சினிமா செய்திகள்

மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் ரஜினிகாந்தின் ‘2.0’ டிரெய்லர் வெளியானது ரசிகர்கள் உற்சாகம் + "||" + Rajinikanth's '2.0' trailer was released

மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் ரஜினிகாந்தின் ‘2.0’ டிரெய்லர் வெளியானது ரசிகர்கள் உற்சாகம்

மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் ரஜினிகாந்தின் ‘2.0’ டிரெய்லர் வெளியானது ரசிகர்கள் உற்சாகம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.542 கோடிக்கு மேல் செலவில் எடுத்துள்ள இந்த படம் நவம்பரில் திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக உற்சாகம் அடைந்துள்ளனர்.

டிரெய்லரின் ஆரம்பத்தில் பறவைகள் செல்போன் கோபுரத்தை சுற்றி பறக்கின்றன. பின்னர் மக்கள் கையில் வைத்திருக்கும் செல்போன்கள் மாயமாகிறது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் நடப்பதாக டெலிவிஷனில் செய்தி சொல்கிறார்கள். உடனே உயர் அதிகாரிகள் அவசரமாக கூடி இது என்ன? இதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அப்போது எமிஜாக்சன் அருகில் உட்கார்ந்து இருக்க டாக்டர் வசீகரனாக நடிக்கும் ரஜினிகாந்த் “இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இதை எதிர்த்து நிற்க ஒரு ‘சூப்பர் பவர்’ வேணும்” என்கிறார். “அப்போ என்ன பண்ணலாம்கிறீங்க” என்று மற்றவர்கள் கேட்டதும் உடனே “சிட்டி த ரோபோட் என ரஜினி சொல்ல எந்திரனாக வரும் சிட்டி ரோபோ அறிமுகம் செய்யப்படுகிறது.

அசுர தோற்றத்தில் கட்டிடங்களை உடைத்து திகிலூட்டும் அக்‌ஷய்குமார் நிழல் நிலத்தில் விழும்போது சிட்டி ரோபோ ரஜினி அதை அண்ணாந்து பார்த்தவாறு அதிரடியில் இறங்குகிறார். கால்பந்தாட்ட மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரோபோக்கள் வருகின்றன. அப்போது ரோபாவாக வரும் ரஜினி கையில் நூறு துப்பாக்கிகளை வைத்து ஸ்டைலாக சுடுகிறார்.

அக்‌ஷய்குமார் ரிமோட்டை அழுத்த ஒரு வண்டி வெடித்து சிதறுகிறது. இறுதியில் ரோபோ ரஜினி ‘குக்கூ’ என்று கூறி சிரிப்பது போன்று டிரெய்லர் முடிகிறது. ரஜினிகாந்த் விஞ்ஞானி, ரோபோ என்று இருவேடங்களில் வந்து பறவையாக மாறும் பயங்கர வில்லனான அக்‌ஷய்குமாருடன் மோதி அழிவில் இருந்து உலகை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என்று டிரெய்லரில் தெரிகிறது.

ராட்சத பறவைகளும் செல்போன்களும் டிரெய்லரில் முக்கியத்துவம் பெற்று இருப்பதால் செல்போன் டவர்களால் பறவைகளுக்கு நேரும் பாதிப்புகளை படத்தில் பேசி இருக்கலாம் என்று யூகமும் உள்ளது. கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் டிரெய்லர் பிரமிப்பாக உள்ளது என்கின்றனர். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் மிரட்டி இருக்கிறது.

1 நிமிடம் 31 வினாடிகள் இந்த டிரெய்லர் ஓடுகிறது. கற்பனையை மிஞ்சிய காட்சிகள் உள்ளன. இந்த டிரெய்லர் தியேட்டர்களில் 3டி வடிவில் திரையிடப்பட்டது. யுடியூப்பில் 2டியில் வெளியானது.

ஆசிரியரின் தேர்வுகள்...