அழகான கமல்ஹாசனை சப்பாணியாக நடிக்க வைத்தது ஏன்? பட விழாவில் பாரதிராஜா பேச்சு


அழகான கமல்ஹாசனை சப்பாணியாக நடிக்க வைத்தது ஏன்? பட விழாவில் பாரதிராஜா பேச்சு
x
தினத்தந்தி 10 Sep 2018 10:30 PM GMT (Updated: 10 Sep 2018 7:13 PM GMT)

‘மரகதகாடு’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, இலியாஸ் காத்தவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘மரகதகாடு’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, இலியாஸ் காத்தவன் உள்பட பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் டைரக்டு செய்துள்ளார். ஜெயப்பிரகாஷ் இசையமைத்துள்ளார். கே.ரகுநாதன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் டைரக்டர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

“மரகத காடு படத்தை சமூக நோக்குடன் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. எங்கெல்லாம் செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ அங்கெல்லாம் சென்று இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்து இருக்கிறார்கள். கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு காட்டுக்கு சென்று வாழ்ந்து அங்கேயே செத்து விடலாமா? என்று எனக்கு தோன்றுகிறது.

கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுப்பதற்கும் ரசித்து எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த படத்தின் டைரக்டர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்த படத்தையும் ரசித்து எடுத்து இருக்கிறார். இதில் நடித்துள்ள நடிகர்களை பார்த்தபோது எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. கமல்ஹாசன் அழகாக இருந்ததால்தான் ‘16 வயதினிலே’ படத்தில் அவரை சப்பாணி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தேன்.

அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காட்டும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. படத்தை கறுப்பு வெள்ளையில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேசைத்தான் சப்பாணியாக நடிக்க வைக்க முடிவு செய்து இருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமல்ஹாசனை தேர்வு செய்தேன். சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள கூடாது.”

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

Next Story