சினிமா செய்திகள்

மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கும் ரவிதேஜா + "||" + Ravi Teja is expecting huge success

மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கும் ரவிதேஜா

மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கும் ரவிதேஜா
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவிதேஜா. மற்ற நடிகர்களை விடவும், திரையில் ஒருபடி கூடுதலாக எனர்ஜியுடன் செயல்பட்டு ரசிகர்களை தன் பக்கம் கவரும் வித்தை தெரிந்தவர்.
 தன்னுடைய கதாபாத்திரத்தை நகைச்சுவை கலந்து செய்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்ப்பது இவரது தந்திரம்.

ரவிதேஜா, சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்த முதல் படம் ‘கார்த்தவ்யம்’. இந்தப் படம் 1990-ம் ஆண்டு வெளியானது. விஜயசாந்தி நடிப்பில் உருவான இந்தப் படம், தமிழில் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. பின்னர் ஒன்றிரண்டு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த ரவிதேஜா, விளம்பரப் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றத் தொடங்கினார்.


அப்படித் தான் இயக்குனர் கிருஷ்ண வம்சியிடம் இயக்கிய ‘நின்னே பெல்லாடுதா’ என்ற படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார். நாகர்ஜூனா, தபு நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், ரவிதேஜாவுக்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஒதுக்கியிருந்தார் கிருஷ்ண வம்சி. இந்தப் படத்திற்கு அடுத்ததாக தான் இயக்கிய ‘சிந்தூரம்’ என்ற படத்தில் ரவிதேஜாவை கதாநாயகனாக நடிக்க வைத்தார். இந்தப் படம் தேசிய விருதைப் பெற்றப் படமாகும். இயக்குனர் கிருஷ்ண வம்சி வேறு யாரும் அல்ல.. நடிகை ரம்யாகிருஷ்ணனின் கணவர் தான்.

‘சிந்தூரம்’ படத்திற்குப் பிறகும் கூட ரவிதேஜாவுக்கு சரியான படங்கள் அமையவில்லை. மீண்டும் சிறுசிறு வேடங்களிலேயே நடித்தாலும் இடையிடையே, ‘நீ கோசம்’, ‘இட்லு ஷிரவானி சப்பிரமணியம்’ ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் வாய்ப்பு கிடைத்தது. இவற்றில் ‘நீ கோசம்’ படம் தான், தெலுங்கில் பல கமர்ஷியல் மெகா ஹிட் படங்களைக் கொடுத்த ஸ்ரீனு வைட்லா இயக்கிய முதல் படமாகும்.

இந்த நிலையில் 2002-ம் ஆண்டு தெலுங்கின் முன்னணி இயக்குனர் பூரிஜெகன்னாத் இயக்கத்தில் ‘இடியட்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு ரவிதேஜாவுக்கு கிடைத்தது. மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தப் படம், ரவிதேஜாவுக்கு நல்லதொரு முகவரியைக் கொடுத்தது. இந்தப் படத்தைத் தான், தமிழில் ‘தம்’ என்ற பெயரில் ரீமேக் செய்து சிம்பு நடித்தார்.

‘இடியட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரவிதேஜாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. அதில் ஒன்றிரண்டு படங்கள் சறுக்கினாலும், பூரிஜெகன்னாத் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி’, 2008-ம் ஆண்டு வெளியான ‘நேனிந்தே’, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான ‘விக்ரமார்க்குடு’, சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் 2008-ம் ஆண்டு வெளியான ‘கிக்’ ஆகிய படங்கள் அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றன. இந்த வெற்றிகளின் காரணமாக தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரமாக உருவெடுத்தார் ரவிதேஜா. இந்தப் படங்களில் ‘நேனிந்தே’ படம், ரவிதேஜாவின் நடிப்புத் திறமையையும் பறைசாற்றிய படமாக பார்க்கப்பட்டது. இந்தப் படத்தில், சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ஒருவர், ஒரு படத்தை இயக்குவதற்கு ஏற்படும் தடைகளை கமர்ஷியலாக சொல்லியிருந்தார், இயக்குனர் பூரிஜெகன்னாத்.

அதன்பிறகும் பல வெற்றிப்படங்களில் ரவிதேஜா நடித்திருந்தாலும், கடந்த 2015-ம் ஆண்டு முதல் அவருக்கு ஒரு படம் கூட எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 2015-ம் ஆண்டு வெளியான ‘கிக்-2’, ‘பெங்கால் டைகர்’, 2017-ம் ஆண்டு வெளியான ‘ராஜா தி கிரேட்’, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘டச் செய்சி சூடு’, ‘நெல டிக்கெட்’ ஆகிய படங்கள் சராசரி வெற்றியைக் கூட பெறாமல் போனது, ரவிதேஜாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

இதனால் கட்டாயமாக ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டிய நிலையில் ரவிதேஜா இருக்கிறார். அந்த எதிர்பார்ப்பை அடுத்த மாதம் வெளியாக உள்ள ‘அமர் அக்பர் அந்தோணி’ திரைப்படம் நிறைவேற்றும் என்று ரவிதேஜா நம்புகிறார். இந்தப் படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார். ‘நீ கோசம்’, ‘வெங்கி’, ‘துபாய் சீனு’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ஸ்ரீனு வைட்லாவும், ரவிதேஜாவும் இணைந்திருக்கும் 4-வது படம் இதுவாகும்.

தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் என்று பெயர் பெற்ற ஸ்ரீனு வைட்லாவும், தற்போது ரவிதேஜாவின் நிலையில்தான் இருக்கிறார். இவரும் கட்டாயம் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாக் களான கோனா வெங்கட், கோபி மோகன் ஆகிய இருவரும், ஸ்ரீனு வைட்லாவுடன் ‘வெங்கி’ படத்தின் மூலம் இணைந்தனர். இந்தக் கூட்டணி தொடர்ச்சியாக ‘அந்தரி வாடு’, ‘தீ’, ‘துபாய் சீனு’, ‘ரெடி’, ‘கிங்’, ‘நமோ வெங்கடேசா’, ‘தூக் குடு’, ‘பாட்சா’ ஆகிய படங்களும் இணைந்து பணியாற் றியது. இந்தக் கூட்டணியில் உரு வான அனைத்து படங்களும் கமர்ஷியல் ரீதியாக அதிரிபு திரி வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்த நிலையில் ‘தூக்குடு’ படத்தின் வெற்றிக்கு கோனா வெங்கட் மற்றும் கோபிமோகன் எழுதிய வசனம் காரணமா? அல்லது ஸ்ரீனு வைட்லாவின் இயக்கம் காரணமா? என்ற சர்ச்சை எழுந்தது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டதில் கூட்டணி பிளவு ஏற்பட்டது. அதன்பிறகு ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் உருவான படம் ‘ஆகடு’. பல ஆண்டுகளுக்குப் பிறகு கேனா வெங்கட்டும், கோபிமோகனும் இல்லாமல் பணியாற்றியிருந்தார் ஸ்ரீனு வைட்லா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான அந்தப் படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதனால் ஸ்ரீனு வைட்லா படங்களின் வெற்றிக்கு கோனா வெங்கட், கோபிமோகன் ‘பஞ்ச்’ வசனம் தான் காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பதிவாகி விட்டது.

அதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடிப்பில் ‘புரூஸ் லீ’ என்ற படத்தை இயக்கினார், ஸ்ரீனு வைட்லா. ‘கோனா வெங்கட்டும், கோபி மோகனும் இருந்தால் இந்தப் படத்தை எடுக்கலாம்’ என்று சிரஞ்சீவி தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதால், வேறு வழியின்றி அவர்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றினார், ஸ்ரீனு வைட்லா. ஆனால் அந்தப் படமும் மிகப்பெரிய தோல்வி படமானது. அந்தத் தோல்விக்கு காரணமாக, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் மாற்றி, மாற்றி கையைக் காட்டிக்கொண்டனர். அதன்பிறகு ஸ்ரீனு வைட்லா, கோனா வெங்கட்டை கழட்டி விட்டு விட்டு, கோபி மோகனை மட்டும் சேர்த்துக் கொண்டு, ‘மிஸ்டர்’ என்ற படத்தை இயக்கினார். 2017-ம் ஆண்டு வெளியான அந்தப் படமும் அட்டர் பிளாப்.

தொடர் தோல்விகளின் காரணமாக, ‘அமர் அக்பர் அந்தோணி’ படத்தை மிகவும் நம்பிக்கொண்டிருக்கிறார், ஸ்ரீனு வைட்லா. இந்தப் படத்தில் கோனா வெங்கட், கோபி மோகன் இருவரும் இல்லை. எனவே படம் வெற்றி பெற்று விட்டால், இதுவரை தன் படங்கள் அனைத்தும் பெற்ற வெற்றிக்கு தான் ஒருவனே காரணம் என்பதை உரக்க முழங்கி விடலாம் என்ற எண்ணத்தில் ஓய்வின்றி, அதே நேரத்தில் மிகவும் ஜாக்கிரதையாக படத்தை இயக்கி வருகிறார்.

ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் தான் நடித்த மூன்று படங்களும் வெற்றிப் படம் என்பதால், தற்போது உருவாகி வரும் ‘அமர் அக்பர் அந்தோணி’ படமும் வெற்றிப்படமாக அமைவதுடன், தொடர் தோல்வியில் இருந்து தன்னை மீட்டெடுக்கும் என்று ரவிதேஜாவும் நம்பிக்கையோடு இருக்கிறார்.

எது எப்படியோ, மீண்டும் தங்களை நிரூபிப்பதற்கு இருவருக்கும் மிகப்பெரிய வெற்றி ஒன்றை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.