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.