நடிகர் நாசர் வெளியிட்ட டிராபிக் ஒழுங்கு வீடியோ


நடிகர் நாசர் வெளியிட்ட டிராபிக் ஒழுங்கு வீடியோ
x
தினத்தந்தி 15 Sep 2018 10:15 PM GMT (Updated: 15 Sep 2018 5:28 PM GMT)

சென்னையில், நடிகர் நாசர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ நம்மை வெட்கி தலைகுனிய வைக்கிறது.

நம்ம ஊர் மக்களைப் பொருத்தவரை ‘சிக்னலில்’ நிற்கும்போது சாலை விதிமுறைகளை பின்பற்றுவது என்பது இரண்டு வகைப்படும்.

அதாவது, போக்குவரத்து காவல் துறையினர் இருந்தால், பச்சை விளக்கு விழும் வரை பொறுமையாக காத்திருப்பவர்கள், ஒரு வகையினர். ஹெல்மெட், சீட் பெல்ட் எல்லாம் போட்டுக்கொள்வோம். போக்குவரத்து காவல்துறையினர் இல்லை என்றால், இந்த வி‌ஷயங்கள் அத்தனையும் தலைகீழே நடக்கும். சிவப்பு விளக்கு எரிந்தால் கூட எப்படி புகுந்து விரைவாக போகலாம் என யோசிப்போம். ஹெல்மெட் டேங்க் மேல அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும். சீட்பெல்ட் கேட்கவே வேண்டாம். போக்குவரத்து விதிகளை மதிப்பவர்கள், இன்னொரு வகையினர். 

இது தொடர்பாக நடிகர் நாசர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ மிக முக்கியமானது. அந்த வீடியோவில், சிக்னலில் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகூட கிடையாது. ஆனால், சிவப்பு விளக்கு எரியும் வரை சாலையில் நிற்கும் வாகனங்கள் அனைத்தும் பசை போட்டு ஒட்டியது போல் நிற்கின்றன. பச்சை விளக்கு எரியத் தொடங்கிய பிறகே, வாகனங்கள் நகரத் தொடங்குகின்றன. எறும்பைப் போல ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் வரிசையாகச் செல்கின்றன.

அந்த வீடியோவில் நடக்கும் வி‌ஷயங்களை தன்னுடைய கணீர் குரலில் விவரிக்கிறார், நாசர். அப்போது அவர், சிங்கபூரில் தங்கியிருக்கும் இருபதாவது மாடியிலிருந்து அந்த வீடியோவை எடுத்ததாகச் சொல்கிறார். மேலும், நம் நாட்டிலும் அரசு இருக்கிறது, சட்டம் இருக்கிறது, மத நம்பிக்கை இருக்கிறது, கல்வி இருக்கிறது இவை எல்லாமே இங்கும் இருக்கின்றன. ஆனால் இதை நாம் ஏன் நடைமுறைப்படுத்துவதில்லை? தயவுசெய்து இதற்கான தடைகளை நாமே கண்டறிந்து பட்டியலிட்டு தூக்கியெறிவோம், தூக்கிலிடுவோம், தீயிட்டுக் கொளுத்துவோம், நீங்களும், நானும்தான் ஒரு வளமான தேசத்தை உருவாக்க முடியும், மாநிலத்தை முன்மாதிரியாக்க முடியும். நன்றி என முடிக்கிறார்.

இந்த வீடியோவை நாசரின் மனைவியும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு உறுப்பினருமான கமீலா நாசர் சமூகவலை தளங்களில் பகிர்ந்துள்ளார். 

Next Story