குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 9 Sep 2018 6:34 AM GMT (Updated: 9 Sep 2018 6:34 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, நயன்தாரா, அனுஷ்கா ஆகிய 2 பேரில் யார் உயரமானவர்? 2 பேரின் சுபாவமும் எப்படி? (எம்.லோகநாதன், திருவண்ணாமலை)

நயன்தாராவை விட, அனுஷ்கா உயரமானவர். இரண்டு பேரில் நயன்தாரா கோபக்காரர். எளிதில் உணர்ச்சிவசப்படுவார். அனுஷ்கா, சாந்த சொரூபி. நயன்தாரா கோபப்பட்டால், அவருடைய முகத்தில் தெரியும். அனுஷ்கா கோபப்பட்டால், முகத்தில் தெரியாது. அத்தனை சாந்தம்!

***

நாசர், விஷால், கார்த்தி ஆகிய மூவரும் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே நடிகர் சங்க பணிகளையும் கவனிப்பது எப்படி? சிரமமாக இல்லையா? (ஏ.சார்லஸ், தூத்துக்குடி)

சிரமமாக இருக்கும் என்பதால்தான் மூன்று பேருமே நடிகர் சங்க பணிகளை கவனிக்க தனித்தனியாக உதவியாளர்களை நியமித்து இருக்கிறார்கள்!

***

குருவியாரே, செல்வராகவன் டைரக்‌ஷனில், சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே.’ படம் எந்த நிலையில் உள்ளது? (ஆர்.கோபால், போரூர்)

‘என்.ஜி.கே.’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. அந்த படத்துக்கு சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது!

***

தமிழ் பட உலகில் ஆண்ட்ரியா அளவுக்கு கவர்ச்சி விருந்து படைக்க வேறு நாயகிகள் யாராவது இருக்கிறார்களா? (கே.மோகன், நாகர்கோவில்)

கவர்ச்சி விருந்து அளிப்பதில், ஆண்ட்ரியாவுக்கு சரி போட்டியாக வரிந்து கட்டிக்கொண்டு வந்து நிற்கிறார், அமலாபால்!

***

குருவியாரே, நந்திதா, மனிஷா யாதவ் ஆகிய இருவரும் நடிக்க தெரிந்த அழகான கதாநாயகிகளாக இருந்தும், அவர்களுக்கு போதுமான புதிய பட வாய்ப்புகள் வருவதில்லையே, ஏன்? (ஜி.அருள்தாஸ், பாலக்காடு)

ரெஜினா, சாயிஷா...என்று புதுசு புதுசாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து அழகிகள் கோடம்பாக்கம் வந்து குவிந்து கொண்டே இருப்பதால், ஏற்கனவே பார்த்த முகங்களுக்கு வாய்ப்புகள் இல்லையாம்!

***

காஜல் அகர்வாலுக்கு மாப்பிள்ளை வேட்டை நடக்கிறதாமே...உண்மையா? (எஸ்.விக்ரம் குமார், லால்குடி)

உண்மைதான்!

***

குருவியாரே, தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படம் அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்குமா? (எம்.மணிகண்டன், மேட்டுப்பாளையம்)

‘வடசென்னை,’ தனுசுக்கு இன்னொரு தேசிய விருது வாங்கி கொடுக்கும் படமாக இருக்கும்!

***

தமிழ் பட உலகில் சமீபகாலமாக கதாநாயகிகளில், கேரள வரவுகள் குறைந்து மும்பை வரவுகள் அதிகமாகி வருகிறதாமே...ஏன்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

கேரள வரவுகள் அதிக சம்பளம் கேட்பதாகவும், மும்பை வரவுகள் குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் பேசப்படுகிறது. இது தவிர, இப்படி நடிக்க மாட்டேன்...அப்படி நடிக்க மாட்டேன் என்று மும்பை வரவுகள் கூறுவதில்லையாம்!

***

குருவியாரே, ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே இருந்த காதல் என்ன ஆனது? இருவரும் நட்புடன் இருக்கிறார்களா? (எஸ்.ஜெய்குமார், விளாத்திகுளம்)

ஜெய்–அஞ்சலி இடையே இருந்த காதல் முறிந்து போனது. இருவருக்கும் இடையே இப்போது நட்பு கூட இல்லையாம். ஆண் கிளியை தவிக்க விட்டு, பெண் கிளி வேறு இடம் நோக்கி பறந்து விட்டதாம்!

***

‘காக்க காக்க’ படத்தின் வில்லனும், ‘நான் அவனில்லை’ படத்தின் நாயகனுமான ஜீவன் என்ன ஆனார்? (ஆர்.செந்தில்நாதன், ராசிபுரம்)

ஜீவனுக்கு சினிமா தவிர (அமெரிக்காவில்) வேறு தொழிலும் இருக்கிறது. அதனால் சென்னைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அவர் அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார்!

