சீக்கியர்களை புண்படுத்தியதாக அபிஷேக் பச்சன்-டாப்சி மீது புகார்


சீக்கியர்களை புண்படுத்தியதாக அபிஷேக்  பச்சன்-டாப்சி  மீது  புகார்
x
தினத்தந்தி 19 Sep 2018 10:45 PM GMT (Updated: 19 Sep 2018 6:12 PM GMT)

அபிஷேக் பச்சன், டாப்சி நடித்து வெளிவந்துள்ள ‘மன்மர்ஷியான்’ இந்தி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் தோல்வி அடைந்துள்ளது.

வசூல் ரூ.18 கோடியை தாண்டவில்லை என்கின்றனர். இந்த நிலையில் படத்தில் சீக்கியர்களை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அபிஷேக் பச்சன் சீக்கியர் வேடத்தில் நடித்து இருக்கிறார். அபிஷேக் பச்சனும், டாப்சியும் தோன்றும் சில காட்சிகள் சீக்கியர்களுக்கு எதிராக உள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அபிஷேக்பச்சன் சிகரெட் பிடிப்பது போன்றும் தலையில் உள்ள டர்பனை கழற்றுவது போன்றும் காட்சி இருப்பதாக கண்டித்து உள்ளனர்.

இதுகுறித்து அம்பாலா சீக்கிய சங்கத்தினர் தலைமை அமைப்பான சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியிடம் புகார் அளித்துள்ளனர். ‘மன்மர்ஷியான்’ படம் திரையிட்டுள்ள தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சீக்கியர் அமைப்புகளின் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘படத்தில் சீக்கியர் சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் காட்சிகளை வைத்துள்ளனர். இது சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. திரைப்படங்களில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் நடப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பல படங்கள் இதுபோல் வந்துள்ளன. மன்மர்ஷியான் படத்தை தியேட்டர்களில் திரையிடுவதை நிறுத்தும்படி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அபிஷேக் பச்சன், டாப்சி ஆகியோர் மீது போலீசில் புகார் செய்யப்படும். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்படும்’’ என்றனர்.

Next Story