இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு


இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Sep 2018 9:39 PM GMT (Updated: 3 Sep 2018 9:39 PM GMT)

‘எந்திரன்’ படத்தின் கதை தொடர்பான வழக்கில், இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த ‘எந்திரன்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ரூ.1 கோடி இழப்பீடும் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும், அவரிடம் மனுதாரர் வக்கீல் குறுக்குவிசாரணை செய்யவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், இந்த வழக்கில் தன்னுடைய கூடுதல் ஆதார ஆவணங்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஷங்கர் தாக்கல் செய்த மனுவையும் ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ஷங்கர் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான வக்கீல், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கை இழுத்து அடிப்பதாக இயக்குனர் ஷங்கர் மீது குற்றம் சுமத்தினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்தார். இந்த தொகையை வருகிற 10-ந் தேதிக்குள் விலங்குகள் நல அமைப்பான ‘புளுகிராஸ்’ அமைப்புக்கு ஷங்கர் வழங்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story