பி.வாசு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் உயிர்பெற்று வரும் டிஜிட்டல் படம்


பி.வாசு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் உயிர்பெற்று வரும் டிஜிட்டல் படம்
x
தினத்தந்தி 18 Sep 2018 10:30 PM GMT (Updated: 18 Sep 2018 5:32 PM GMT)

டிஜிட்டலில் எம்.ஜி.ஆர். முகத்தை உருவாக்கி புதிய படம் தயாராகிறது. இந்த படத்தில் 1960 காலகட்டத்தில் இருந்த எம்.ஜி.ஆர். முகத்தை ‘என் பேஸ்’ என்ற புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கி அவருடைய தோற்றம் உள்ள நடிகர் முகத்தில் பொருத்தி எம்.ஜி.ஆரைபோல் உயிரோட்டமாக உருமாற்றம் செய்து திரையில் கொண்டு வருகிறார்கள்.

படத்தில் மற்ற நடிகர்– நடிகைகள் அப்படியே நடிப்பார்கள். எம்.ஜி.ஆர். முகம் மட்டும் டிஜிட்டலில் இடம்பெறும். மலேசியாவின் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனமும், முன்னணி சர்வதேச ஹாலிவுட் வி.எப்.எக்ஸ் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து இந்த படத்தை உருவாக்குகிறார்கள். எம்.ஜி.ஆர். கதாபாத்திரம் ஹாலிவுட் படங்களைப்போல சூப்பர் ஹீரோவாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

உலகம் பல இன்னல்களில் சிக்கி அழிவை நோக்கி போகிறது. அதில் இருந்து  மக்களை  காப்பாற்ற எம்.ஜி.ஆர். உயிர் பெற்று வருவது போன்று திரைக்கதை அமைக்கப் பட்டு உள்ளது. இந்த படத்தை பி.வாசு டைரக்டு செய்கிறார். இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

முப்பரிமாணத்தில் இந்த படம் தயாராகிறது. எம்.ஜி.ஆரின் கண் அசைவுகள், சிரிப்பு, உள்ளிட்ட உணர்வுகள் டிஜிட்டலில் நேர்த்தியாக வடிவமைக்கப்படும் என்றும், இது உலகில் முதல் முயற்சி என்றும் பட தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள டத்தோ மார்கழி பழனி, விமலநாதன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்றும் அவர்கள் கூறினார்கள். 

Next Story