பெரிய நடிகர்கள் படங்களை திரையிட கட்டுப்பாடு வருமா? தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை


பெரிய நடிகர்கள் படங்களை திரையிட கட்டுப்பாடு வருமா? தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை
x
தினத்தந்தி 20 Sep 2018 11:15 PM GMT (Updated: 20 Sep 2018 7:17 PM GMT)

தமிழ் திரைப்படத்துறையில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதில் ஒழுங்கற்ற நிலை இருப்பதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன.

 பெரிய படங்களுக்கு மட்டுமே தியேட்டர்கள் ஒதுக்கப்படுகிறது என்றும் சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை என்றும் இதனால் சிறுபட்ஜெட் படங்கள் முடங்கி கிடக்கின்றன என்றும் சிறுபட தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கம் அவசரமாக கூடி அதிரடி நடவடிக்கை எடுத்தது. புதிய படங்கள் வெளியிடும் தேதிகளை தயாரிப்பாளர் சங்கமே முடிவு செய்யும் என்றும் தணிக்கையான படங்கள் பற்றிய விவரங்களை சங்கத்தில் பதிவு செய்து தேதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

அதன்படியே புதிய படங்கள் இப்போது வெளியாகி வருகின்றன. இந்த நடைமுறையிலும் சில குழப்பங்கள் இருப்பதாகவும் ஓரிரு நாட்கள் இடைவெளியில் பெரிய படங்கள் திரைக்கு வருவதால் வசூல் பாதிக்கிறது என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் அவசர கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் சீமராஜா, யுடர்ன் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. இப்போது சாமி–2 இன்னும் சில நாட்கள் கழித்து ‘செக்கச்சிவந்த வானம்’ படங்கள் திரைக்கு வருகின்றன. ஒரே மாதத்தில் சில நாட்கள் இடைவெளியில் பெரிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருவதால் ரசிகர்கள் அனைத்து படங்களையும் பார்க்க மாட்டார்கள்.

எனவே ஒரு பெரிய படத்துக்கும் இன்னொரு பெரிய படத்துக்கும் இரண்டு வாரம் இடைவெளி இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பெரிய நடிகர்கள் படங்களை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் விதித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் புதிய அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story