சினிமா செய்திகள்

நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது + "||" + Actor Vivek effort 100 Years of Silenced The oldest tree began

நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது

நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது
நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டுள்ளது.
சென்னை,

மறைந்த அப்துல் கலாம் அறிவுரையின்பேரில் நடிகர் விவேக் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். தற்போது அவரது முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் உயிர் பெற்றுள்ளது.


இதுதொடர்பாக நடிகர் விவேக் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராம மந்தையில் 100 ஆண்டுகள் பழமையான கடம்பம் மரம் இருக்கிறது. அந்த மரம் திடீரென்று பட்டு போய்விட்டது.

அந்த ஊர் மக்கள் இந்த தகவலை எனது சகோதரி டாக்டர் விஜயலட்சுமி மூலம் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். மரத்தின் படத்தையும் அனுப்பி வைத்தனர்.

எனக்கு மரக்கன்றுகளை நட தெரியும், மரத்துக்கு வைத்தியம் பார்க்க தெரியாது. எனவே நான் என்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘மரத்தின் படத்துடன், ‘இதை துளிர்விட என்ன செய்வது? என்று பதிவிட்டிருந்தேன்.

என்னுடைய ‘டுவிட்டர்’ கணக்கை பின் தொடரும் விவசாய நண்பர் லால் பகதூர் இந்த பதிவை படித்துள்ளார். உடனடியாக அவர் தனது நண்பர்கள் குழுவுடன் பாப்பாபட்டி புறப்பட்டார். அவர்கள் புவியியல் முறைப்படி மாட்டு சாணம், வேப்ப எண்ணெய், மஞ்சள் ஆகியவற்றை குழைத்து மரத்தில் பூசியும், வைக்கோலை திரி, திரியாக வடம் போன்று சுற்றியும் வைத்தியம் பார்த்துள்ளனர்.

3 வாரம் கழித்து மரம் துளிர்விடவில்லை என்றால், அதற்கு உயிர் இல்லை என்று கூறி இருந்தனர். ஆனால் 3 வாரம் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது 3 மாதம் கழித்து மரம் துளிர்விட்டுள்ளது.

பட்டுப்போன மரத்தில் பச்சை பசேல் என இலைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பட்டுப்போன பழமையான மரம் அதிசயமாக மீண்டும் உயிர் பெற்றிருப்பது, பாப்பாபட்டி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கான முயற்சியில் இறங்கிய நடிகர் விவேக், அவரது சகோதரி டாக்டர் விஜயலட்சுமி, லால் பகதூர் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.