***

குருவியாரே, சமீபகாலமாக வெளிவரும் தமிழ் திரைப்படங்களில் அரசியல் வாசனை அதிகமாக இருப்பதாக பேசப்படுகிறதே...குறிப்பாக, ‘பஞ்ச்’ வசனங்கள் அதிகமாக இடம் பெறுகிறதே...இதற்கு காரணம் என்ன? (எஸ்.பி.நவநீதன், திருச்சி)

ஜெயலலிதாவின் மறைவுதான் காரணம். வேறு எந்த காரணமும் இல்லை!

***

பத்மப்பிரியா, தற்போது படங்களில் நடிக்கிறாரா, இல்லையா? (சி.ராஜ்மோகன், கோவை)

பத்மப்ரியா தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், மலையாள படங்களில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, தமன்னாவுக்கு பொருத்தமான ஜோடி (கதாநாயகன்) யார்? (பி.ராம்சுந்தர், வேலூர்)

எல்லா கதாநாயகர்களுக்கும் பொருந்துகிற மாதிரி முகவெட்டும், உடற்கட்டும் உடையவர், தமன்னா. அவர் யாருடன் ஜோடி சேருகிறாரோ, அந்த கதாநாயகனுக்கு பொருந்துகிற மாதிரி தன்னை மாற்றிக் கொள்கிறார்!

***

ஐஸ்வர்யா ராஜேசின் மார்க்கெட் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டு போவதற்கு யார் காரணம்? (வி.வெற்றிச்செல்வன், தாமரைகுளம்)

‘காக்கா முட்டை’தான் காரணம்!

***

குருவியாரே, சிம்பு, அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது உண்மையா? (வே.கவுதம், சென்னை)

சிம்புவை பற்றி அவ்வப்போது பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அனுஷ்கா, தெலுங்கு நடிகர் பிரபாஸ் மீது காதலாக இருக்கிறார் என்றும், அவரையே திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும் ஒரு தகவல் பரவியிருக்கிறது. இந்த நிலையில், அவரை சிம்புவுடன் இணைத்து பேசப்படுவதை அனுஷ்கா விரும்பவில்லையாம்!

***

கேரளாவில் நடந்த மழை வெள்ள சேதத்துக்கு நடிகர் விஜய் எவ்வளவு உதவியிருக்கிறார்? (இரா.பொன்வசந்தன், காரைக்குடி)

கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை தனது ரசிகர்கள் மூலம் அனுப்பியிருக்கிறாராம்!

***

குருவியாரே, ஸ்ரீரெட்டி இவ்வளவு புகார்களை கூறிய பின்னரும், நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் தொடர்வதாக கூறுகிறார்களே...? (எம்.இஸ்மாயில், துரைப்பாக்கம்)

இது, ஒரேநாளில் திருந்திவிடக்கூடிய பிரச்சினை அல்ல. சபல புத்தி உள்ளவர்கள் இருக்கும் வரை, இந்த பிரச்சினையும் இருக்கும்!

***

திருமணம் செய்து கொண்ட மூன்றே நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சமந்தா, ஒரு சாதனையாளர்தானே..? (ஜான் கென்னடி, குடியாத்தம்)

சமந்தா, சாதாரண சாதனையாளர் அல்ல; மிகப்பெரிய சாதனையாளர்!

***

குருவியாரே, பட அதிபர் ஆர்.பி.சவுத்ரியின் மகன் ‘ஜித்தன்’ ரமேஷ் இப்போது நடிக்கிறாரா, இல்லையா? (பி.டேவிட், மதுரவாயல்)

கதாநாயகனாக நடித்து வந்த ‘ஜித்தன்’ ரமேஷ், இப்போது ஒரு புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்!

***

தென்னிந்திய டைரக்டர்கள் மீது பாலியல் புகார் செய்த ராதிகா ஆப்தே, ரசிகர்கள் கிறங்கிப்போகிற மாதிரி சில இந்தி படங்களில் படுகவர்ச்சியாக நடிப்பது எந்த ஊர் நியாயம்? (ஜே.ராபர்ட், தேனி)

பாலியல் புகார் செய்தாலும், படுகவர்ச்சியாக நடித்தாலும், அத்தனை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கலாம் அல்லவா? ராதிகா ஆப்தே உள்பட வட இந்திய நடிகைகளில் பெரும்பாலானவர்கள், மலிவான முறையில் விளம்பரம் தேடும் அழகிகள்தான்!

***

Next Story