நடிகை மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திரளான நடிகைகள் பங்கேற்பு


நடிகை மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திரளான நடிகைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Sep 2018 11:16 AM GMT (Updated: 19 Sep 2018 11:16 AM GMT)

மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்துள்ள ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் உள்பட ஏராளமான நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். #MumtazArmy

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மமதி, அனந்த் வைத்தியநாதன், மும்தாஜ், பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி, ரித்விகா உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் 80 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக தங்கியிருந்த மும்தாஜ் கடந்த வாரம் மக்களின் வாக்குகள் மூலம் வெளியேற்றப்பட்டார்.

ஆனால், அவர் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரது செயல்பாடுகள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தன. இதன் வெளிப்பாடாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் `மும்தாஜ் ஆர்மி' என்ற பக்கத்தை தொடங்கினர்.

இந்த சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் நேரடியாக பார்த்துக் கொண்டதில்லை என்று கூறுகிறார் மும்தாஜ் ஆர்மியின் ஒருங்கிணைப்பாளர் வினோத். மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் சமூக வலைதளங்களின் வாயிலாக ரசிகர்களைச் சந்திக்கும் ஏற்பாட்டையும் இவர்கள் செய்துள்ளனர்.


இதுகுறித்து வினோத்திடம் பேசிய போது, ``கடந்த முறை ஓவியாவுக்காக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட்டோம். ஆனால், அது முடியாமல் போனது. இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் சக போட்டியாளர்களிடம் காட்டிய அன்பு, உண்மைத்தன்மை ஆகியவை எங்களுக்கு பிடித்திருந்தது.

அதனால் வாட்ஸ் அப், டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் குழுக்களை ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் இருக்கும் கே.பி.ஆர். மஹாலில் வரும் 22-ம் தேதி ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்வில் மும்தாஜ், வைஷ்ணவி, ஆர்த்தி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். நிகழ்ச்சியில் சுமார் 2000-க்கும் அதிகமான ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.

இதுகுறித்து மும்தாஜ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ரசிகர்களை சந்திக்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ரசிகர்கள் அனைவரையும் அவர் வரவேற்றுள்ளார்.

Next Story